நாம் வாழ்வில் போக விரும்பாத, ஆனால் எல்லோரும் ஒரு நாள் போகப் போகும் ஓர் இடத்தைப் பற்றியது இந்தப் பதிவு. இந்த விஷயத்தை பற்றிப் பேச விரும்பாதவர்கள், இந்தப் பதிவைத் தவிர்த்துவிடவும்.

இடுகாடுகள், சிறு வயதில் இந்த இடத்தைக் கடந்து சென்றாலே அல்லது அது தொடர்பான சொற்களைக் கேட்டாலே பயமாகவிருக்கும், இறப்பைப் புரிந்து கொள்ளாத பருவம் அது. எனக்கு நினைவுத் தெரிந்து என்னைத் தாக்கிய முதல் இறப்பு, என் உயிர் நண்பனின் தங்கை ஒரு விபத்தில் இறந்தது – அப்போது நாங்கள் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். இதற்கு மேல் அந்தத் துயரம் வேண்டாம், அடுத்த விசயத்திற்குச் செல்வோம். நானாக, இடுகாட்டுக்கு இறந்தவரின் உடலைச் சுமந்து சென்றது (சாலைகளில் வரும் போது உடல் வாகனத்தில் தான் வந்தது) என் சித்தி இறந்த போது. அப்போது தான் முதலாக பெசன்ட் நகர் இடுகாட்டுக்கு உள்ளே போனேன், மின் (அல்லது காஸ், நினைவில் இல்லை) தகன மேடை, அதில் உடல் எரிக்கப்படுவதை நேரடியாகப் பார்த்ததும் அப்போது தான். அது பதினைந்து வருடத்திற்கு முன்னர். அப்போதெல்லாம் சென்னையில் இடுகாடுகள் மோசமாகத் தான் இருக்கும் என்று பின்னர் தெரிந்து கொண்டேன், சுற்றியுள்ள வெளியில் பல கல்லறைகள் இருக்கும், எல்லாமே குப்பையாகத் தான் இருக்கும். ஏன் இதெல்லாம் இப்போது?.

சில ஆண்டுகளாக வேண்டியவர்கள், நண்பர்களின் பெற்றோர், மற்றும் என் அப்பாவின் இறப்புக்கு சென்னையில் சில இடுகாடுகளுக்கு, மற்றும் பெங்களூரு இடுகாட்டுக்குப் போய் வந்ததில், கடந்த ஒரு மாதத்தில் இரண்டு முறை சென்னை பெசன்ட் நகர் இடுகாட்டுக்கு, இரு வெவ்வேறு உறவினர்களின் (முதியவர்கள்) இறுதிச் சடங்குகளுக்குச் சென்று வந்ததில் நான் பார்த்தது: நன்றாகப் பராமரிக்கும் இடுகாடுகளில் சென்னை பெசன்ட் நகர் இடுகாடு முக்கியமானது. ஒரு பூங்காவைப் போன்ற தோற்றம். சுத்தமென்றால் அப்படியோர் சுத்தம். இரண்டு பெரிய காஸ் (அடுப்பு) உருளைக்கலன்கள் இருக்கிறது, அவற்றில் கூட ஒரு கரித் தூள் இல்லை, அந்தளவு சுத்தம். கூடங்களின் தரைகளில் கிரானைட் கருங்கற்கள். உடலுக்கு மரியாதை செய்ய வருபவர்கள் நின்று வணங்கி, சுற்றி வர, இரண்டு பெரிய மண்டபங்கள். கழிவறைகள் சுமார் தான். வந்தவர்கள் வெளியில் அமர சில கிரானைட் மேடைகள். உள்ளேயே காவல் தெய்வ(காளி என்று நினைக்கிறேன்) சன்னிதி. மொத்தத்தில் அமைதியான சூழல்.

சென்னை பெசன்ட் நகர் இடுகாட்டைப் பராமரிக்கும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கும், அவர்களுக்கு உதவும் அமைப்புகளுக்கும் நன்றி. இது போன்ற இடங்களில் தான், நான் சென்னைவாசி என்பதில் பெருமைப்படுகிறேன்.

Categorized in:

Tagged in: