உலகம் அழியப்போகிறதா? பிரெப்பர்களுக்கான இந்தக் கணினி தேவையா?

இன்றைக்கு ஒரு வித்தியாசமான கணினியைப் பற்றிய விளம்பரத்தைப் பார்த்தேன். அது ஒருவிதமான மின் கலைக்களஞ்சியம் என்று சொல்லலாம். அது என்ன கருவி, என்ன செய்யும், அதன் பயன் என்னவென்று பார்ப்பதற்கு முன்னர் பிரேப்பர்ஸ் (Preppers), சார்வைவார்ஸ் (Survivors) என்பவர்கள் யார் என்று தெரிந்துகொள்ளலாம்.

அமெரிக்காவில் சிலர் உலகம் சீர்க்குலைந்துவிட்டது, அரசாங்கங்கள் செயலிழந்து வருகின்றன என்று நினைக்கிறார்கள். திடீரென நமக்குத் தேவையானது கிடைக்காது, வாழவே பாதுகாப்பிருக்காது என்கிற நிலை வரும். அத்தகைய நிலையை எதிர்கொள்ள நமக்கும் நம் குடும்பத்திற்கும் தேவையானவற்றை இன்றே நாம் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். உலகத்தில் மற்ற எல்லோரிடமிருந்து நமக்குத் தொடர்பு அறுந்தாலும் ஆண்டுகணக்கில் நாம் வாழ வேண்டியதைப் பதுக்க வேண்டும் என்பது இவர்களது நம்பிக்கை. இவர்களை பிரேப்பர் (Preppers) என்று அழைக்கிறார்கள், அதாவது எதற்கும் “தயாராக” இருப்பவர்கள்.

இவர்கள் சொல்லும் சீர்குலைவு என்பது அணு ஆயுதங்களால் வரலாம், இயற்கைப்பேரழிவாக இருக்கலாம், கோவிட்-19 போன்ற பெருந்தொற்றாக இருக்கலாம், சமூகப் பேரழிவாக இருக்கலாம், அல்லது பெரும் உலகப் போராக இருக்கலாம். இப்படி எது வந்தாலும் நாம் தயாராக இருக்க வேண்டும்; அதற்காக இவர்கள் பெரும்பணம் செலவு செய்து வருவார்கள். பாதுகாப்பான அறைகள், பாதுகாப்பான வீடு, பெருமளவில் உணவுப் பொருட்கள், மருந்துகள், ஆயுதங்களை இவர்கள் சேமித்து வைப்பார்கள். இவர்களை மையமாக வைத்துப் பல ஆங்கிலத் திரைப்படங்கள் வந்திருக்கின்றன. குறிப்பாக நான் பார்த்த மூன்றைப் பற்றி இங்கே சொல்கிறேன்; இந்த மூன்றைப் பற்றியும் என் வலைத்தளத்தில் விமர்சனங்கள் ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.

🎞️ Blast from the Past (1999),

🎞️ The Tomorrow Man (2019),

🎞️ Leave the World Behind (2023).

இவர்களைப் போன்றவர்களே சார்வைவார் (Survivors) என்பவர்களும். இவர்கள் பொருட்களைச் சேமிப்பதோடு இல்லாமல், தாங்களும் பல பயிற்சிகளை எடுத்துக்கொண்டு எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் நிலையில் இருப்பார்கள். உதாரணமாக, இவர்கள் இராணுவப் பயிற்சிகளைப் போலவே எந்தச் சூழ்நிலையிலும் உயிர் பிழைக்க, எதையும் உண்ண, அடுத்தவர்களோடு சண்டையிட, மிருகங்களை வேட்டையாட, தங்களைப் பாதுகாக்கப் பல பயிற்சிகளை மேற்கொண்டு வருவார்கள். பொதுவாக இவர்கள் நல்ல தைரியசாலிகளாகவும் இருப்பார்கள்.

இந்த அறிமுகம் போதும், இப்போது விளம்பரத்திற்குப் போவோம். விளம்பரத்தில் வந்தது ஒரு சீட்டுக்கட்டு அளவு இருக்கும் கையளவு கணினி. கணினிக்குத் தேவையான சிபியு (மையச்செயலகம்), மெமரி (நினைவகம்), டிரைவ் (சேமிப்பகம்) என எல்லாமே இதனுள் இருக்கிறது. அதோடு முக்கியமாக உலகத்தின் பொது அறிவுக்களஞ்சியமான விக்கிப்பீடியா , உலக வரைபடங்கள், 30,000 முக்கியமான யுட்யூப் காணொலிகள், 60,000 முக்கியமான நூல்கள், அமெரிக்க நாட்டுத் தேசிய சுகாதார நிறுவனத்தின் அவசரக்கால மருத்துவ உதவிக்கான கட்டுரைகள், கான்-அகாடமி கல்வி நிறுவனத்தின் கட்டுரைகள் எனப் பல்லாயிரம் தரவுகளும் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தையுமே நமது செல்பேசியிலிருந்தோ, அல்லது எந்தவித கணினியிலிருந்தோ கண்டுகொள்ளலாம். இணைய வசதியோ, செல்பேசித் தொடர்போ, வீட்டில் மின்சார வசதியோ எதுவுமே இல்லையென்றாலும் இந்த கையளவு கணினியை பேட்டரியில் இயக்கிப் படிக்கலாம். எல்லாமே அந்தச் சின்னச்சிறு கணினியில் இருப்பதால் யாராலும் இதைத் தடை செய்ய முடியாது, மாற்ற முடியாது, அழிக்க முடியாது. இதற்கு எந்தவிதக் கட்டணமோ சந்தாவோ தேவையில்லை. பேரழிவு காலத்தில் உங்கள் சட்டைப்பையில் இதுவும் சில பேட்டரிகளும் இருந்தாலே போதும்.

Preppers Pocket Computer
Preppers Pocket Computer (For illustration purpose only)

குறிப்பு: நான் பார்த்த விளம்பரத்தில் வந்த கருவியின் விலை ரூபாய் இருபதாயிரம். இதே விஷயத்தைச் செய்யப் பல மாற்று வழிகள் இருப்பதாலும், இது வீண் செலவு. இந்த நிறுவனத்தின் நம்பத்தன்மையைப்பற்றி எதுவுமே எனக்குத் தெரியாது என்பதாலும், இதெல்லாம் தேவையா என்கிற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை என்பதாலும் அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் பெயரை நான் இங்கே பகிரவில்லை. நன்றி.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading