மென்பொருளில் பிஸ்தாக்களாக இருக்கும் இந்தியப் பொறியாளர்கள், ஏ.ஐ. (AI) உலகில் கோட்டைவிட்டுவிட்டார்களா? செயற்கை நுண்ணறிவுத் துறையில் இந்தியா பின்தங்கி இருக்கிறது என்பதுதான் பொதுவான பார்வை. கடந்த சில நாட்களாகப் பங்குச் சந்தையில் இன்போசிஸ், விப்ரோ, டி.சி.எஸ். போன்ற ஜாம்பவான்களின் பங்குகள் அடிவாங்கி வருவதற்கும் இதுவே ஒரு முக்கியக் காரணம்.

இன்று ஏ.ஐ. உலகில் அமெரிக்காவும் சீனாவும் முன்னணியில் இருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. இந்தியா உட்பட மற்ற எல்லா நாடுகளும் இந்த இருவரிடமிருந்து வெகுத் தொலைவில் இருக்கிறார்கள் என்பதும் சரியே. ஆனாலும், இந்தத் துறையைப் பொறுத்தவரை இது முழுமையான புரிதல் இல்லாமல் பேசப்படும் கருத்து என்பதே உண்மையாக இருக்கும். இதைச் சற்றே விளக்கமாகப் பார்க்க வேண்டும்.

சமீபத்தில் டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மாநாட்டில் (World Economic Forum), சர்வதேச நிதியத்தின் (IMF) செயல் தலைவர், “ஏ.ஐ. துறையில் இந்தியா முன்னணியில் இல்லை, வேடிக்கை மட்டுமே பார்க்கிறது. அமெரிக்கா, டென்மார்க், சிங்கப்பூர் போன்ற நாடுகளே முன்னணியில் இருக்கின்றன” என்று சிங்கப்பூர் போன்ற சிறிய நாட்டைச் சொல்லி, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சினார். அதே மேடையில் இருந்த மத்திய அமைச்சர் அசுவினி வைஷ்ணவ், இதை மிகச் சரியாகக் கையாண்டுப் பதிலளித்தார். அதன் விவரங்களை இந்தச் சேப்பியன் ஜீனோ காணொலியில் நானும் நண்பர் ஷானும் விளக்கியிருக்கிறோம்.

இது இந்தியப் பொறியாளர்களின் திறமையைப் பற்றிய விஷயம். இது உள்நாட்டு மேடையல்ல என்பதால், மத்தியில் ஆளும் கட்சி தங்களின் தோல்வியைப் பூசி மெழுகுகிறார்கள் என்ற கண்ணோட்டத்தில் இதைப் பார்க்க வேண்டியதில்லை என்பது எனது கருத்து. நாம் பின்தங்கியிருந்தாலும் கூட, வெளிநாட்டு மேடைகளில் பேசும்போது அமைச்சர் நம் நாட்டை விட்டுக்கொடுக்கக் கூடாது. அது நம் நாட்டு நிறுவனங்களின் வர்த்தகத்தைப் பாதிக்கும் என்பதால் அவர் கையாண்ட விதம் பாராட்டுக்குரியது.

கொஞ்சம் விவரமாகப் பார்த்தால், இன்று செயற்கை நுண்ணறிவை இயக்க அடிப்படையாகத் தேவையானது இரண்டு: ஒன்று ஜிபியு (GPU) எனப்படும் மிக மிகச் சக்திவாய்ந்த சிலிக்கான் சில்லுகள் (Chips), இரண்டாவது இயற்றறிவு மாதிரிகள் (AI Models) எனப்படும் மென்பொருள். இவை இரண்டையும் இன்றைக்கு இந்தியாவில் நாம் தயாரிப்பதில்லை. இவற்றைத் தயாரிக்க நாம் படுவேகமாக முயன்றாலும் இன்னும் ஐந்திலிருந்து பத்தாண்டுகள் ஆகும். இதுதான் தற்போதைய நிலவரம்.

இவை இரண்டும் அமெரிக்காவால் கண்டுபிடிக்கப்பட்டவை என்பதால், அவர்கள் எப்போதும் இதில் முன்னணியில் இருக்கிறார்கள். இவற்றின் முக்கியத்துவத்தைச் சரியாக உணர்ந்த சீனா, இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இத்துறைக்குத் தேவையான விஞ்ஞானிகளை உருவாக்கப் பல்கலைக்கழகங்களில் பல்லாயிரம் கோடிகளைக் கொட்டி வருகிறது. அதனால்தான் சென்ற ஆண்டு சீனாவிலேயே படித்து, அந்த நாட்டின் வல்லுநர்களாலேயே ‘டீப்-சீக்’ (DeepSeek) எனும் இயற்றறிவை அமெரிக்காவின் உதவியின்றி உருவாக்க முடிந்தது. 🧮

நாமோ இந்தியாவில், பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை ஆளுநர்கள் நியமிப்பாரா அல்லது முதல்வர்கள் நியமிப்பாரா என்று மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறோம். நம் மாணவர்களோ கணினிப் பொறியியல் படித்துவிட்டு, எப்படியாவது ஒரு பெரிய நிறுவனத்தில் சேர்ந்து ஐந்து வருடத்தில் அமெரிக்க விசா பெற்றுப் புலம்பெயர்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் நம் நாட்டை விட்டுக்கொடுக்காமல், அதே சமயம் சரியான திசையில் தனது வாதங்களை அமைச்சர் முன்வைத்தார். அவர் முன்வைத்த வாதங்கள்:

🧩ஏ.ஐ. என்பது வெறும் சில்லுகளையும் மாதிரிகளையும் மட்டும் வைத்துக்கொண்டு இயங்குவதல்ல. எவ்வளவு சிறப்பான சமையலறையாக இருந்தாலும் அங்கே சமைக்கச் சிறந்த சமையல்காரர் வேண்டும். அதேபோல், எவ்வளவு முன்னணி இயற்றறிவு மாதிரியாக (AI Model) இருந்தாலும், அதன் திறனைப் பயன்படுத்த அதை நிறுவனங்களின் மற்ற மென்பொருட்களோடும் தரவுகளோடும் இணைக்க வேண்டும். அதற்குத் திறமையான மென்பொருளாளர்கள் வேண்டும். இன்று இத்தகைய வல்லுநர்கள் இந்தியாவில் மட்டுமே அதிக அளவில் இருக்கிறார்கள். கூகுளோ அல்லது ஓபன்-ஏ.ஐ. நிறுவனமோ ஒரு போயிங் (Boeing) நிறுவனத்திற்குச் சென்று அவர்களின் ஏ.ஐ.யை இயக்கப்போவதில்லை; டி.சி.எஸ். போன்ற இந்தியப் பொறியாளர்களே அதைச் செய்யப்போகிறார்கள்.

🏭 இன்று தைவானில் உலகின் முன்னணி ஜிபியுக்கள் தயாரிக்கப்பட்டாலும், அவற்றை பெருமளவில் வடிவமைப்பது பெங்களூரில் இருக்கும் நம் பொறியாளர்களே. இவர்கள் இல்லாமல் அமெரிக்கப் பெரும் நிறுவனங்களும் தங்களின் சில்லுகளை உருவாக்க முடியாது.

⚡இந்த ஜிபியுக்களை இயக்க அதிகப்படியான மின்சாரம் தேவை. இன்று சூரிய ஒளி மற்றும் காற்றாலைகள் மூலம் இந்தியாவில் அதிக அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுவும் நமக்குச் சாதகமான விஷயம். ஏ.ஐ. தரவு மையங்களை (Data Centers) அமைக்கப் பெரிய இடம் வேண்டும்; நம் நாட்டில் அதுவும் நிறையவே இருக்கிறது. இன்று எவ்வளவு பணம் கொடுத்தாலும் என்விடியா (Nvidia) ஜிபியுக்கள் கிடைப்பதில்லை. இதற்கு அமெரிக்காவின் அரசியல் ஆதரவும் தேவை. இதை ஓரளவுக்குச் சமாளிக்க இந்திய அரசு 38,000 ஜிபியுக்களை வாங்கித் தேவையான துளிர்த்தொழில்களுக்கு (Startups) வழங்குகிறது என்றார் அமைச்சர். இந்த வசதி எந்த அளவுக்குச் செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்த நேரடித் தரவுகள் என்னிடம் இல்லை என்பதால், இதை நான் சற்றே சந்தேகக் கண்ணோடுதான் பார்ப்பேன்.

🛠️இலவசமாக, திறமூலமாகக் (Open Source) கிடைக்கும் மாதிரிகளே அன்றாடத் தொழில்துறையில் பயன்படுத்தப்படும் மென்பொருட்களில் இணைக்கப் போதுமானவை. இத்தகைய 20 பில்லியன், 30 பில்லியன் அளவிலான மாதிரிகளை எடுத்து நமக்காக இந்தியப் பொறியாளர்கள் மாற்றியமைக்கும் திறனை அடைந்துவிட்டார்கள் என்றார். அவர் கூறும் அளவுக்கு இதில் நாம் இன்னும் முன்னேறவில்லை என்பதே எனது கருத்து. ஆனால், விரைவில் ஜோஹோ (Zoho) போன்ற நிறுவனங்கள் இதைச் சாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

எல்லாவற்றையும் என்றாவது ஒரு நாள், ஏதோ ஒரு இடத்தில் தொடங்க வேண்டும். இந்தியா தாமதமாகத் தொடங்கினாலும் இப்போது அதைச் செய்கிறது என்றே சொல்லுவேன். ஏ.ஐ. துறை இன்றோடு முடிந்துவிடப்போவதில்லை. நாம் தாமதமாகத் தொடங்கினாலும் ஒருங்கிணைந்து கடினமாக உழைத்தால் நிச்சயம் இலக்கை எட்ட முடியும். அது எளிதான காரியமல்ல. அதே சமயம், இந்தியா இப்போது ஏழை நாடும் கிடையாது. நமது பொறியாளர்கள் உலகளவில் திறமையானவர்கள். ஏ.ஐ. தொழில்நுட்பமும் நாளுக்கு நாள் எளிதாகி வருகிறது. முன்பு கம்பிவழித் தொலைபேசித் தொடர்பில் இந்தியா கோட்டைவிட்டாலும், பின்னர் வந்த மொபைல் தொழில்நுட்பத்தில் நேரடியாக நுழைந்து இன்று முன்னணியில் இருப்பது போல, இத்துறையிலும் நடக்க வாய்ப்புள்ளது. அதற்குத் தேவையானது அரசின் தொலைநோக்குப் பார்வை, நீண்டகால முதலீடுகள், நம் உள்ளூர் நிறுவனங்களின் முன்னெடுப்பு மற்றும் தனியார் துறையின் துணிச்சல். எல்லாவற்றையும் விட முக்கியமாக நம் பல்கலைக்கழக மாணவர்களின் கடின உழைப்பு.

ஜெய் ஹிந்த்.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading