நானும் பாத்துட்டேன், நானும் பாத்துட்டேன், நானும் போய் பாத்துட்டேன்! முதல் முறையாகத் தமிழக அரசால் சென்னை சர்வதேசப் புத்தகக் காட்சி இந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நடக்கும் 46 ஆவது சென்னை புத்தகக் காட்சியோடு அதே வளாகத்தில் (சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில்) தனி குளிரூட்டப்பட்ட அரங்கில் இந்த நிகழ்ச்சி சர்வதேசத் தரத்தில் 16 ஜனவரி முதல் 18 ஜனவரி (இன்று) மூன்று நாட்களுக்கு நடத்தப்படுகிறது.

எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் புத்தகத் துறையில் இருப்பவர்கள் சந்தித்துக் கலந்துரையாடி, வணிக ஒப்பந்தங்களைச் செய்ய வசதியான ஏற்பாடு இந்தச் சர்வதேசப் புத்தகக் காட்சி. இதில் பல கலந்துரையாடல்களும், கருத்தரங்கங்களும் அமைக்கப்பட்டிருந்தது. பொது மக்களுக்கானது இல்லை இந்தப் புத்தகக் காட்சி. இதே முறையில் தான் புகழ்பெற்ற ஜெர்மனி பிராங்க்பர்ட் புத்தகக் காட்சி இருக்கும் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். இருந்தும் ஆசை! பொதுமக்களுக்கு அனுமதி உண்டா? இல்லையா? என்று அவர்கள் வெளிப்படையாகச் சொல்லவில்லை. அவர்களின் இணையத் தளத்திலும் அதற்கான விவரம் இல்லை. நம் இந்திய மரபே இது உங்களுக்கு இல்லை என்று சொன்னால் நம் ஆர்வம் தூண்டப்படும். முடிந்தால் பார்த்துவிட வேண்டும் என்று தோன்றியது.

கடந்த பல மாதங்களாக இதற்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கிறார் நண்பர், எழுத்தாளர், பதிப்பாளர் திரு ஆழி செந்தில்நாதன் [Aazhi Senthil Nathan]. அவரை நேற்று வாட்ஸ்-ஆப்பில் கேட்ட போது, மாலையில் சில மணி நேரங்களுக்கு (மாலை 4 முதல் 7 வரை) பொதுமக்களுக்கு அனுமதி உண்டு – உள்ளேயிருக்கும் பல்வேறு நாட்டுப் புத்தகக் கடைகளில் (விற்பனை இங்கே இல்லை, தனியாகப் பதிப்பாளரைத் தொடர்பு கொள்ளலாம்) இருக்கும் புத்தகங்களைப் பார்க்கலாம், ஆனால் கருத்தரங்கங்களுக்கு அனுமதி இல்லை என்றார்.

16 ஆம் தேதி கணு பொங்கல் அதனால் வீட்டம்மா வெளியே போகக் கூடாது என்று உத்தரவு போட்டுவிட்டார். நேற்று (17 ஜனவரி) போகலாம் என்றால் காணும் பொங்கல். சென்னைவாசிகள் எல்லோருக்கும் தெரியும் அன்றைய தினம் அதுவும் மாலையில் வீட்டை விட்டு வெளியே வருவதே உகந்தது இல்லை, அதனால் நேற்றும் போகவில்லை. இன்று கடைசி நாள், இன்று விட்டால் கிடைக்காது என்பதால் மாலை 5:30 மணி அளவிற்குச் சென்றபோது அண்ணா சாலையிலிருந்து நந்தனம் ஒய். எம். சி. ஏ. மைதானத்தினுள் திரும்பும் வழியில் இருந்தே ஒரே போலீஸ் படை, அப்போதே புரிந்துவிட்டது முதல்வர் வந்திருக்கிறார் என்று. முதல்வர் உள்ளே இருப்பதால் சென்னை சர்வதேசப் புத்தகக் காட்சிக்குப் பொதுமக்கள் யாருக்கும் அனுமதி இல்லை என விமான நிலையத்தில் தடுப்பது போலவே எல்லோரையும் வாயிலிலேயே தடுத்துவிட்டார்கள். சரி எப்படி இருந்தாலும் முப்பது நிமிடங்களிலிருந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் முதல்வர் இருக்க மாட்டார் என்று யோசித்து, அடுத்த ஒரு மணி நேரத்தை, மூன்றாவது முறையாக சென்னை புத்தகக் காட்சிக்குச் சென்று செலவழித்தேன். இந்த முறை ரொம்ப ஜாக்கிரதையாக எந்த ஒரு புத்தகத்தையும் வாங்கவில்லை.

போலீஸ் காரர்கள் பலரும் தொப்பியை (தொப்பையை அல்ல) கழட்டி புத்தகக் காட்சிக்கு வந்தபோது தெரிந்துவிட்டது முதல்வர் சென்றுவிட்டார் என்று. இப்போது சர்வதேசப் புத்தகக் காட்சி அரங்கத்துக்குள் நடந்து சென்றால், ஒருவர் கூட வாயிலில் இல்லை, தடுத்து நிறுத்த கேள்வி கேட்க யாருமில்லை. உள்ளே சென்று கண்ணில்பட்ட சில கடைகளைப் பார்த்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு திரும்பினால், இருந்த இருபது, முப்பது கடைகளையும் மூடிக்கொண்டு இருந்தார்கள். இஸ்ரேல், அர்மேனியா, ஜார்ஜியா, பிரிட்டன், ஜெர்மனி என்று ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு கடை. அவர்கள் மொழியில், ஆங்கிலப் புத்தகங்கள் இருந்தன. அமெரிக்கா, சிங்கப்பூர், இலங்கை கடைகளில் அவர்கள் நாட்டு எழுத்தாளர்களின் தமிழ்ப் புத்தகங்கள் இருந்தன . வேக வேகமாக படங்கள் எடுத்துக் கொண்டு வெளியே வரப் போனால் நண்பர், ஓவியர், புகைப்படக் கலைஞர் திரு நானா [Nana Shaam Marina] அவர்களைப் பார்த்தேன், அவர் கையால் என்னை ஒரு படமெடுத்துக் கொடுத்தார், அவருக்கு நன்றி.

திரு நானா என்னை எடுத்தப் படம்

திரு நானா என்னை எடுத்தப் படம்

தரையில் வைக்கப்பட்டிருந்த மிகப் பெரிய புத்தக வடிவில் திருக்குறள், தமிழ், ஆங்கிலம் மற்றும் பல உலக மொழிகளில்.

தரையில் வைக்கப்பட்டிருந்த மிகப் பெரிய புத்தக வடிவில் திருக்குறள், தமிழ், ஆங்கிலம் மற்றும் பல உலக மொழிகளில்.

சர்வதேசப் புத்தகக் கடைகள்

சர்வதேசப் புத்தகக் கடைகள்

ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன், சிங்கப்பூர் புத்தகக் கடைகள்

ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன், சிங்கப்பூர் புத்தகக் கடைகள்

தமிழ்நாடு புத்தகக் கடை

தமிழ்நாடு புத்தகக் கடை

வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்களின் புத்தகங்கள் - சென்னை சர்வதேச புத்தகக்காட்சி

வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்களின் புத்தகங்கள் – சென்னை சர்வதேச புத்தகக் காட்சி

ஆர்மேனியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இஸ்ரேல் புத்தகக் கடைகள்

ஆர்மேனியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இஸ்ரேல் புத்தகக் கடைகள்

உலகத் தமிழ் அரங்கு   - Global Tamil Stands

உலகத் தமிழ் அரங்கு – Global Tamil Stands

கூரையில் வைக்கப்பட்டிருந்த மிகப் பெரிய புத்தக வடிவில் திருக்குறள், தமிழ், ஆங்கிலம் மற்றும் பல உலக மொழிகளில்.

கூரையில் வைக்கப்பட்டிருந்த மிகப் பெரிய புத்தக வடிவில் திருக்குறள், தமிழ், ஆங்கிலம் மற்றும் பல உலக மொழிகளில்.

இருந்த சில நிமிடங்களில் – பொதுமக்களுக்காக அனுமதி கிடையாது என்பது சரியாகத்தான் பட்டது. பொதுமக்களை உள்ளே கொண்டு வர வேண்டுமென்றால் ஏற்பாட்டாளர்கள் இந்த நிகழ்ச்சியை மிக, மிக, மிகப் பெரிய அளவில் செய்திருக்க வேண்டும். முதலாண்டு அப்படிச் செய்வது கடினம். அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த சென்னை சர்வதேசப் புத்தகக் காட்சி பெரிய அளவில் வளர்ந்து பல ஆயிரம் புத்தகங்கள் தமிழிலிருந்து பல்வேறு உலக மொழிகளுக்கும், பல்வேறு உலக மொழிகளிலிருந்து தமிழுக்கும் வரவேண்டும் வரும் என நம்பி தமிழக அரசுக்கும், ஏற்பாட்டாளர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

பாரதி சொன்னது போல:

சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

#ChennaiBookFair2023 #chennaiInternationalBookfair

Tagged in:

,