📺சமீபத்தில் பிபிசி நியூஸ் தமிழ் யுட்யூப் (YouTube) சேனலில் வந்திருந்த ஒரு வீடியோவை இன்று நண்பர் பகிர்ந்திருந்தார். அதன் தலைப்பு, “Wifi at Night: இரவு முழுவதும் Wi-Fi-ஐ அணைக்காமல் இருந்தால் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துமா?”.
💀கேட்பவர்களைப் பயமுறுத்தி, அதன் மூலம் கவனத்தை ஈர்க்கும் வகையிலேயே அந்த வீடியோ இருந்தது. மருத்துவர்களையும் வல்லுநர்களையும் பேட்டி கண்டதாகச் சொல்லப்படும் அந்த வீடியோவில், எந்தவொரு பாதிப்பும் நிரூபிக்கப்படவில்லை என்று பல முறை சொல்கிறார்கள். இருந்தும், ஒவ்வொரு முறையும் ‘பாதிப்பு இருக்கலாமோ?’ என்று தர்க்க ரீதியாகத் தோன்றும் வகையில் மழுப்பலாகச் சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை இவை தேவையற்ற அச்சம்.
எல்லாம் சரி, இந்த விஷயத்தில் தெளிவு என்ன?:
1️⃣செல்பேசியோ, கணினியோ நம் தலையணைக்குக் கீழே வைப்பது, மெத்தையின் மேல் வைப்பது, நமது உடலைத் தொடும் தூரத்தில் வைப்பது எல்லாம் தேவையற்றது. இரவில் ஏழு மணி நேரம் இவை அருகில் இருப்பதால் மின்காந்த அலைகளால் கெடுதல் எதுவும் இல்லை. அப்படிப் பார்த்தால் நமது கால்சட்டைப் பாக்கெட்டுகளில் செல்பேசியை வைக்கவே கூடாது. இருந்தும் தலையணை அல்லது மெத்தையின் மேல் வைப்பதால் இவை சூடாகலாம், நாம் தள்ளிவிடலாம், அடிக்கடி எடுத்துப் பார்க்கத் தோன்றலாம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். நம் உடம்பில் இருந்து சில அடிகள் தள்ளிவைப்பது எல்லா வகையிலும் சிறந்தது.
2️⃣நம் வீட்டில் வைபை (Wi-Fi) ரவுட்டரை, செல்பேசியை, கணினியை இரவில் அணைத்து வைப்பது தேவையற்றது. இன்று வரும் மின்னணு கருவிகள் எடுக்கும் மின்சாரம் மிக மிகக் குறைவு. அதோடு அவையே, தேவையில்லாத போது குறைந்த சக்தி இயக்கத்திற்குச் (Low Power Mode) சென்றுவிடும். அலுவலகக் கருவிகளின் கணக்கு வேறு, அதை இங்கே பேசவில்லை.
3️⃣பொதுவாக எல்லாக் கருவிகளும் இரவில், நாம் பயன்படுத்தாத போதே அவற்றின் மென்பொருளைப் புதுப்பித்துக்கொள்ளும். தனக்குள் சேமித்து வைத்திருக்கும் தரவுகளை மேகக் கணினிகளுக்கு (Cloud) அனுப்பும். பழைய தகவல்களை அழித்துப் புதிதாக வருவதற்கு இடத்தை காலி செய்து வைக்கும்.
📘இதே கேள்வியை நான் தொழில்நுட்ப ரீதியாக எனது ‘நுட்பம்’ நூலில் விளக்கியிருக்கிறேன். அதிலிருந்து ஒரு சில பத்திகளைக் கீழே கொடுத்துள்ளேன்.
எனது ‘நுட்பம்’ (Nutpam) நூல் – அத்தியாயம் #20
ரவுட்டரை வாழ விடுங்கள்!
சிலரின் வீடுகளில் ஏர்டெல், ஏ.சி.டி., ரிலையன்ஸ் ஜியோ போன்ற அதிவேக இணையத் தொடர்பு வைத்திருப்பார்கள். அவர்களின் வைபை-ரவுட்டரை (WiFi Router) இரவில் அணைத்து விடுகிறார்கள். இது அனாவசியம், செய்யவும் கூடாது.
ரவுட்டர் என்பதும் ஒரு (மிகச் சிறிய) வகை கணினி தான். அதனுள்ளும் ஒரு இயங்குதளம் இருக்கிறது. பல நிறுவனங்களின் ரவுட்டர்கள் இரவில் நாம் பயன்படுத்தாத போதுதான் தங்களின் இயங்குதளத்தைப் புதுப்பித்துக் கொள்ளும். அப்போது அதை நாம் அணைத்துவிட்டால் அவற்றின் மென்பொருட்கள் பழையதாகவே தங்கிவிடும். அவற்றின் பாதுகாப்பையும் இது குறைக்கும்.
இப்படி ரவுட்டரை அணைத்துவிட்டால், வீட்டில் இருக்கும் எந்த சாதனத்துக்கும் இணைய வசதி கிடைக்காது – அதனால் வீட்டில் இருக்கும் நம் செல்பேசிகளும், மடிக்கணினிகளும் கூட தங்களுக்கான புது இயங்குதளப் பதிப்புகளைப் பெறமுடியாமல் போகும். அதனால் ரவுட்டரை இரவில் நிறுத்த வேண்டாம். முன்பே சொன்னது போல, அவற்றைக் காற்று வரும் இடத்தில் வைக்கவும், மாடிப்படிக்கு கீழே வைத்து, அந்த இடத்திற்கு ஒரு கதவையும் போட்டு மூடி வைக்க வேண்டாம். என் வீட்டில் காற்றோட்டமாக பால்கனியில் மழைநீர் படாத உயரத்தில் வைத்திருக்கிறேன்.
நுட்பம் நூலை வாங்க இங்கே போகவும்.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

