எனது பள்ளி, கல்லூரிக் காலங்களில் மற்ற தினங்களை விட எனக்குப் பிடித்தது ஆசிரியர் தினம். என்றைக்குமே ஒரு சில நல்லாசிரியர்களும், பல சுமாரான ஆசிரியர்களும் இருப்பார்கள், இந்த விகித அலசல் எல்லாத்துறைக்கும் பொருந்தும். இதனால், இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்ப உலகில் ஆசிரியர்களைத் தவிர்த்து எப்படிக் கல்வியைப் பயிற்றுவிப்பது என்றே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இது தவறான முயற்சி. கணினி, செயற்கை நுண்ணறிவு மற்றும் மெய்நிகர் தொழில்நுட்பங்களைக் கொண்டு சிறந்தமுறையில் கடினமான விசயங்களை எளிதாகச் சொல்லிக் கொடுக்கமுடியும். ஆனால் என்றைக்குமே ஒரு மனித ஆசிரியருக்கு மாற்றாக வர முடியாது.
இங்கே ஓர் ஆசிரியர் அறிவுக் களஞ்சியம், அவருக்கு அந்தத் துறையில் எல்லாம் தெரியும் என்று நினைத்தால் அது தவறு – அது முடியவே முடியாது. அவர் ஒரு வழிகாட்டி, கடலில் தத்தளிக்கும் படகு போன்ற மாணவ பருவத்தவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கம். திரும்பச் சொல்கிறேன், இப்படியான தகுதியோடு எவ்வளவு ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்ற கேள்வி இங்கே தேவையில்லை, அது முட்டாள்தனமானதும் கூட. இன்றைக்குப் பெரு மென்பொருள் நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட் அல்லது அமெரிக்காவின் நாசா, இந்தியாவின் இஸ்ரோவை எடுத்துக் கொண்டால்கூட அங்கே எல்லோருமே டோனால்ட் நுத் அல்லது லினஸ் டோர்வால்ட்ஸ் அல்லது அப்துல் கலாமோ அளவிற்குப் புத்திசாலிகளாக இருக்கமாட்டார்கள், அது இயற்கைக்கு மாறானது.
ஒவ்வொரு பள்ளியிலும் பலநூறு ஆசிரியர்கள் இருப்பார்கள். அவர்களில் ஒருவர், அந்த ஆண்டு உங்களுக்கு ஊக்கமளித்தால் போதும். நம் வாழ்விலும் இதைப் பார்க்கலாம். மழலை வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்புவரை இருக்கும் பதினான்கு ஆண்டுகளில் வருடத்திற்கு ஐந்து என்று வைத்துக் கொண்டால் கூட, மொத்தம் எழுபது ஆசிரியர்கள். இவர்களில் எல்லோருமே நம் மனதில் இன்றைக்கும் இருக்கிறார்களா இல்லையே. ஒரு சில ஆசிரியர்கள் மட்டுமே நம் நினைவில் இருப்பார்கள் – அவர்கள் நம் வாழ்வில் ஒரு முக்கிய பங்கை ஆற்றியிருப்பார்கள். திரைப்படத்தில் வருவது போல அவர் உங்களின் உயிரைக் காப்பாற்றி இருக்க வேண்டாம், உங்களின் மிக மோசமான தோல்வியின் போது ஓர் உருக்கமான உரை நிகழ்த்தி உங்களின் மன மாற்றத்திற்குக் காரணமாக இருந்திருக்க வேண்டாம். ஆறாம் வகுப்பில் உனக்குக் கணக்கு நன்றாக வருகிறதே கணினி வகுப்பில் மாலையில் சேர யோசனை சொல்லியிருக்கலாம், அல்லது பத்தாவதிலிருந்து பதினோராம் வகுப்பு போகும் போது நீ நன்றாக எழுதுகிறாய் அறிவியல் வகுப்பில் சேராதே என்று எச்சரிக்கை செய்திருக்கலாம். அது கூட வேண்டாம், ஒரு முறை பள்ளி சுற்றுலாவில் கொடைக்கானலில் இருக்கும் நடைபாதை கடைகளில் இருக்கும் வணிக நுணுக்கங்களை விளக்கி இருக்கலாம். இது எல்லாமே ஒரு பொறி தான். இதை ஓர் ஆசிரியர் தான் செய்ய முடியும் – உங்கள் வாழ்வின் வெற்றிக்கு அந்த ஒருவர் போதும்.
இன்றைக்கு ஆசிரியர் தினம். என் வாழ்வில் நான் மறக்க முடியாத சில ஆசிரியர்களை நான் இங்கே நினைவு கூறி இந்தக் கட்டுரையை முடிக்கிறேன் – என் பள்ளி நினைவுகளைப் போன மாதம் என் பள்ளியின் அறுபதாமாண்டு நினைவு மலரில் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறேன், எனது கல்லூரி நினைவுகளைப் பற்றி எழுதிய கட்டுரை இங்கே.
நான் நினைவுக் கூற விரும்புவது என் முதல் தமிழ் ஆசிரியை திருமதி அலமேலு, அடுத்து என் தமிழ் வாத்தியார் திரு பெ.கி.பிரபாகரன் ஐயா, அடுத்து தேசிய மாணவர் படை (NCC) ஆசிரியர் திரு அனிஸ் அஹமத், கணிதப் பேராசிரியர்கள் திரு ஶ்ரீநிவாசன் மற்றும் திரு கங்காதரன், வேதியியல் ஆசிரியை திருமதி ஜி இந்திரா, மற்றும் நோபல் பரிசு பெற்ற திரு சி.வி.ராமன் அவர்களின் மாணவர் பேராசிரியர் திரு நாராயணன்.
எல்லா ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த ஆசிரியர் தின வாழ்த்துகள், நன்றி, நன்றி.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

