இணைய வங்கித் தளங்களில் ஏமாற்று முயற்சிகள் தினமும் அதிகரிக்கிறது. இதைத் தடுப்பதற்காக இந்திய ரிசர்வ் வங்கி எடுத்துள்ள புதிய முயற்சி பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
https://onlinesbi.sbi.bank.in/ https://bobibanking.bankofbaroda.bank.in/ https://bankofindia.bank.in/ https://www.hdfc.bank.in/ https://www.kotak.bank.in/
மேலே இருப்பது இந்தியாவில் இருக்கும் பிரபல அரசு மற்றும் தனியார் வங்கிகளின் இணைய முகவரிகள் என்பது தெளிவு. இவற்றில் இருக்கும் சிறப்பு என்ன?
கடந்த பல ஆண்டுகளாகவே இணையத்தில் அப்பாவி மக்களை ஏமாற்றும் வகையில் பல மோசடிகள் செல்பேசிகள் மூலமாக வருகிறது. அவரவர் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் இருந்து வருவது போலவே போலியான குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் அல்லது வாட்ஸ்ஆப் அரட்டைகள் அனுப்பப்படுகிறது. அவற்றில் இருப்பது வங்கியின் உண்மையான இணையத்தளத்தின் முகவரியாக இருக்காது, போலியான தளத்திற்கு அனுப்பும் முகவரியாக இருக்கும். அது அழைத்துச் செல்லும் பக்கம், போலி என்பது தெரியாத வண்ணம் மிகவும் திறமையாக வடிவமைக்கப்பட்டு இருப்பதால் பலரும் ஏமாற்றப்படுகிறார்கள். தங்களின் வங்கி இணையத்தளம் என்று நம்பி இந்தப் போலி இணையதளங்களில் தங்களது உண்மையான வங்கிக் கணக்கின் பெயர், கடவுச் சொற்களை உள்ளிடுகிறார்கள். இதைக் கொண்டு திருடர்கள் ஏமாற்றப்பட்டவரின் கணக்கிலிருந்து பணத்தை எளிதாகத் திருடிக் கொள்கிறார்கள்.
இதைத் தவிரக் கடந்த சில ஆண்டுகளாக டிஜிட்டல் அரஸ்ட் எனப்படும் நாமே நமது பணத்தைக் கொண்டு போய் மோசடிக்காரர்களிடம் கொடுக்கும் ஏமாற்று வேலை அதிகரித்து வருகிறது. இந்த டிஜிட்டல் அரஸ்ட்டை தடுப்பது மிகக் கடினம் அதை இந்தப் பதிவில் விட்டுவிடுவோம். ஆனால் போலி வங்கி இணைய தளங்களில் இருந்து நம்மைப் பாதுகாக்க இந்திய ரிசர்வ் வங்கி கொண்டுவந்துள்ள புது முயற்சியைத் தான் இந்த .bank.in இணைய முகவரிகள்.
இந்திய ரிசர்வ் வங்கி, அனைத்து இந்திய வங்கிகளும் தங்களின் இணைய தள முகவரிகளை .bank.in என முடிவடையுமாறு பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். உதாரணமாக நீங்கள் பேங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர் என்றால் bankofindia.bank.in என்கிற இணையதளத்திற்குத் தான் செல்கிறீர்களா என்று உறுதி செய்து கொண்டு உங்களுடைய கடவுச்சொற்களை உள்ளிடலாம். போலி இணையதளங்கள் உருவாக்குபவர்களால் .bank.in என்று முடியும் எந்த இணைய முகவரிகளையும் பெற முடியாது. இதுவே இதிலிருக்கும் சிறப்பு.
நான் இப்போது தேடிப் பார்த்த வரை, பெர்ப்ளெக்சிட்டி ஏ.ஐ.யையும் கேட்டவரை வேறு எந்த நாட்டிலும் இத்தகைய இணைய முகவரி பாதுகாப்பு முறை செயல்படுத்தவில்லை. இந்தியாவில் மட்டுமே முதல் முறையாக நமது இந்திய ரிசர்வ் வங்கி இத்தகைய ஒரு முயற்சியைச் செய்து இருக்கிறது. இது மட்டுமே போதுமா என்றால் போதாது. இது ஒரு வெளிப்புற, முதல் பாதுகாப்பு படி மட்டுமே. இதைத் தவிர ஒவ்வொரு வங்கியும் தங்களது வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க அடுத்தடுத்த தடுப்புகளை வைத்துக் கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்களும் எந்தக் குறுஞ்செய்தி மின்னஞ்சலாக இருந்தாலும் முடிந்தவரை அதிலிருக்கும் இணைய முகவரிகளைச் சொடுக்கு செய்து போகாமல் இருப்பது நல்லது. நமது வங்கிக் கணக்குகளைப் பார்க்க அந்தந்த வங்கியின் முகவரி டைப் செய்து நேரடியாகப் போவது நல்லது.
கூகுள் தேடுபொறி மூலமாகப் போவதிலும் ஆபத்து இருக்கலாம், ஏன் என்றால் போலி இணையதளங்களும் கூகுள் சர்ச்சில் தங்களின் தளங்களைச் சேர்த்து விடுகிறார்கள். கூகுள் அவர்களால் முடிந்த அளவு இந்தப் போலி இணையதளங்களைத் தேடுபொறியில் இருந்து நீக்கிவிடுகிறார்கள். ஆனால் அவர்கள் எடுக்கும் முன்னரே பல ஆயிரம் நபர்கள் இந்தப் போலி தளங்களுக்குப் போய் ஏமாந்துவிடுகிறார்கள். இதைக் கருத்தில் கொண்டுதான் இந்திய ரிசர்வ் வங்கி இந்த .bank.in முறையைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு என்பது இதோடு நின்றுவிடும் விசயமில்லை. நான் முன்பே சொன்னது மாதிரி இது முதல் படி மட்டுமே. இருந்தும் மற்ற நாடுகளுக்கு முன்பாக இதை முயன்ற இந்திய ரிசர்வ் வங்கிக்கு என் வாழ்த்துக்கள். நன்றி.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.


Good attempt by RBI, initial level scrutiny so that domain name visibility as always .banak.in :). Really good initiative
இணையதளத்திற்குத் தான் சொல்கிறீர்களா or செல்கிறீர்களா ?
Thanks, corrected the typo.