சென்ற வாரம் சென்னை அசோக் நகர்ப் பகுதியில் ஒரு வேலையாகச் சென்றிருந்தேன். காலைச் சிற்றுண்டிக்கு அசோக் பில்லர் அருகில் இருக்கும் பெரம்பூர் ஸ்ரீ சீனிவாசா ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் (PS4) சென்றேன்.
தொண்ணூறுகளில் சைவ உணவகம் என்றாலே இந்தப் பகுதியில் பிரபலமாக இருந்தது ஹோட்டல் சரவண பவன் மட்டுமே. இந்த இடத்திற்கே அந்த உணவகம் அடையாளமாக இருந்தது, இன்று அவர்களின் இரண்டு உணவகங்களுமே மூடப்பட்டுவிட்டன. இப்போது இந்தப் பகுதியில் இருப்பது ஹோட்டல் கீதம், குப்தா பவன், ஶ்ரீ மிட்டாய், ஆச்சி நம்ம கிச்சன், மற்றும் சில ஆண்டுகளாக இருக்கும் இந்த PS4 உணவகம்.
PS4 அசோக் நகர் உணவகத்தில் தோசை, இட்லி, சாட் வகைகள் கிடைத்தாலும், அளவில் சிறிய இடத்தில் இருக்கிறது. சுமார் எட்டுச் சிறிய மேஜைகள் மட்டுமே. நான் சென்றது காலை 10:15 மணி. மினி டிபன் வழங்கும் நேரம் முடிந்திருந்தாலும், எனக்காக தயார் செய்து கொடுத்தார்கள்.
எல்லா இடங்களில் கிடைக்கும் மினி டிபன் போலவே தான் இங்கேயும். ஓர் இட்லி, வடை, கேசரி, பொங்கல், சிறிய மசால் தோசை, சிறிய பூரி, உருளைக் கிழங்கு மசால், காரச் சட்டினி, தேங்காய் சட்டினி மற்றும் சாம்பார். இதோடு சூடாக ஒரு கப் காபி. மொத்தமாக வரிகளையும் சேர்த்து ரூபாய் 173. கொஞ்சம் அதிகம் தான், ஆனால் சுவையாக இருந்தது.




பொறுப்பு துறப்பு: இந்தப் பதிவில் எந்த விளம்பரமோ, நிதியுதவியோ பெறப்படவில்லை. முழுக்க நான் காசுக் கொடுத்து வாங்கி பயன்படுத்தும் பொருட்களை அல்லது சேவையைப் பற்றியது. இவை என் தனிப்பட்ட அனுபவம், இதன் பயனைப் பற்றி எந்தவித உத்தரவாதமும் நான் அளிக்கவில்லை. நன்றி.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

