வரலாற்றை மாற்றும் ஏஐ காணொலிகள், பாடப்புத்தகங்கள் இனிப் பழங்கதை
வரலாற்றை மாற்றும் ஏஐ காணொலிகள், பாடப்புத்தகங்கள் இனிப் பழங்கதை

வரலாற்றைப் புத்தகங்களில் வாசிப்பதை விட, காணொலி (Video) ஆகப் பார்த்தால் எப்படி இருக்கும்? அதுவும் ஒரு அழகான பெண் தற்படக் காமிராவோடு நம்மிடம் பேசுவது போல் காண்பித்தால்?

அப்படி ஒரு புதுமையான முயற்சிதான் இந்த குளோயி வெர்சஸ் ஹிஸ்டரி (Chloe vs History) என்கிற யு-ட்யூப் ஓடை (YouTube Channel).

இந்தப் பதிவை முன்பே எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன், இன்று தான் எழுத முடிந்தது. எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வர வேண்டுமே, நான் எனக்குச் சொன்னேன், ஏதேதோ கற்பனை செய்ய வேண்டாம்.

இதில் குளோயி (Chloe) என்கிற பெண், டைட்டானிக் கப்பல் மூழ்கிய தருணம் முதல் பழங்கால ரோம் நகரம் வரை, கிளியோபாட்ராவின் அரண்மனை உட்பட எல்லா வரலாற்று இடங்களுக்கும் நேரில் சென்று, அங்கே நடப்பவற்றைக் கண்முன்னே காட்டுவது போல் காணொலிகள் இருக்கும். ஆனால் இதில் ஒரு சின்ன திருப்பம்…

இந்தக் குளோயி ஒரு நிஜமான மனிதர் அல்ல, அவர் ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) உருவாக்கிய உருவம்!

இதில் வரும் குளோயி, லாஸ் ஏஞ்சலஸ் நகரைச் சேர்ந்த ஒரு பெண் போல வடிவமைக்கப்பட்டுள்ளார். இந்தச் சேனலை உருவாக்கியவர் பிரிட்டன் நாட்டு ஜொனாதன் லாராமி (Jonathan Laramie). இவர் ஒரு தொழில்நுட்ப ஆர்வலர். வரலாற்றை வெறும் தகவல்களாகச் சொல்லாமல், ஒரு அனுபவமாக மாற்ற வேண்டும் என்ற ஆசையில் இதைத் தொடங்கினார். ஜொனாதன் அவருடைய பேட்டி இங்கே.

இந்தக் காணொலிகளை உருவாக்க ஜொனாதன் பல நவீன செய்யறிவுச் செயலிகளைப் பயன்படுத்துகிறார். குறிப்பாக சீனாவின் சீடன்ஸ் 2.0 (Seedance 2.0) போன்ற இயற்றறிவு (Generative AI) மாதிரிகளைப் பயன்படுத்தி, வரலாற்றுச் சூழலை, குளோயின் உருவத்தை, குளோயின் பேச்சை நம்பும்படி உருவாக்குகிறார். வரும் ஆண்டுகளில் செய்யறிவு மாதிரிகளின் திறன் கூடக்கூட இந்த காணொலிகள் இன்னும் உண்மையாகவே வந்துவிடும்.

என்னைப் பொறுத்தவரை, ஏஐ தொழில்நுட்பத்தின் சிறந்த பயன்பாடுகளில் (Use Case) ஒன்றாக இதைப் பார்க்கிறேன். பொதுவாக எல்லா வயது மாணவருக்கும் பிடிக்காத பாடம் கணிதத்திற்கு அடுத்ததாக வரலாறாக இருக்கும். இதுவரை இருந்த முறை இல்லாமல், வரலாற்றை வெறும் பாடமாகப் படிக்காமல், ஒரு நேரடி அனுபவமாகப் பார்ப்பது மாணவருக்கு இந்தப் பாடத்தின் மேல் ஒரு ஈர்ப்பைக் கொண்டுவரும்.

கற்பனையில் மட்டுமே இருந்த பழைய கால உலகை இப்படித் திரையில் பார்க்கும்போது, வரலாறு இன்னும் நெருக்கமாகத் தெரிகிறது.

தற்போது குளோயி காணொலிகள் பொழுதுபோக்கிற்காகவே உருவாக்கப்படுகின்றன. ஆனால் இவற்றைப் பார்த்தால் கல்வித்துறை இதை மேலும் எப்படி எடுத்துச் செல்லலாம் என்பது எளிதாகப் புரியும்.

AI Videos Transforming History Learning
AI Videos Transforming History Learning

நீங்களும் இந்தச் சேனலை பாருங்கள். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எப்படி வரலாற்றை உயிர் பெறச் செய்கிறது என்பது உங்களுக்கே புரியும்! (இந்த ஓடையின் முதல் காணொலியின் முகவரி இங்கே)

நீங்கள் சமீபத்தில் பார்த்த சுவாரசியமான ஏஐ வீடியோ எது? கீழே கருத்தில் சொல்லுங்களேன்.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading