சென்னை விமான நிலையத்தில் இருக்கும் ஒரு வசதியைப் பற்றி இங்கே பேசப் போகிறேன்.
நீங்கள் சொந்தமாக கார் வைத்திருக்கிறீர்கள் என்றால் உங்கள் காரை அங்கே இருக்கும் ஏரோஹப் இஸ்ட்டில் (Aerohub East) அதாவது பி.வி.ஆர். திரையரங்கம் இருக்கிற வணிக அங்காடியில் (மால்) இருக்கும் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு நீங்கள் விமானம் பிடித்துச் சென்று, திரும்ப வந்து காரை எடுத்துக் கொண்டு செல்லலாம். இப்படி மூன்று நாட்களுக்கு உட்பட்டு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நிறுத்திவிட்டுச் செல்லலாம் – மூன்று நாட்களுக்கும் மேல் என்றால் பதிவு செய்து கொள்ள வேண்டும். இப்படி நிறுத்துவதற்கு நாள் ஒன்றிற்கு ரூபாய் 525 கட்டணம், 24 மணி நேரத்திற்குள்ளாக என்றால் ஒவ்வொரு மணி நேரத்திற்குக் கட்டணம் கூடும்.
இரண்டு நாட்களுக்கு முன்பாக நான் மதுரை போக வேண்டியிருந்தது. மதுரைக்கு விமானம் காலை 6 மணிக்கு சென்னையிலிருந்து கிளம்புவதால் நான் 5 மணிக்கு முன்பாக விமான நிலையத்தில் இருக்க வேண்டும். அதற்காக என் வீட்டிலிருந்து நான்கு மணி முப்பது நிமிடங்களுக்கு முன் கிளம்ப வேண்டும். அந்த நேரத்தில் சென்னை மெட்ரோ ரயில் சேவை அன்றைய தினத்திற்குத் தொடங்கி இருக்காது – பொதுவாக முடிந்தவரை சென்னை விமான நிலையம் செல்லவோ, அல்லது ஏரோஹப் பி.வி.ஆர். திரையரங்கு செல்லவோ நான் விரும்புவது மெட்ரோ சேவையை, சாலை நெரிசலில் மாட்டாமல் குறிப்பிட்ட நேரத்திற்குச் சிக்கனமாகச் சென்றுவிடலாம், மெட்ரோ நிலையத்தினுள் நடப்பதும் உடம்பிற்கு நல்லது, ஆனால் மெட்ரோ ரயில் சேவை காலை 5:30 மணியிலிருந்து தான். அதற்கு முன்னர் செல்ல உங்களுக்கு இருக்கும் ஒரே முறை, டாக்ஸி – வேலை நேரத்தில் அழைத்தாலே இவர்கள் வர மாட்டார்கள், அதுவும் ஊபர் ஓலா என்றால் கேட்கவே வேண்டாம் – வெற்றிலை பாக்கு வைத்து ஓட்டுநரின் வீட்டுக்குப் போய் அழைத்தாலும் வர மாட்டார் – விமான நிலையம் என்றால், ஆட்டோ ஓட்டுநர்கள் யானை விலை குதிரை விலைக் கேட்பார்கள். விமான நிலையத்திலிருந்து திரும்ப வரும் போது, ஊபர் ஓவில் ஏற நீங்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை நடக்க வேண்டும், அதைவிடுத்து நான் பொதுவாக நான் எடுக்கும் அதிகாரப்பூர்வக் கருப்பு டாக்ஸியும் கட்டணம் அதிகம். ✈️
️நண்பரின் பரிந்துரையில் எனது காரை ஓட்டிச் சென்று ஏரோஹப் இஸ்ட் நிறுத்துமிடத்தில் நிறுத்தி, ஐந்து நிமிட நடையில் விமான நிலைய நுழைவாயிலுக்குச் சுலபமாகச் சென்றேன். எந்த பதிவும் தேவையில்லை, யாரிடமும் சொல்ல வேண்டாம், நீங்களாகவே விரும்பிய இடத்தில் நிறுத்தி, பூட்டிவிட்டுச் சென்றுவிடலாம். சனிக் கிழமை காலை 4:50 மணிக்கு நிறுத்திய வண்டியை அடுத்த நாள் (ஞாயிறு) மாலை 8:20 மணிக்கு எடுத்தேன். மொத்தமாக ரூபாய் 840 கட்டணமாக எனது காரின் பாஸ்ட்-டாக் (Fastag) கணக்கிலிருந்து தானாகவே கழிக்கப்பட்டது – அதாவது முதல் 24 மணி நேரத்திற்கு ரூபாய் 500, சேவை வரி 25, அடுத்த நாள் (24 மணி நேரத்திற்குக் குறைவாக, ஆனால் 7 மணி நேரத்திற்கு மேலாக இருப்பதால்) கட்டணம் ரூபாய் 300, சேவை வரி 15, என்று மொத்தம் ரூ 840. இரண்டு வழிக்கும் நான் டாக்ஸியில் வந்திருந்தால் இதைவிட ஒன்றரை மடங்கிலிருந்து இரண்டு மடங்கு ஆகியிருக்கும், எனக்கு ரத்தக் கொதிப்பையும் அதிகரித்திருப்பார்கள் எனது அன்பான சென்னை ஓட்டுநர்கள். வசதியாக இருக்கும் இந்த வாகன நிறுத்துமிடம் (பார்க்கிங்) சேவையை எல்லோரும் பயன்படுத்திக் கொள்ளவே இந்தப் பதிவு.️

போகும் வழி:
️️கிண்டியிலிருந்து வரும் போது விமான நிலையத்தின் முதல் வாயிலில் நுழைந்து (அதாவது திருச்சி தேசியச் சாலையில் வலதுபுறம் திரும்பி), உள்நாட்டு விமான நிலையம் போகும் பாதையில் (அதாவது அங்காடியைப் பார்த்த படியே) வலது, வலது என்று திரும்பி ஏரோஹப் இஸ்ட் கட்டிடத்திற்கு உள்ளே சென்று விடலாம். ️
காரை பார்க்கிங்கிள் நிறுத்திவிட்டுப் போகும் போது, கட்டிடத்தினுள் சென்று இரண்டாம் மாடியில் இருக்கும் பாலத்தில் (பி.வி.ஆர். திரையரங்கத்தின் வாயிலுக்கு அடுத்து இருக்கும்) நடந்து வெளிநாட்டு (T2) அல்லது உள்நாட்டு விமான நிலைய புறப்பாட்டு முனையங்களுக்கு நடந்து செல்லலாம். வரும் போது உள்நாட்டு விமான நிலைய வருகை முனையத்திலிருந்து வெளிவந்து, வலது புறம் திரும்பி நடந்து ஏரோஹப் இஸ்ட் கட்டிடத்திற்குத் தரைப் பகுதியிலிருந்தே நுழைந்துவிடலாம்.
கூடுதல் குறிப்பு:
பொதுவாக சென்னை விமான நிலையம் ஒரு விசித்திரமான விமான நிலையம், உலகில் வேறு எங்கும் இப்படியான இரு நிலையத்தை நீங்கள் பார்க்க முடியாது. நிலையத்தினுள் வரும் வழியையும், போகும் வழியையும், வசதிகள் இருக்கும் இடத்தையும் அடிக்கடி யாருக்கும் சொல்லாமல், எந்த வகைப் பெயர், வழி பதாகைகளும் வைக்காமல் மாற்றிக் கொண்டேயிருப்பார்கள் – இப்படி மாற்றும் போது நகரவாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எப்படி இவற்றைப் புரிந்து கொண்டு சமாளிக்கிறார்கள் என்கிற மனித நடத்தையைப் பற்றி மேலை நாடுகளின் பல்கலை.கள் வந்து ஆராய்ச்சி செய்கிறார்கள், அந்தளவு “சிறப்பான” ஒரு நிலையம். ஓரளவு மக்களுக்கு, காவல் துறையினருக்கும் புரிந்துவிட்டால், உடனே மாற்றிவிடுவார்கள்!
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.


நான் கடந்த மாதம் நண்பரின் காரை நிறுத்த சென்று வழி தெரியாமல் 45 நிமிடங்கள் கழித்து திரும்பி வந்தேன் அவ்வளவு அழகாக வழிவகுத்தது வைத்திருக்கிறார்கள்
“காவல் துறையினருக்கும் புரிந்துவிட்டால், உடனே மாற்றிவிடுவார்கள்!”
மிகவும் சரியாக சொன்னீர்கள்….
ஒரு வாரம் முன் புது தில்லியில் இருந்து நாங்கள் வந்த பொழுது நள்ளிரவில் அவ்வளவு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டோம்.