சென்னையில் மெரினா கடற்கரையைத் தாண்டித் திறந்தவெளியில் குடும்பத்தோடு நேரத்தைக் கழிக்க வெகு சில இடங்களே இருந்தன. கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் புதுப் பூங்காக்களும், பொது இடங்களும் வருவது மகிழ்ச்சி. அந்த வகையில் செம்மொழிப் பூங்கா, சேத்துப்பட்டு பசுமைப் பூங்கா, வள்ளுவர் கோட்டம், சென்ட்ரல் மெட்ரோ சதுக்கம் போன்றவற்றை குறிப்பிட்டுச் சொல்லலாம். இவற்றோடு பலரும் புகழ்வது கத்திப்பாரா நகர்ப்புரச் சதுக்கத்தை.

சென்ற ஞாயிறு சேப்பியன் சங்கம் நண்பர்களைச் சந்திக்கக் கத்திப்பாரா நகர்ப்புரச் சதுக்கத்திற்கு (Kathipara Urban Square) சென்றிருந்தேன். பல நூறு முறை இந்த இடத்தைக் கடந்திருக்கிறேன், இருந்தும் நான் உள்ளே போனது இதுவே முதல் முறை. சாலையில் இருந்து பார்த்தால் தெரியவில்லை, ஆனால் இது ஒரு பெரிய இடம். கட்டணம் செலுத்திப் கார்களை (Cars) நிறுத்த இடம், அந்தந்தக் கடைகளுக்கு அருகில் நிறுத்தவும் வசதி இருக்கிறது. இங்கே ஸ்டார்பக்ஸ், கே.எஃப்.சி தொடங்கி, மெட்ராஸ் காபி ஹவுஸ் வரை பல வகையான உணவகங்கள் இருக்கின்றன. கைவினைப் பொருட்களை விற்கும் கடைகளும் இருந்தன. சிறுவர் விளையாடவும் இடமிருந்தது.

நாங்கள் சென்ற ஞாயிறு மாலை நேரத்தில் ஓர் இசைக் குழு பாடிக் கொண்டிருந்தனர். நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தனர். இந்த அளவில் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாகப் (அல்லது காதலன், காதலியோடு) பொறுமையாக அமர்ந்து ரசிப்பதைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது.

இந்தச் சதுக்கம் நல்லபடி பராமரிக்கப்பட்டு வருவதற்குச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வாழ்த்துகள், நன்றி. அடுத்த முறை இந்தச் சதுக்கத்திற்குச் சென்று பாருங்கள். இங்கே செல்ல எளிதான வழி: சென்னை மெட்ரோவில் ஆலந்தூர் சந்திப்பில் இறங்கி ஐந்து நிமிடம் நடந்து வரலாம்; அல்லது கிண்டி மெட்ரோ/புறநகர் இரயில் நிலையத்தில் இறங்கி ஷேர் ஆட்டோவில் வரலாம். இருசக்கர வாகனங்கள் நிறுத்தவும் இடமிருக்கிறது.

Kathipara Urban Square, Chennai
Kathipara Urban Square, Chennai
Live music performance
Live music performance
Audience enjoying the music
Audience enjoying the music
Starbucks Kathipara Urban Square
Starbucks Kathipara Urban Square
KFC Kathipara Urban Square
KFC Kathipara Urban Square
அந்தந்தக் கடைகளுக்கு அருகில் கார்கள் நிறுத்த வசதி
அந்தந்தக் கடைகளுக்கு அருகில் கார்கள் நிறுத்த வசதி
மெட்ராஸ் காபி ஹவுஸ், கத்திப்பாரா நகர்ப்புரச் சதுக்கம்
மெட்ராஸ் காபி ஹவுஸ், கத்திப்பாரா நகர்ப்புரச் சதுக்கம்
Third Wave Coffee, Kathipara
Third Wave Coffee, Kathipara
Levista, Amaravathi, IBACO eateries in Kathipara Urban Square, Chennai
Levista, Amaravathi, IBACO eateries in Kathipara Urban Square, Chennai
Venkatarangan walking in the subway between Ekaduthangal and Guindy beneath the Kathipara flyover
Venkatarangan walking in the subway between Ekaduthangal and Guindy beneath the Kathipara flyover

குறிப்பு 1: சென்னையின் பல பேட்டைகளில் இருக்கும் மாநகராட்சிப் பூங்காக்களும் ஓரளவு நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருவது மகிழ்ச்சியே. சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை மேம்பாடு என்றால் கட்டடங்கள் கட்டுவதும், சிமெண்ட் தரை போடுவதும், இரும்புக் கம்பியில் கைப்பிடிகள் அமைப்பதும் மட்டுமே. எந்தக் கட்சி ஆட்சியென்றாலும் நம்முடைய அதிகாரிகளுக்கு மரங்கள் பாதுகாப்பில் கவனம் இருப்பதில்லை, கழிப்பறைகளைத் திறப்பதில்லை என்கிற குறைகளை இந்தப் பதிவில் பேச வேண்டாம். இந்த வரிசையில் மயிலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்கா, தி.நகர் ஜீவா பூங்கா, தி.நகர் நடேசன் பூங்கா, சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலை அம்மா பூங்கா, கே.கே.நகர் சிவன் பூங்கா, அண்ணா நகர் டவர் பார்க், போன்ற பலவும் வரும்.

குறிப்பு 2: கலைஞர் நூற்றாண்டுப் பூங்கா மற்றும் தொல்காப்பியர் பூங்காக்கள் கட்டணம் செலுத்திச் செல்ல வேண்டியவை. விரைவில் கிண்டி ரேஸ் கோர்ஸ் இருந்த இடத்தில் பெரிய இயற்கைப் பூங்கா வரப் போகிறது; அது வரும்போது வரவேற்போம். பாண்டி பஜார் நடைபாதையிலும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன, ஆனால் அங்கே அமர்ந்து பார்க்க இடம் கிடையாது.

குறிப்பு 3: தற்போது தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை அதிகாரியாக இருக்கும் சுப்ரியா சாகு அவர்களும் அவரின் துறையினரும் நல்ல புது முயற்சிகளைச் செய்கிறார்கள் என்று எக்ஸ் (Twitter) தளத்தில் படிக்கிறேன். பாராட்டுகள். அவை நகர்ப்புப் பூங்காக்கள் தொடர்பானவை அல்ல என்பதால், அவற்றை இந்தப் பதிவில் விட்டுவிடுவோம்.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading