கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக நான் அமேசானில் வாங்குகிறேன், இது வரை ஆயிரத்து நூறுக்கு மேலான ஆர்டர்கள். அவர்களின் இந்தியக் கடை திறப்பிற்கு முன்பாக, ஒவ்வொரு தடவையும் அமெரிக்காவிலிருந்து வரவழைக்க சில நூறு டாலர்கள் தபால் செலவு, வரி எல்லாம் சேர்த்து வாங்கியுள்ளேன். சில மாதங்களுக்கு முன் அவர்களின் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொண்டப் போது நான் செய்துள்ள கொள்முதல் எண்ணிக்கையைப் பகிர்ந்தார்கள், எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இந்த எண்ணிக்கை பெருந்தொற்று மாதங்களில் சில நூறு கூடியிருக்கும். இந்த பதிவின் விஷயம் அதுவல்ல.

முன்பெல்லாம் கடைத் தெருவில், மால்களில் கிடைக்கும் பொருட்களை விட நல்ல தரமானப் பொருட்கள், வித்தியாசமானப் பொருட்கள் இணைய வணிகக் கடைகளில் குறிப்பாக அமேசானில் கிடைக்கும்.ஆனால் இப்போது கடைத்தெருவில் இருக்கும் நேர்முக வணிகமும் இணையத்திற்குப் போட்டியாக தங்களைத் தயார்ப்படுத்தி வருகிறது என்று தோன்றுகிறது. குறிப்பாக இந்த வாரம் இரண்டு மின்சார சாதனங்களை நான் வாங்கிய அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன். இதை அறிவியல் புள்ளிவிவர அடிப்படையில் சொல்லவில்லை, ஒரு அனுமானம் தான்.

நான் வாங்கிய சிலப் பொருட்கள்:

  1. ஒரு செல்பேசி மின்னேற்றி (சார்ஜர்). அமேசானில் நிறைய இருக்கிறது, ஆனால் தரமானது என்கிற வாடிக்கையாளர்கள் கருத்திட்டிருப்பவை விலை அதிகமாக இருக்கிறது, விலைக் குறைவாகயிருப்பதைப் (மலிவானதை இல்லை) பார்த்தால் மதிப்பீடுகள் ஒன்றிரண்டு தான் இருக்கிறது. அதனால் வாங்கத் தயக்கமாகியிருந்தது. இது ஒன்றும் ரோல்ஸ் ராய்ஸ் காரியில்லை தான், ஆனால் கணினி வல்லுநர் என்று நானே என்னை நினைத்துக் கொண்டிருக்கிறேன், மட்டமான ஒரு பொருளை வாங்கி ஏமாந்தால், என் கவுரவம் என்ன ஆவது? இதைத் தேடியே சில மணி நேரத்தை வீணாக்கிவிட்டேன். இது சரியில்லை என்று தோன்றி, வீட்டின் அருகேயிருக்கும் மின்னனுக் கடைக்குப் போனேன், இரண்டை எடுத்துக் காட்டினார்கள், இரண்டின் விலையும் அடக்கமாகியிருந்தது, பொருளில் குறிப்பிட்டிருந்த விவரங்களும் சரியாகப்பட்டது. உடனே வாங்கி வந்து பயன்படுத்தினேன், நன்றாகியிருக்கிறது.
  2. என்னைப் போல் சோம்பேறிகளுக்கு வசதியாகத் தண்ணீர் கேனிலிருந்து தண்ணீரைப் பிடிக்க வசதியாக இருப்பது இந்த டிஸ்பேன்ஸர்கள் என்கிற சிறிய தண்ணீர் தானியங்கி இறைப்பு. மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரு வகையை அமேசானில் வாங்கியிருந்தேன், நன்றாக உழைத்தது, இப்போது அவை அமேசானில் இல்லை. வேறு ஒரு நிறுவனத்தின் வகையை வாங்கலாம் என்றுப் பார்த்தால், மேலே மின்னேற்றிக்கு நடந்த அதே அனுபவம் தான். தி.நகர் போகியிருந்த என் உதவியாளரிடம் சொல்லி, சரவண ஸ்டோர்ஸில் பார்த்துவரச் சொன்னேன், அவர் ஒன்றை வாங்கி வந்தார். அது அமேசானில் நான் கண்ட பல வகைகளை விட நன்றாகவும், விலை குறைவாகவும் இருந்தது. எங்கள் வீட்டில் வாங்கும் பிஸ்லேரி கேன்களில் கச்சிதமாகவும் பொருந்துகிறது.
  3. இவைத் தவிர எனக்குப் பிடித்த சீனி கம்மியாகயிருக்கும் இரண்டு சாக்லேட் வகைகள். அமேசானில் இவற்றுக்கு நூறு ரூபாய் அனுப்பும் செலவு கூட. எங்கள் தெரு கோடியில் இருக்கும் அண்ணாச்சிக் கடையில் எளிதாகக் கிடைத்தது, விலையும் கம்மி.

எல்லாவற்றையும் இணையத்தில் செய்ய வேண்டும் என்ற எண்ணமுடைய, அப்படியே பழக்கப்பட்ட ஒரு கணினி அடிமையான எனக்கு இந்த அனுபவம் புதிதாக இருக்கிறது. இது பெருந்தொற்றால ஏற்பட்ட ஒரு சலிப்பின் வெளிப்பாடா என்று தெரியவில்லை? ஒரு வகையில் நல்லது தான் என்று நினைக்கிறேன். சந்தைப் பொருளாதார தான் சிறந்தது என்ற எனது அனுபவத்தில் நான் கற்றுக் கொண்டது போட்டி எப்போதுமே வாடிக்கையாளர்களுக்கு நல்லது. அதனால் இந்த மாற்றத்தை வரவேற்கிறேன்.

இன்னொன்றையும் இந்த விசயத்தில் நான் கவனிக்கிறேன்: அமேசானும், ஃபிலிப்கார்ட்டும் மற்றவர்களை விட மலிவாக (நஷ்டத்தில்) கொடுத்த காலமெல்லாம் இந்தியாவில் மலையெறிப் போச்சு. இரண்டு நாட்களுக்கு முன் வந்த அமேசான் ப்ரைம் நாட்களில் நான் ஒன்றுகூட வாங்கவில்லை! காரணம், அரசுக் கொண்டுவந்த சட்டங்களாக இருக்கலாம் – ஒரு வியாபாரி அமேசானில் இவ்வளவு சதவிகிதம் தான் விற்கலாம் என்று ஏதேதோ சட்டங்கள் போன ஆண்டோ அதற்கு முன்போ வந்தது – அல்லது மார்க்கட்டைக் கைவசமாக்கிவிட்டோம் என்ற நினைப்போ? எனக்கு அந்த பொருளாதாரம் தெரியவில்லை. அமேசான், ஃபிலிப்கார்ட்டோடு நில்லாமல், மின்-வணிகத்தில் இப்போது நம் உள்ளூர் பெரு குழுமங்களான டாட்டாவும், ரிலையன்ஸ்ஸும் வந்தாயிற்று, என்ன நடக்கிறது என்று பார்க்கும் ஆவலில் நான்.

பெருந்தொற்று இப்படியே அடங்கியிருக்குமானால், சுலபமாக அமேசானுக்கு அதிகமாக செல்லாமல் (முழுவதுமாக அமேசானில் வாங்காமல் என்னால் இருக்க முடியாது), அருகில் இருக்கும் சிறியக் கடைகளுக்குப் போய் அவர்கள் சில பத்து/நூறு ரூபாய் அதிகமாகச் சொன்னால் கூட தரம்/வகைகள் அதிகமாக இருந்தால் அங்கே வாங்கி அவர்களை ஊக்கப்படுத்த எண்ணம், இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பின் குறிப்பு: ஒரே வருத்தம், சீனாவோடான மோதலில் அலி-எக்ஸ்ப்ரஸ் தடை செய்யப்பட்டது, அதில் எனக்கு அவ்வளவு தேவையேயில்லாதப் சிலப் பொருட்களை மிக மிக மிக மலிவாகக் கிடைத்ததால் வாங்கி வந்துள்ளேன் – அதைத் தவறவிட்ட மாதிரி உணர்கிறேன்!

#ecommercestore #retailstore #chennai #shoppingexperience #onlineshopping

Tagged in: