Farsi Laban, TTK Salai, Alwarpet, Chennai
Farsi Laban, TTK Salai, Alwarpet, Chennai

சில ஆண்டுகளுக்கு முன்பாகக் கத்தார் நாட்டிற்குச் சென்றிருந்தபோது, அங்கே அரபு நாடுகளில் பிரபலமாக இருக்கும் ‘குனாஃபா’ (Kunafa) என்கிற இனிப்பு வகையைச் சுவைக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அளவுக்கதிகமான சர்க்கரை இருந்தாலும், அது எனக்குப் பிடித்திருந்தது.

சில வாரங்களுக்கு முன்பாக யு-ட்யூபில், சென்னையில் ஆழ்வார்பேட்டையில் ஒரு கடையில் குனாஃபா கிடைக்கிறது, நன்றாக இருக்கிறது என்று ஒரு காணொலியைப் பார்த்தேன். போன வார இறுதியில் கூகுள் மேப்ஸில் பார்த்து அந்தக் கடைக்குச் சென்றேன். எல்டாம்ஸ் சாலையில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் கட்சிக் கட்டிடத்தைத் தாண்டி இடதுபுறம் திரும்பி, நாரத கான சபாவுக்குப் போகும் வழியில் (மேம்பாலத்துக்குக் கீழே) ‘ஃபார் லாபன்’ (Farsi Laban, TTK Salai, Alwarpet, Chennai) என்கிற இந்தச் சிறிய கடை இருக்கிறது.

இங்கே இவர்கள் விற்பது குனாஃபா மட்டுமே. குனாஃபா என்பது ஓமப்பொடி போல மொறுமொறுப்பாக இருக்கும் சேமியா. இந்தக் கடையில் குனாஃபாவின் மூன்று வகைகளை வழங்குகிறார்கள். அவை ‘சலங்கட்டியா’ (Salankatia), ‘லூவா’ (Loua) மற்றும் ‘கோஷரி’ (Koshari). ஒவ்வொன்றுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டால், அவற்றில் இருக்கும் பாலின் அடர்த்தி மற்றும் குனாஃபாவின் அளவு என்று சொன்னார்கள்.

நான் பால் கிரீம் அடர்த்தியாக இருக்கும் வகையை வாங்கினேன். அதன் பெயர் லூவா என்று நினைக்கிறேன். விலை 350 ரூபாய். இதில் கீழ் அடுக்கில் பால் கேக், அதற்கு மேலாகக் குனாஃபா, அதன் மேலாகக் கிரீம். கிரீமில் மூன்று வகைகள் இருந்தன. நான் தேர்ந்தெடுத்த வகையில், மேல் அடுக்கில் ஒரு பாதிப் பிஸ்தா பருப்பு (Pistachio) கிரீமும், இன்னொரு பாதியில் ‘நூட்டெல்லா’ (Nutella) என்கிற சாக்லேட் கிரீமும் இருந்தது.

நான் சாப்பிட்ட இந்தப் பிஸ்தா-நூட்டெல்லா லூவா குனாஃபா சுவையாகவே இருந்தது. ஆனால், மிகச் சிறப்பாக இருந்தது என்றெல்லாம் சொல்ல முடியாது. நிச்சயம் அதிகப்படியான கலோரிகள் இதில் உள்ளன. கொண்டாட்டங்களின்போது சாப்பிடலாம், பாதிக்கு மேல் திகட்டுகிறது. இருவர் அல்லது மூவர் பங்கிட்டுச் சாப்பிட்டால் ரசித்துச் சாப்பிட முடியும், அளவும் சரியாக இருக்கும். ஆழ்வார்பேட்டையில் இந்த வழியாக வந்தால் வித்தியாசமான இனிப்பை உண்டு களிக்கலாம்.

ஃபார் லாபன், சென்னை
ஃபார் லாபன், சென்னை
Pistachio-Nutella Loua Kunafa
Pistachio-Nutella Loua Kunafa

Pistachio, Nutella and Kunafa
Pistachio, Nutella and Kunafa

கத்தார் நாட்டில் சாப்பிட்ட குனாஃபா நம்மூர் இனிப்பு வகை போல இருந்தது, அதில் பால் கிரீம் கிடையாது. ஆனால் சென்னை ஃபார் லாபனில் கிடைத்தது, நம்மூர் கேக் மற்றும் ஐஸ் கிரீம்களை நினைவுபடுத்தியது.

கத்தார் நாட்டில் நான் சாப்பிட்ட குனாஃபா
கத்தார் நாட்டில் நான் சாப்பிட்ட குனாஃபா

பொறுப்பு துறப்பு: இந்தப் பதிவில் எந்த விளம்பரமோ, நிதியுதவியோ பெறப்படவில்லை. முழுக்க நான் காசுக் கொடுத்து வாங்கி பயன்படுத்தும் பொருட்களை அல்லது சேவையைப் பற்றியது. இவை என் தனிப்பட்ட அனுபவம், இதன் பயனைப் பற்றி எந்தவித உத்தரவாதமும் நான் அளிக்கவில்லை. நன்றி.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading