சில வாரங்களுக்கு முன் நண்பர் சுஜாதா தேசிகன் அவர்கள் சென்னை வந்திருந்த போது காலை உணவிற்குச் சந்தித்தேன்.
அவரின் புதிய நூலைப் பற்றிப் பேசத் தொடங்கி, செயற்கை நுண்ணறிவு, தமிழ் சினிமா, தமிழக அரசியல், அமெரிக்க அரசியல், உலக நடப்பு எனப் பலவற்றைப் பேசினோம்.
பிறகு இருவரும் காரில் ஏறப் போகும் முன், அவரவர் நூல்களைப் பகிர்ந்து கொள்ளவில்லையே என நினைவிற்கு வந்தது. அவரின் “குட்டிப் பெண்ணின் குட்டிக் கதைகள்” நூலை எனக்கு வழங்கினார். எனது “செயலிகளின் கதை நூலை” நான் அவருக்குக் கொடுத்தேன்.
திருக்கோளூர்ப் பெண்பிள்ளை என்கிற சிறுமிக்கும் மகான் ஶ்ரீராமானுஜருக்கும் இடையே நடந்த உரையாடல்களாக வரும் 81 அற்புதமான கதைகளின் தொகுப்பே அவரின் “குட்டிப் பெண்ணின் குட்டிக் கதைகள்” புத்தகம். ஆன்மிகக் கதைகள் என்றாலும், அதன் நேர்த்தியான வடிவமைப்பிற்காகவும், வண்ணப்படங்களுக்காகவும், வாசிக்கும் போது ஒவ்வொரு வரியும் அப்படியே வழுக்கிக் கொண்டு போகும் எளிய நடைக்காகவும் இந்த நூல் பலரையும் கவர்வது நிச்சயம். ஒவ்வொரு பக்கத்தில் வரும் ஒவ்வொரு வகையான வரிகளும் ஒவ்வொரு வண்ணத்தில் எளிதாகக் கண்ணில் படும் விதத்தில், அழகான தமிழ் எழுத்துருக்களைக் கொண்டு அச்சுச் செய்யப்பட்டுள்ளது. 332 பக்கங்களில், உலகத்தரத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது இந்த நூல். நூலின் விவரங்கள் அவரின் பேஸ்புக் பக்கத்தில்.
அடுத்த ஓரிரு நாளிலேயே எனது “செயலிகளின் கதை” நூலைப் படித்துவிட்டு அவரின் கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட நல்லவர் தேசிகன். அவருக்கு என் மனமார்ந்த நன்றி. எனது நூலைப் பற்றிய விவரங்கள் முதல் கருத்தில் இங்கே.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

