நம் கணினிகளில் நாம் செய்யும் பணிகளில் பலவற்றைச் செய்ய உதவுவது திறமூல நிரல்களே. அதே போல இணையத்தைப் பின்னணியில் இயக்கச் செய்வது பெரும்பாலும் திறமூல மென்பொருட்களே.
உதாரணமாக எந்த வகை வீடியோ பைலாக இருந்தாலும் அதை நம் கணினியில் பிளே செய்ய உதவுவது வி.எல்.சி. பிளேயர் (VLC Player). இது ஓர் இலவசத் திறமூல (Open Source) செயலி. இந்தச் செயலியினுள் இருக்கும் பல மென்பொருள் கட்டமைப்புகளில் முக்கியமானது எப்.எப்.எம்.பெக். (FFMPEG) எனும் திறமூல நிரல். இதைக் கொண்டு ஒரு வீடியோ குறியாக்கத்தில் இருந்து வேறு ஒரு குறியாக்க முறைக்கு மாற்ற முடியும். வி.எல்.சி. மட்டுமில்லாமல், காணொலிகளை வழங்கும் பல கோடி இணையத்தளங்கள் எப்.எப்.எம்.பெக். நிரலைப் பயன்படுத்துகிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் கணினியில் நாம் சேமிக்கும் காணொலி கோப்புகளை நிர்வகிக்க உதவும் மந்திரக் கோல் எப்.எப்.எம்.பெக்.
இந்த எப்.எப்.எம்.பெக். நிரலை வெளியிட்டு மேம்படுத்தும் குழுக்களை ஒருங்கிணைக்கப் பண உதவி செய்வது எஸ்.பி.ஐ. என்கிற தன்னார்வ நிறுவனம். இப்படி அத்தியாவசியமாக விளங்கும் திறமூல நிரல்களை ஊக்குவிக்க நன்கொடைகள் அவசியம். பல தொழில்களில் இருக்கும் பெரு நிறுவனங்கள் திறமூல நிரல்களைப் பயன்படுத்தினாலும் அதில் வெகு சிலரே நன்கொடைகள் வழங்குகிறார்கள். அதிலும் பெரும்பாலும் தொழில்நுட்ப நிறுவனங்களே இப்படி நன்கொடைகள் வழங்குகிறது. அதுவும் அமெரிக்க நிறுவனங்களே அதிகம். எனக்குத் தெரிந்தவரை இந்திய நிறுவனங்கள் திறமூல நிரல்களை உருவாக்குவதில், மேம்படுத்துவதில், நன்கொடைகள் கொடுப்பதில் ஆர்வம் காட்டுவது இல்லை. நாம் இலவசங்களை எதிர்பார்ப்போமே தவிர, இலவசமாக வழங்கி சமூகத்திற்கு உதவுவது அரிது.
இந்த வகையில் இன்று வந்திருக்கும் செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியாவின் ஜெரோதா நிறுவனத்தின் நிறுவனர் நிதின் காமத் ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களை (சுமார் தொண்ணூறு லட்சம் ரூபாய்) நன்கொடையாக எப்.எப்.எம்.பெக். திட்டத்திற்கு வழங்கியுள்ளார். பாராட்டப்பட வேண்டிய செயல் இது. நிதின் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள், நன்றி.
குறிப்பு: ஜெரோதா (Zerodha) என்பது மக்கள் தாங்களாகவே பங்குகளை வாங்கவும் விற்கவும் உதவும் பங்கு வர்த்தக இணைய நிறுவனம்.

Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

