இன்று (20 நவம்பர் 2024) பிரதமர் திரு நரேந்திர மோடி, கயானா (Guyana) நாட்டுக்குச் சென்றிருக்கிறார். தென் அமெரிக்காவின் கரீபியன் கடற்கரையில் இருக்கும் இந்த நாட்டைப் பற்றி விக்கிப்பீடியாவில் படித்தபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஏன் தெரியுமா?

அந்த நாட்டு மக்கள்தொகையில் 40% பேர் இந்திய வம்சாவளியினர். 31% பேர் இன்றும் இந்து மதத்தைப் பின்பற்றுகிறார்கள். மேலும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அங்கே ‘கயானாத் தமிழர்கள்’ என்று ஒரு தனிச் சமூகமே இருக்கிறது!

தென் அமெரிக்காவின் வடகிழக்கில் ஒரு பகுதி ‘கயானாஸ்’. இந்தப் பகுதி ஒரு காலத்தில் ஐந்து ஐரோப்பியச் சக்திகளால் ஆக்கிரமிக்கப்பட்டு ஆளப்பட்டது: பிரிட்டிஷ், பிரஞ்சு, டச்சு, ஸ்பானிய, மற்றும் போர்த்துகீச். அவை பிரிட்டிஷ் கயானா (இப்போது வெறும் கயானா, நம் பிரதமர் சென்றிருக்கும் தனி நாடு இது), பிரஞ்சு கயானா (இன்றும் பிரான்சு ஆளுமையில் இருக்கும் பிரதேசம்), டச்சு கயானா (இப்போது சுரினாம் என்கிற தனி நாடு), ஸ்பானிஷ் கயானா (இப்போது வெனிசுலாவின் கயானா பகுதி), மற்றும் போர்த்துகீசிய கயானா (இப்போது பிரேசிலின் அமபா மாநிலம்) என அழைக்கப்பட்டன.

19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் இந்தியாவிலிருந்து பல ஆயிரம் கூலித் தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் (அதாவது அடிமைகள் இல்லை என்று சட்டப்படி வெளியில் சொல்லிக் கொள்ளக்கூடிய முறையில்) அழைத்துச் சென்றனர். அவர்களின் சந்ததியினர்தான் இன்றைய கயானா இந்தியர்கள். இந்திய வம்சாவளியினரில் பெரும்பான்மையினர் உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களிலிருந்து சென்றவர்கள். இவர்களுடன் தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசத்திலிருந்தும் பல ஆயிரம் தொழிலாளர்கள் சென்றார்கள், அவர்களின் வாரிசுகளும் இன்றைய கயானாவில் கணிசமான அளவில் வாழ்கிறார்கள்.

இதில் ‘கயானா தமிழர்கள்’ பெரும்பாலானவர்களுக்குத் தமிழ் பேசத் தெரியாது. ஆனால் தமிழ்க் கலாச்சாரம், பண்பாடு, பழக்கவழக்கங்கள் இன்றும் அவர்களிடம் உயிர்ப்போடு இருக்கின்றன. கயானா தமிழர்களின் வாழ்க்கை, அவர்களின் பண்பாட்டுப் போராட்டங்கள், அடையாளத் தேடல்கள் பற்றிய நாவல்கள், சிறுகதைகள் ஏதேனும் தமிழில் வெளிவந்திருக்கிறதா? வாசகர்கள் யாருக்காவது இது பற்றிய தகவல்கள் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Depiction of Indian indentured laborers in British Guiana, image created by AI
Depiction of Indian indentured laborers in British Guiana, image created by AI

அடிக்குறிப்புகள்:

  1. இவற்றில், இந்தியாவிலிருந்து நாம் பிரஞ்சு கயானாவைப் (French Guiana) பற்றி அதிகமாகக் கேள்விப்பட்டிருக்கிறோம், எதனால் தெரியுமா? அங்குள்ள குரு விண்கலத் தளத்திலிருந்து ஐஎஸ்ரோ (ISRO) பல செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது.
  2. சுரினாம் (Suriname) நாட்டின் விக்கிப்பீடியா பக்கத்தில் அங்கே இருக்கும் இந்திய இந்துக்களை “சனாதானி”கள் என்றும் “ஆர்யா சமாஜ்” சிஷ்யர்கள் என்றும் வகைப்படுத்துகிறது. இவை தமிழக அரசியலில் பயன்படுத்தும் பொருளில் சொல்லப்படவில்லை.

Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading