அமெரிக்காவில் நடக்கும் மிகப் பெரிய கணினித் துறை கண்காட்சி சி.ஈ.எஸ் (CES). இது ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெறும். உலகில் உள்ள பல ஆயிரம் மின்னணு, கணினி, செல்பேசி நிறுவனங்கள் இதில் பங்குபெறும். ஒவ்வொரு நிறுவனத்தின் பொறியாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களின் திறமையைக் காண்பிக்கும் இடம் இந்தக் கண்காட்சி.

இதில் காட்சிப்படுத்தப்படும் பல கருவிகள் சந்தைக்கு வராமலே போகும்; வருங்காலத்தில் இப்படியும் வரலாம் என்பதைக் காட்டுவதே இதன் நோக்கம். இதில் அறிமுகம் செய்வதே பெருமையாகக் கருதப்படுகிறது.

இந்த ஆண்டு வந்துள்ள ஒரு படைப்பு, எச்.பி (HP) நிறுவனத்தின் புது வகையான கணினி. மன்னிக்கவும், புதுமையான விசைப்பலகை (Keyboard). இதன் பெயர்: எலைட்போர்டு ஜி1ஏ (HP EliteBoard G1a).

சி.ஈ.எஸ் (CES) கண்காட்சியில் இருந்து இந்தப் படத்தை எடுத்தனுப்பிய என் சகோதரர் திரு விஜய் ராகவனுக்கு நன்றி
சி.ஈ.எஸ் (CES) கண்காட்சியில் இருந்து இந்தப் படத்தை எடுத்தனுப்பிய என் சகோதரர் திரு விஜய் ராகவனுக்கு நன்றி

இந்த விசைப்பலகையின் சிறப்பு, இதோடு இணைக்கத் தனியாக மேசைக் கணினியோ (Desktop), மடிக்கணியோ (Laptop) தேவையில்லை. ஏனென்றால், இந்த விசைப்பலகையின் உள்ளேயே ஒரு சக்திவாய்ந்த கணினி இருக்கிறது. ஒரு கேபிளை உங்கள் கணினித் திரையோடு (Monitor) இணைத்துவிட்டால் போதும்; அதிலிருந்து மின்சாரத்தை எடுத்து இந்தக் கணினி வேலை செய்யும். விசைப்பலகையோடு ஒரு சுட்டியைக் (Mouse) கூட புளூடூத் (Bluetooth) முறையில் இணைத்துப் பயன்படுத்தலாம்.

சின்னஞ்சிறு கணினி என்று இதைச் சாதாரணமாக நினைக்க வேண்டாம். இதில் மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளம் இருக்கிறது. நீங்கள் ஆபிஸ், வேர்டு, எக்ஸ்சேல் என எல்லாவகையான செயலிகளையும் பயன்படுத்தலாம். இதில் ஓரளவு திறன் வாய்ந்த ஏ.எம்.டீ (AMD) மையச்செயலகம் (CPU) மற்றும் சேமிப்பகம் இருக்கிறது. இதில் மைக்ரோசாப்ட் கோபைலட்-பிசி என்கிற செய்யறிவுக்குத் (AI) தேவையான திறனும் இருக்கிறது.

இதை உங்கள் பையில் எடுத்துச் சென்றால், எங்கே வேண்டுமானாலும் ஒரு திரை கிடைத்தால் அதில் இணைத்து உங்கள் வேலையைச் செய்யலாம். கணினித் திரை இல்லையென்றால் வீட்டில் இருக்கும் புதிய தொலைக்காட்சிப் பெட்டி (TV) போதும். உங்கள் செயலிகளும், தரவுகளும், கடவுச்சொற்களும் உங்களுடனேயே அந்த விசைப்பலகையில் பாதுகாப்பாக இருக்கும்.

என்னை மிகவும் கவர்ந்த கணினி இது. மடிக்கணியோடு ஒப்பிடும்போது இது விலை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் எடையும் மடிக்கணியை விட லேசாக இருக்கும். இதன் விலை என்னவென்று எச்.பி இன்னும் அறிவிக்கவில்லை.

HP EliteBoard G1a - CES 2026
HP EliteBoard G1a – CES 2026

Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading