ஒரு வழியாக அமெரிக்கத் தேர்தல் முடிவடைந்துவிட்டது. எல்லோரும் புள்ளைக் குட்டிகளைப் படிக்க வைப்பதைப் பார்க்கப் போகலாம். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அமெரிக்கத் தேர்தல்கள் தொடங்கியவுடனே உலகளவில் ஊடகங்கள் அனைத்திற்கும் அமெரிக்க மோகம் பிடித்துக் கொள்ளும். அமெரிக்கா மட்டுமே இன்று உலக வல்லரசு என்பதால், இது அவர்களின் மென்மையான சக்தியின் (Soft Power) எடுத்துக்காட்டு. இந்த மோகம், இந்த முறை அதிகமாகவே இருந்தது, அந்த விதத்தில் தேர்தல் முடிந்து தீர்மானமாக ஒருவர் வெற்றி பெற்றிருக்கிறார், அது நல்லது, அவருக்கு வாழ்த்துகள்.

என்னைப் பொருத்த வரை இவரா அவரா, யார் எனது விருப்பம் என்ற கேள்வியே இல்லை. இது அமெரிக்காவிற்கு நல்லதா, கேட்டதா என்பதும் எனக்குத் தேவையில்லாதது. ஏன் என்றால், நான் அமெரிக்கப் பிரஜையில்லை, பின் எனக்கு எதற்கு அந்தக் கவலை. எனக்கு இருக்கவே இருக்கிறது – மோடியா, ராகுலா, ஸ்டாலினா, எடப்பாடியாரா, விஜய்யா, அதுவே எனக்குப் போதும். அங்கே யார் ஆட்சிக்கு வந்தாலும் அமெரிக்கச் சுற்றுலா விசாவிற்கு நானும் எனது குடும்பமும்/நண்பர்களும் சென்னை காதிட்ரல் சாலையில் வெயிலில் நிற்க வேண்டும், அது மாறப் போவதில்லை, பின் எனக்கு எதற்குத் தேவைக்கு மேலான அக்கறை?. அதற்காக அமெரிக்காவே வேண்டாம் என்று சொல்லவில்லை, அவர்களின் நட்பு இந்தியாவிற்கு மிக முக்கியம், தொழில்நுட்ப, ராணுவ, உளவுத்துறை உதவிகளும் தேவை. ஆனால் அங்கேயிருக்கும் இரு கட்சியில் யார் மாறி ஆட்சிக்கு வந்தாலும் இந்தியாவைப் பற்றிய அவர்களின் பார்வை, கொள்கைகள் பெரியளவு மாறப் போவதில்லை என்று நினைக்கிறேன்.

இவர் வந்தது இந்தியாவிற்கு நல்லதா, அவர்களே தொடர்ந்திருப்பது நன்றாக இருந்திருக்குமா என்றால்- நாம் இன்னும் அந்தளவு அமெரிக்காவோடு நெருக்கமாக வரவில்லை, பொருளாதாரத்தில் அவர்களை நெருங்கவும் இல்லை. அதற்கு இன்னும் முப்பது, நாற்பது ஆண்டுகள் ஆகும், இன்றைக்குச் சீனா இருக்கும் பொருளாதார, ராணுவ நிலைக்கு இந்தியா வரச் சுமார் 2070 வரை ஆகும் என்கிறார்கள், அப்போது தான் நாம் உலகளவில் ஒரு முக்கிய சக்தியாக வருவோம், அப்போது அமெரிக்கத் தேர்தல்கள் நம்மைப் பாதிக்கலாம், அதுவரை நமக்கு உள்ளூர் வேலைகளே அதிகமாக இருக்கிறது என்பது எனது கருத்து. திறந்த உலக வர்த்தகம் வேண்டும் என்று நினைப்பவன் நான், இருந்தும் தற்போது இந்தியாவின் பங்கு அதில் மிகக் குறைவு, வரும் ஆண்டுகளில் அது நிச்சயம் வளரும், வளர வேண்டும், அது பெரியதாக ஆகும் வரை இந்த அமெரிக்கத் தேர்தல்கள் இந்தியாவிற்கு நல்லதும் இல்லை, கெடுதலும் இல்லை என்பதே உண்மை.

உலகில் தற்போது நடக்கும் இரண்டும் பெரிய போர்களில் இந்தத் தேர்தல் முடிவினால் பெரிய மாறுதல்கள் வரலாம், அது எப்படி இருக்கும், இறப்புகள் குறையுமா என்று இப்போது சொல்ல முடியாது, ஆனாலும் இந்தத் தேர்தல் முடிந்து அமெரிக்க மீண்டும் வெளி உலகைப் பார்க்கத் தொடங்கும் என்பதே அமெரிக்காவைத் தவிர்த்த உலக மக்களுக்குப் பெருமளவு நிம்மதியாக இருக்கும் என்று நினைக்கிறேன். மீண்டும் ஒரு முறை அமெரிக்க மக்களுக்கும், வெற்றியாளர் திரு ட்ரம்ப் அவர்களுக்கும் வாழ்த்துகள்.

குறிப்பு: இந்தப் பதிவை எழுதியவுடன், ‘சாட்-ஜிபிடி’விடம் கேட்டேன். கவனக்குறைவாக நான் ஏதாவது தவறாக, யாரையாவது புண்படுத்தும் விதத்தில் எழுதியிருக்கிறேனா? நாளை எனக்குச் சிக்கல்கள் ஏதாவது இந்தப் பதிவால் வருமா என்று கேட்டேன். எல்லாம் தெரிந்த செயற்கை நுண்ணறிவு அப்படி எதுவுமில்லை, எல்லாம் மரியாதையாக நல்ல கருத்தையே சொல்லியுள்ளீர்கள் என்று உறுதிப்படுத்தியதால் இங்கே பதிப்பிக்கிறேன். ஏதாவது தவறியிருப்பின் அது அமெரிக்காவில் தயாரித்த ‘சாட்-ஜிபிடி’யின் தவறு என்று இங்கே கூறிக் கொள்கிறேன்.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading