சிலிகான் சில்லுகள் இல்லாத உலகம் எப்படியிருக்கும்?

திடீரென உலகத்தில் இருக்கும் எல்லோருக்கும் சிலிகான் சில்லுகளை (Computer Chips) எப்படி உருவாக்குவது என்பது மறந்துவிடுகிறது. இப்படி ஒரு சூழ்நிலையைக் கற்பனை செய்து பாருங்கள்.

இன்று உலகளவில் தொண்ணூறு சதவிகிதத்திற்கும் அதிகமாக அதிநவீன சிலிகான் சில்லுகள் (Computer Chips) குறிப்பாக ஆப்பிள் மற்றும் என்வீடியா சில்லுகள் தைவான் என்கிற சின்னஞ்சிறு நாட்டில் உருவாக்கப்படுகிறது. அங்கேயும் டி.எஸ்.எம்.சி. என்கிற ஒரு நிறுவனம் இதில் பெரும் பங்கைச் செய்கிறது. இதனாலேயே அமெரிக்காவும் சீனாவும் கண்கொட்டாமல் இந்த நாட்டைப் பார்க்கிறார்கள். அதே போல் இந்த உயர்ரக சில்லுகளை உருவாக்கத் தேவையான “மிகைப்படுத்தப்பட்ட புறஊதாக் கதிர்” (EUV) அச்சு இயந்திரங்களை உலகிலேயே நெதர்லாந்தில் ஏ.எஸ்.எம்.எல். என்கிற ஒரே நிறுவனம் மட்டுமே தயாரிக்கிறது. இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் ஏதாவதானால் உயர்ரக சில்லுகளை செய்யும் நுட்பம் மற்றவர்களுக்குத் தெரிந்தாலும் தேவையான தொழிற்சாலைகளை நிறுவி, உற்பத்தியைத் தொடங்கச் சில ஆண்டுகள் ஆகும்.

நான் தொடங்கிய வரியில் சொன்னது இவை இரண்டையும் தாண்டி, ஒட்டு மொத்த சில்லுகளை எங்கேயும் தயாரிக்க முடியாமல் போகும் நிலை. புனைவாகச் சொல்லவேண்டுமென்றால் மனிதக்குலமே அதை மறந்து விட்டால் உலகம் எப்படியிருக்கும் என்ற கற்பனை. இதை ஏதோ என் கற்பனை என்று நினைக்க வேண்டாம். கூகுள் நிறுவனத்தில் இருக்கும் இந்தத் துறையின் முன்னணி ஆராய்ச்சியாளர் திரு லாரி கெர்க் (Laurie Kirk,@lauriewired) அவர்கள் சமீபத்தில் வெளியிட்ட ஒரு காணொலியில் இதைப் பற்றி விளக்குகிறார். அந்தப் பதின்மூன்று நிமிட வீடியோவைக் கேட்ட நான் பிரமித்துவிட்டேன். இது நடக்கும் என்ற பயம் காரணமில்லை, ஆனால் நடந்தால் உலகம் எப்படியிருக்கும் என்று அவரின் சிந்தனையைப் பார்த்து வியந்து இந்தப் பதிவை எழுதுகிறேன். இன்று நமது அன்றாட வாழ்வில் கணினிகள் இல்லாமல் இல்லவேயில்லை, அந்தக் கணினிகள் இயங்க சில்லுகள் தேவை. அதேபோல் இன்றைக்கு இருக்கும் கார்கள் ஒவ்வொன்றிலும் நூறுக்கும் அதிகமான சில்லுகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு இன்னும் பரவினால் இந்தச் சார்புநிலை இன்னும் அதிகமாகும்.

திரு லாரியின் வீடியோவைப் பாருங்கள், அழகான ஓடையின் கரையில் நடந்து கொண்டே பேசுகிறார் திரு லாரி, அதுவே பார்க்க நன்றாக இருக்கிறது. சரி, அந்த காணொலியில் அவர் கற்பனை செய்யும் “புதிதாக சில்லுகள் தயாரிக்காத” உலகம் எப்படியிருக்கும் என்பதற்கு வருவோம்.

புதிதாக சில்லுகள் இல்லாத நாளுக்குப் பிறகு, முதலில் எல்லோரும் தங்களிடம் இருக்கும் செல்பேசிகளை, கணினிகளைப் பத்திரமாகப் பயன்படுத்துவார்கள். தூக்கிப் போட மாட்டார்கள். இருக்கும் கருவிகளின் ஆயுளை அதிகரிக்கும் முறைகளைக் கையாளத் தொடங்குவார்கள்.

முதல் ஆண்டுக்குப் பிறகு, மேகக் கணிமை (கிளவுட்) நிறுவனங்கள் அடி வாங்கும், அவர்களுக்குப் புதிய சர்வர்கள் கிடைக்காது, அதனால் விலை உயரும். இணையத்தளங்கள் வைத்துக்கொள்ள அதிகச் செலவாகும். துளிர்தொழில்கள் (ஸ்டார்ட்-அப்புகள்) மூடத்தொடங்கும். இன்றைக்கு இருக்கும் அதிநவீன சில்லுகளைக் காட்டிலும் முந்தைய சந்ததி சில்லுகளே அதிக வருடங்கள் நீடித்திருக்கும் (காரணம் Black’s equation), அதனால் அவற்றின் மதிப்பு கூடும், அவற்றைப் பதுக்கத் தொடங்குவார்கள்.

மூன்று வருடங்களில் சில்லுகளுக்கு பெரிய கருப்பு சந்தை வந்துவிடும். ராணுவங்களுக்குப் பெரிய பாதிப்பு இருக்காது, அவர்களிடம் அதிகளவு சரக்குகள் பாதுகாப்பாக இருக்கும். அரசாங்கங்கள் மின்சாரத் தொகுப்புகள், மருத்துவத்துறை, வங்கிகள் போன்ற முக்கிய சேவைகளுக்கு மட்டுமே இருக்கும் சில்லுகள் விற்பனை செய்ய முடியும் என்று கட்டுப்பாடுகளை விதிப்பார்கள். வீடியோ கேம்ஸ், கிரிப்டோ மைனிங் போன்றவற்றுக்குத் தடை வரும்.

ஏழாவது ஆண்டில், நம்மிடம் இருந்த செல்பேசிகள் பெரும்பாலும் வேலை செய்யாது – மின் இணைப்புகளை உருவாக்கும் ஈயப்பற்றுகளின் அயர்ச்சியினால் (Soldering fatigue) செயல் இழப்பதே இதற்கு காரணம். இணையம் வேலை செய்யும் ஆனால் சிதறிப் போகத் தொடங்கும். அதாவது ஒட்டுமொத்த உலகை இணைக்கத் தேவையான கணினிகள் இல்லாத காரணத்தால், சிறு சிறு சமூகங்கள், ஊர்கள் அவர்களுக்கு மட்டுமே சிறியளவில் இயங்கும் வலைத்தளங்களை வைத்திருப்பார்கள். 1980களில் செய்தது மாதிரி மக்களும் தரவுகளை, படங்களை, கோப்புகளை வட்டுகளில் (Disk Drive), குறுந்தட்டுகளில் சேமித்து, பரிமாறத் தொடங்கி இருப்பார்கள்.

15 வருடங்கள் ஆன பின், இணையம் முற்றிலும் இல்லாத நிலை வந்துவிடும். 30 வருடம் ஆனவுடன் 1970களின், 1980களின் பழைய கணினிகள் மட்டுமே வேலை செய்யும். உலகம் 70கள், 80கள் காலத்திற்குத் திரும்பிய மாதிரி தோன்றும்.

இந்தச் சூழ்நிலையை யோசித்துப் பார்த்தால் நம்முடைய அன்றாட வாழ்க்கை, நாம் ஒரு நொடிகூட நினைத்துப்பார்க்காத அந்தச் சின்ன சில்லுகள் (சிப்புகள்) மேலாகவே கட்டப்பட்டுள்ளது. அவை இல்லையென்றால், நம்முடைய உலகம் எப்படியோ மாறிப்போகும் என்பது உண்மை.

அடுத்த முறை கோவிலுக்குப் போகும் போது உங்கள் குடும்பத்தினரின் பெயரைச் சொல்லியவுடன் சில்லுகளுக்கும் சேர்த்து வேண்டிக் கொள்ளுங்கள். நன்றி.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading