விளம்பரமே இல்லாத இலவச சாலிட்டர் (Solitaire) விளையாட்டு

பல மணி நேர பணிக்கு நடுவில் சலிப்பை நீக்க நான் கணினியில் விளையாடுவது சாலிட்டர் (Solitaire) சீட்டுக்கட்டு விளையாட்டு. அதை தவிர டேட்ரிஸ் (Tetris) மற்றும் பின்பால் (Pinball). விண்டோஸ் வந்த காலத்தில் மைக்ரோசாப்ட் இவற்றை இலவசமாகவும், பின்னர் ஒரு முறை கட்டணம் செலுத்தி வாங்கக் கூடிய பிளஸ் பேக் என்கிற பெயரில் வெளியிட்டார்கள். இப்பொழுதெல்லாம் இவற்றைப் பெற நீங்கள் மாத சந்தா கட்ட வேண்டும், அல்லது 30 நொடிகள் ஓடும் மொக்கையான விளம்பரங்களைப் பார்க்க வேண்டும்.

உங்களுக்கு சாலிட்டர் (Solitaire) பிடிக்கும் என்றால் தரமான சாலிட்டர் செயலிக்கான உங்கள் தேடல் இன்றோடு முடிவடைந்தது. பயனர் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு முற்றிலும் இலவசமாக, எந்தவிதமான விளம்பரங்களும் இல்லாமல், திறந்த மூலமாக ஒரு சாலிட்டர் செயலியை இன்று வெளியிடுகிறேன்.

மேங்கோஇடியட்ஸ் சாலிட்டர் (Mangoidiots Solitaire) விளையாட்டை மேக், விண்டோஸ், ஐபோன், ஆன்ட்ராய்ட் என எதிலும் விளையாடலாம். சோழர் காலத்தை நினைவுகூறும் படங்கள், முகலாயப் படங்களும் அந்தந்த சூழலுக்கு ஏற்ற இசையும் இடம் பெற்றுள்ளன.

இந்த இணைய முகவரிக்கு உங்கள் வலையுலாவியில் சென்று விளையாடலாம். தனியாக தரவிறக்க, நிறுவிக் கொள்ள தேவையில்லை. பிடித்திருந்தால், “Add to Home” என்று தேர்வு செய்து உங்கள் செல்பேசி, கணினியின் முகப்பு திரையில் சேமித்துக் கொள்ளலாம், அடிக்கடி செல்ல வசதியாக இருக்கும்.

இதில் இருப்பது ஒரே நேரத்தில் ஒரு சீட்டைத்தான் எடுக்க வேண்டிய “டிரா 1 கிளாண்டைக்” (Draw 1 Klondike) விளையாட்டு முறை. ஏழு நிரைகளில் சீட்டுகளை ஒரு நிறத்தின் மேலே இன்னொரு நிறமாக அடுக்கி, ஏஸிலிருந்து ராஜா வரை ஒவ்வொரு இனக் குழுவாக மேலே சேர்க்க வேண்டும். எளிது/இடைநிலை/கடினம் என்ற மூன்று நிலைகள் இருக்கின்றன. அதோடு திரும்பப் பெறும் வசதி, எல்லா சீட்டுகளையும் அடுக்கிய பிறகு ஒரே சொடுக்கில் முடித்துக் கொள்ளும் வசதி, ஆட்டத்தை நடுவில் நிறுத்திய பிறகு தொடரும் வசதி போன்ற அம்சங்களும் இருக்கின்றன.

Mangoidiots Solitaire - Chola Royal Theme Screenshot
Mangoidiots Solitaire – Chola Royal Theme Screenshot
Mangoidiots Solitaire - Mughal Garden Theme Screenshot
Mangoidiots Solitaire – Mughal Garden Theme Screenshot
Mangoidiots Solitaire Screenshot in Action
Mangoidiots Solitaire Screenshot in Action

மேங்கோஇடியட்ஸ் சாலிட்டர் உங்களின் கருவியில் இருக்கும் எந்த தகவல்களையும் படிக்காது, எந்த மேகத் தரவு மையங்களுக்கும் எதையும் அனுப்பாது. எந்தவித இணையக் கணக்கோ, செல்பேசி எண்ணோ தேவையில்லை. கூகுள் அனலிடிக்ஸ் (Google Analytics) சேவை பயனர் எண்ணிக்கையைக் கணக்கிடப் பயன்படுத்தப்படுகிறது. உங்களின் தனிப்பட்ட எந்த விவரமும் என்னால் படிக்கப்படுவதில்லை. இது பிடிக்கவில்லை என்றால் கிட்-ஹப் களஞ்சியத்தில் (Repo) இருந்து நிரலைத் தரவிறக்கி கூகுள் அனலிடிக்ஸை எளிதாக நீக்கிக் கொள்ளலாம்.

இந்த செயலியின் நிரல் கிட்-ஹப் பக்கத்தில் இருந்து உங்கள் கருவிக்கு முதல் தடவை தரவிறக்கப்படும், அதற்குப் பிறகு இணையத் தொடர்பு இல்லாமலேயே இந்த செயலியை நீங்கள் பயன்படுத்தலாம். இதுவரை நீங்கள் விளையாடிய விவரங்கள் உங்கள் வலையுலாவியில் மட்டுமே சேமிக்கப்படும். வலையுலாவியை மாற்றினாலோ, அதன் சேமிப்புக் கிடங்கை சுத்தம் செய்தாலோ விவரங்கள் போய்விடும். ஒரு கருவியில் விளையாடிய விவரங்கள் அடுத்த கருவிக்குப் போகாது.

எனது கட்டளைகளைக் கொண்டு, செய்யறிவு எழுதிய செயலி இது. ஓபன் ஏஐயின் புத்தம் புதிய மாதிரியான ஜிபிடி-6 அஸ்திராவைப் பயன்படுத்தியுள்ளேன். இதை முடிக்க இந்த மாத கிட்-ஹப் கோபைலட் (Github Copilot) சந்தாவில் கொடுக்கப்பட்ட டோக்கன் மொத்தமும் செலவானது.

இதை உருவாக்க நான் ஒரு பெரிய பிராம்ப்டைக் கொடுத்துத் தொடங்கினேன். அதில் எனக்கு எந்த முறை சாலிட்டர் விளையாட்டு வேண்டும், அது இணையப் பக்கமாக இருக்க வேண்டும், செல்பேசிகளிலும் கணினிகளிலும் வேலைச் செய்ய வேண்டும், சோழர் காலப் படங்கள் வேண்டும், முகலாயப் படங்கள் வேண்டும், அதற்கேற்ற இசை வேண்டும், விளையாட்டை நிறுத்திய பிறகு தொடர வேண்டும் என்று எனது விருப்பங்களைச் சொன்னேன். பிறகு மூன்று முறை சிறு சிறு மாற்றங்களை, இரண்டு முறை திருத்தங்களைச் சொன்னேன், அவ்வளவே. நிரல்கள் உருவாக்கம், கிட்-ஹப்பில் பதிவேற்றம் செய்து அதை அமைத்துக் கொடுத்தது என எல்லா வேலைகளையும் செயற்கை நுண்ணறிவே செய்தது.

தொடக்கத்தில் நான் பயன்படுத்திய பிராம்ப்டை கீழே படமாகக் கொடுத்துள்ளேன்.

நான் பயன்படுத்திய பிராம்ப்ட்
நான் பயன்படுத்திய பிராம்ப்ட்
Mangoidiots Solitaire - Your game history
Mangoidiots Solitaire – Your game history
Mangoidiots Solitaire - Theme Collection - Chola Royal Court
Mangoidiots Solitaire – Theme Collection – Chola Royal Court
About Mangoidiots Solitaire
About Mangoidiots Solitaire

மேங்கோஇடியட்ஸ் சாலிட்டரைப் பயன்படுத்திப் பார்த்து உங்கள் கருத்தைப் பகிரவும். குறைகள் இருந்தால் கிட்-ஹப் பக்கத்தில் இஷ்யூ (Issues) வசதியைப் பயன்படுத்தி அவற்றைச் சொல்லலாம்.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading