நகரத்தில் (சென்னை) பிறந்து, இங்கேயே வளர்ந்து, சொந்த ஊரின் தொடர்புகள் இல்லாமல் இருக்கும் பலரைப் போன்றவன் நான், அதனால் தான் என்னவோ தமிழ் நாட்டில் முழுவதும் இருக்கும் எண்ணற்ற ஊர் தெய்வங்களை, காவல் தெய்வங்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஐயனார், மதுரைவீரன், பாடிகார்ட் முனீஸ்வரர் போன்றவர்களை கேள்விப்பட்டதோடு சரி, அதற்கு மேல் தெரிந்ததெல்லாம் தமிழ் சினிமா மூலமாகத் தான், அதுவும் பல சமயங்களில் கதையின் போக்குக்காக இந்தத் தெய்வங்களை மேலோட்டமாகத் தான் காட்டியிருப்பார்கள். என் போன்ற கிராமத்து வாசமே இல்லாதவர்களுக்குப் பல சமயங்களில் இந்தத் தெய்வங்களைப் பார்த்தாலே ஒருவித பயமாகயிருக்கும் – யோசித்துப் பார்த்தால் அந்தப் பிம்பத்திற்குத் தமிழ் சினிமாவும், என் அறியாமையும் தான் காரணமாக தோன்றுகிறது.

எங்கள் குடும்பத்தில் வழிபாட்டுக் கட்டுப்பாடுகள் எல்லாம் கிடையாது, பெருமாள் கோயிலுக்குத் தான் அதிகம் செல்வோம், அங்கு மட்டும் தான் செல்ல வேண்டும் என்று என் தாத்தா லிப்கோ திரு சர்மாவை அவர்கள் ஒரு போதும் சொல்லியது கிடையாது. அப்படி பெருமாள் கோயில்களுக்குப் போகும் போதுக் கூட ஸ்ரீ சிவன், ஸ்ரீ முருகன் சந்நிதிகள் இருந்தால், அல்லது சைவ கோயில்கள் அருகில் இருந்தால் அங்கேயும் வணங்க மறந்ததில்லை. அதோடு, சென்னை தி.நகர் முப்பாத்தம்மன் கோயிலுக்குப் பல முறை சென்றிருக்கிறோம் (செல்கிறோம்), வேண்டுதல்களுக்கு மாங்காடு அம்மன், தஞ்சாவூர் மாரியம்மன், மற்றும் ஸ்ரீரங்கம் செல்லும் போது சமயபுரம் மாரியம்மன் கோயில்களுக்குச் செல்வதுண்டு. வெளீயுர் செல்லும் போது, அல்லது வரலாற்றுப் பயணங்கள் செல்லும் போது மசூதிக்கும், தேவாலயத்திற்கும், புத்த மடாலயங்களுக்கும் செல்வது, அவர்களின் முறைகளை (மேலோட்டமாகவாவது) தெரிந்துக் கொள்ள எனக்குப்பிடிக்கும்; பல சமயங்களில் என் குடும்பத்தினரும் உடன் வந்திருக்கிறார்கள். நம் நன்றிகளை, வேண்டுதல்களை எந்தக் கடவுள் கேட்டால் என்ன?

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், இப்படி மற்ற மத தெய்வங்களைப் பற்றி ஓரளவிற்காகவாவது தெரிந்திருந்தாலும், நம் நாட்டில், நம்மை சுற்றியிருக்கும் சிறு (இந்த வார்த்தைக்கு மன்னிக்கவும், ஆனால் இங்கே இது தான் பொருத்தம்) தெய்வங்களைப் பற்றித் தெரியாமல் இருந்தது குறை. அந்தக் குறையை இன்று திரு திருச்சி பார்த்தி அவர்கள் நிரப்பிவிட்டார் – வீரசோழன் அணுக்கர் படை அமைப்பினர் நடத்திய “நாட்டார் தெய்வங்கள்” என்ற காணொலி நிகழ்ச்சியில். இந்த உரை எனக்குப் புரியுமா என்ற சந்தேகத்துடன் தான் கலந்துக் கொண்டேன்.

அவரின் உரையின் தொடக்கத்திலேயே இப்படி ஆரம்பித்தார்: இங்கே நாட்டார் தெய்வங்களைப் பற்றிப் பேசப் போவதெல்லாம், நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே பார்க்க வேண்டும். இதற்கு ஆதாரங்களையோ, அறிவியல் சான்றுகளையோ யோசிக்கக் கூடாது; கடவுள் மறுப்பு என்பது வேறு, இங்கே சொல்லப் போவதெல்லாம், அவர் அவரின் தனிப்பட்ட (குடும்பத்தின்/ஊரின்/சாதியின்) நம்பிக்கை, அவர்களின் பழக்க வழக்கம், வாய் வழியாக வந்த (சில இடங்களில் கல்வெட்டுக்களில் இருக்கும்) வரலாறுகள்.

தமிழ் நாட்டில் இருக்கும் நாட்டார் தெய்வங்களைப் பட்டியலிட்டால் பலநூறு, பல்லாயிரம் போகும், அதனால் தான் சிலவற்றை மட்டும் சொல்கிறேன் என்று, அவர் சொல்லியவை கீழே:

[குறிப்பு: கீழே எழுதியிருப்பது திரு திருச்சி பார்த்தி அவர்களின் உரையில் நான் கேட்டு எழுதியவை, மேலும் தெரிந்துக் கொள்ள அவரின் முழு உரையைக் காணுங்கள், தவறு இருப்பின் அது என் குறிப்பில் வந்த பிழையாக இருக்கலாம், மன்னிக்கவும்].

வேலன் வெறியாட்டு, பொன்னர் சங்கர், பலவேசக்காரன், மண்ட கருப்பு

வேலன் வெறியாட்டு, பொன்னர் சங்கர், பலவேசக்காரன், மண்ட கருப்பு

1.வேலன் வெறியாட்டு:
அறியா வேலன் தரீஇ, அன்னை
வெறிஅயர் வியன்களம் பொலிய ஏத்தி
மறிஉயிர் வழங்கா அளவை”(அகம்.242)

வெறியாட்டு நிகழும்போது முருகனுக்குப் பலியிடுதல் என்பது சங்ககாலத்திலேயே (அகநானூறு) பண்பாட்டு மரபாக இருந்திருக்கிறது.

2. மதுரை பாண்டி முனீஸ்வரன்:
ஊரில் ஒருவரது கனவில் வந்து, அவரின் முயற்சியால் உருவாக்கப்பட்ட கோயில் இது, அதற்கு முன் இது ஒரு சமண தீர்த்தங்கரர் சிலையாக இருந்திருக்கலாம்.

3. வேட்டை கருப்பர்:
திருச்சி, இடைமலைப்பட்டிப் புதூர் என்கிற ஊரில் இருக்கும் சன்னதி. வேட்டையன் என்பவர் குதிரை ஒன்றை காணிக்கையாக் கொடுத்திருக்கிறார். 10 கி.பி. நூற்றாண்டில் நடந்திருக்கலாம்.

4. காத்தவராயன்:
இவருக்குச் சொந்த ஊர் திருச்சி. இவரின் தந்தை அந்தக் காலத்து ஓர் அரசு அதிகாரி. காத்தவராயனின் மனைவி ஒரத்தி, அவளுக்குச் சாராயம் காய்ச்சும் தொழில்; ஒரு நாள் இவர், ஆரியமாலை என்கிற பிரமாணப் பெண் மீது காதல் கொண்டு, அவளோடு ஓடிவிடுகிறார். அரசர் தேட, தந்தையாலேயேப் பிடிப்பட்டு 60அடி கழுவில் (அதைச் செய்த ஆசாரிகள் திருவானைக்காவலில் இருந்து வருகிறார்கள் என்று கல்வெட்டுகள் இருக்கிறது) ஏற்றப்பட்டு, மூன்று நாள் துடித்து இறக்கிறார். அவரின் சாபம் ஊரை ஒன்றும் செய்யக்கூடாது என்பதற்காக அவரை சாமியாக்கி வழிப்படுகிறார்கள்.

5. ஐயனார்:
ஐயன் தமிழர்களின் தொன்மையான தெய்வம். இவரை சமணர்கள் துவாரபாலகராக, பௌத்தத்தில் புத்தரின் காலடியில் வைத்து, சைவத்தில் சாஸ்தாவாகவும் வணங்குகிறார்கள். பல இடங்களில் இவருக்கு கோயில்கள் இருக்கிறது, திருப்பத்தூரில் இருக்கிறது ஒரு கல் கோவில் – இவரை அங்குப் பல சாதியினர்களும் வழிப்படுகிறார்கள்.

6. கலிதீர்த்த ஐயனார் கோயில்:
ஆயக்காரன்மூலம், இது வேதாரண்யம் அருகில் இருக்கிறது. இங்கே 2000க்கும் அதிகமாகக் குழந்தைப் பொம்மைகள் இருக்கிறது, குழந்தை வேண்டி பலர் கொடுப்பது இவை. இங்கே இருக்கும் கோயில் பூசாரி (நிர்வாகி) திரு கலி தீர்த்தர், இவரை வணங்கும் தம்பதியினருக்கு எந்த தேதியில் குழந்தைப் பிறக்கும் (கருத்தரிக்கும் முன்னேரே) என்றும், அதற்கு இப்போதே பெயரையும் வைக்கிறார்.

வேட்டை கருப்பர், காத்தவராயன், மதுரை பாண்டி முனீஸ்வரன், ஐயனார்

வேட்டை கருப்பர், காத்தவராயன், மதுரை பாண்டி முனீஸ்வரன், ஐயனார்

7. பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி:
கேரளாவில் வரும் கருப்பண்ணசாமி, மதுரை அழகர் மேல் அளவுக்கடந்த பக்தி கொள்கிறார், அவரின் சிலையின் அழகில் மயங்கி அதை அவர் ஊருக்கு எடுத்துச் செல்ல முயல்கிறார். இந்த முயற்சியில் அவரோடு வந்த 18 பேரும் கொல்லப்படுகிறார், கோயில் படிகளுக்குக் கீழே புதைக்கப்படுகிறார்கள், இதைப் பார்த்த கருப்பண்ணசாமி மனம் துடித்து வேண்ட அவரை தனது காவலனாக இருக்கும் வரம் தருகிறார் அழகர்சாமி. இது நாயக்கர் காலத்தில் நடந்திருக்கலாம்.

8. மதுரைவீரன்:
எம்.ஜி.ஆர் நடித்த படம் கூட இருக்கிறது. முதலில் பொம்மி என்கிற பெண்ணின் அழகில் மயங்கி இவரும் அவளும் ஊரை விட்டு வெளியேறுகின்றனர். இதை எதிர்க்க வந்தவர்களை வெற்றிக் கொண்டு, பின்னர் பல கள்வர்களை அடக்கினார். அதற்குப் பிறகு கள்ளர் இன பெண் வெள்ளையம்மாள் மதுரை வீரனைக் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இந்நிலையில் கைது செய்து மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்குள் மதுரை வீரனைப் பிடித்து மாறுகால், மாறுகை என்னும் முறையில் கொலை செய்து விடுகின்றனர்.

9. வேடியப்பன்:
இது கிருஷ்ணகிரி, தர்மபுரி போன்ற ஊர்களில் இருக்கும் நடுகல் தெய்வம். முன்னோர்கள் பெயர்களை அறிந்தில்லாமல் இருப்பவர்கள் இவரை தங்களது முன்னோராக நினைத்து வழிப்படுகிறார்கள்.

10. கொல்லிமலை மாசி பெரியண்ணசாமி:
இந்தக் கோயில் திருச்சி, நாமக்கல் மாவட்ட எல்லையில் இருக்கிறது. இங்கே உயிரோடு கோழியை ஒரு கம்பியில் கட்டிவிட்டு, தங்களை ஏமாற்றியவர்களுக்குத் தகுந்த தண்டனைக் கொடுக்கும்படி வேண்டிச் செல்கிறார்கள்.

11. பாடிகார்ட் முனீஸ்வரர்:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் போகும் வழியில் இருக்கும் பிரபலமான கோயில் இது. ஒரு நாளில் நூற்றுக் கணக்கான (புது) வாகனங்களுக்கு இங்கே பூஜைப் போடப்படும், படையல் வைக்கப்படும்.

12. கன்னிமார்:
ஏழு என்கிற எண்ணுக்குப் பல முக்கியத்துவம் சொல்லப்படுகிறது. எங்கேயாவது ஏழு நடுகல் இருந்தால், அவற்றைச் சப்தக் கன்னிமார்களாக வழிபடுகிறார்கள். கன்னிமார் வழிபாடு, ஒரு தொன்மையான வழிபாடு, சிந்து சமவெளியில் கூட இருந்திருக்கலாம்.

13. கோவிலாங்குளம் பட்டவன்சாமி கோவில்:
வளரி வைத்து வழிப்படும் சமுக கடவுள் இவர். இங்கே வழிபடுகிறவர்களின் தலையில் அறுவாளை வைத்து வாழ்த்துவார்கள்.

14. கீழக்குயில்குடி வீரத்தேவர் / பட்டவன் சுவாமி:
இவர் 1311இல் மாலிக் கபூர் போரில் மன்னரைக் காக்க, தனது உயிரை இயந்த ஒரு தலைவர்.

15. வாரப்பூர் பில்லி சுனிய திருவிழா:
ஆலங்குளம் என்கிற ஊர் அருகே நடக்கும் வருட விழா. முன் காலங்களில் குடும்பத்தில் (சின்னப் பையன்) ஒருவனைப் பலிக் கொடுத்துக் கொண்டிருந்தனர். பின்னர் அவை நிறுத்தப்பட்டு திருவிழா மட்டும் தொடர்கிறது.

16. முத்துபட்டன்:
இவர் ஒரு பிராமணர், ஆனால் வீரர். ஒரு நாள், பம்மக்கா, பிம்மக்கா என்கிற பெண்கள் பாடும் பாட்டைக் கேட்டு அவர்கள் மீது காதல் கொண்டு, கல்யாணம் செய்ய ஆசைப்படுகிறார். அதற்காக அவர்களின் தந்தைப் போடும் நிபந்தனைகளை (மீசை வளர்க்க வேண்டும், மாட்டைக் கொல்ல வேண்டும் மற்றும் பல) எல்லாம் செய்து மணக்கிறார். ஆனால் சதியால் கொல்லப்படுகிறார், அவரின் மனைவிகளும் உடன்கட்டை (அரசரின் ஒப்புதலோடு) ஏறுகிறார்கள்.

திரௌபதியும் அரவானும், குலசேகரபட்டினம் முத்தாரம்மன், சமயபுரம் மாரியம்மன், முத்துபட்டன்

திரௌபதியும் அரவானும், குலசேகரபட்டினம் முத்தாரம்மன், சமயபுரம் மாரியம்மன், முத்துபட்டன்

17. ஹைகோர்ட் மகாராஜா:
இவர் ஒரு சுடலை மாட சாமி. சின்னா என்கிற சிறுவன் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வரவிடாமல், கடத்தப்படுகிறார். இருந்தும், சாமி அவருக்காக அவர் உருவில் வந்து சாட்சிச் சொல்கிறது.

18. பொன்னர் சங்கர்:
இது ஒரு பிரபலமான கதை. அண்ணன், தம்பியின் வீர கதை இது.

19. சிவன் மலை ஆண்டவர்:
இங்கே இருக்கும் கண்ணாடி பேட்டியில் கனவில் வரும் பொருட்களைக் காணிக்கையாக வைக்கிறார்கள். இது ஒரு முருகப் பெருமான் திருக்கோயில்.

20. பலவேசக்காரன்:
இதுவும் ஒரு சுடலை மாட சாமி கோயில். இவருக்குப் பலவித வேஷங்கள், ஆடைகள் அணிவித்து வணங்குகிறார்கள்.

21. மண்ட கருப்பு:
கருப்பு சாமியின் ஒரு வகை.

22. சுடலை மாடன் நீராவி சுடாலி:
இவர் சுடுகாட்டை, நீர் நிலைகளைக் காக்கும் தெய்வம். மயானக் கொள்ளை நடக்கும்.

23.சீவலப்பேரி சுடலை:
சீவலப்பேரி சுடலைமாடசுவாமி கோவில் திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

24. திரௌபதியும் அரவானும்:
இது தமிழகம், கடலோர ஆந்திரா, கர்நாடகா, பாலி, போன்ற இடங்களில் மிகப் பிரபலம். அரவான், வியாச பாரதத்தில் ஒரு சிறிய பாத்திரம், ஆனால் இங்கே அது முக்கிய பாத்திரம்.

25. குலசேகரபட்டினம் முத்தாரம்மன்:
இவர் தமிழ் வழி மரபில் சொல்லப்பட்ட சிவன், பார்வதி. ஒரு பணக்காரர் தனக்கு வந்த அம்மை நோய் தீர வழிப்பட்டு, கட்டிய கோயில் இது. தசரா பண்டிகை இங்கே பிரபலம்.

26. சமயபுரம் மாரியம்மன்

இசக்கியம்மன், அங்காளம்மன், மாசாணியம்மன்

இசக்கியம்மன், அங்காளம்மன், மாசாணியம்மன்

27. அங்காளம்மன்:
இவருக்குத் தமிழ்நாட்டில் பல இடங்களில் கோயில்கள் உண்டு. இங்கே பெண்களும் சுடுகாட்டிற்குப் போகும், மயானக் கொள்ளை வழக்கும் உண்டு.

28. இசக்கியம்மன்:
பொதுவாகக் குழந்தையை கையில் வைத்துக் கொண்டிருக்கக் கூடிய வடிவத்தில் இருக்கிறார் இவர். தந்தையே, மகளையும், மனைவியையும் வேறு ஒருத்திக்காகக் கொலை செய்கிறார், அவரைப் பழி வாங்க, பேயாக வந்து பழையனூர் ஊரில் தண்டனைக் கொடுக்கிறார்.

29. மாசாணியம்மன்:
மாசமான பெண் ஒருத்தி, சாமி மரம் ஒன்றிலிருந்து மாங்காய் பறித்துத் தின்கிறாள். அதற்காக கொல்லப்படுகிறாள். அவளின் சாபம் தங்களை எதுவும் செய்யக்கூடாது என்பதற்காக அவளை சாமியாக வழிபடுகிறார்கள்.

30. பேச்சியம்மன்

31. சீதளாதேவி அம்மன்:
இவரின் கோயிலில் மழை வர வேண்டிக் கொள்கிறார்கள். தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் வணங்கும் கோயில் இது.

32. பாஞ்சாலங் குறிச்சி ஜக்கம்மா:
குறிச் சொல்லும் சமூகத்தினர் வழிப்படும் குலத்தெய்வம். வீர பாண்டியக் கட்டப்பம்மன் குடும்பத்தினர் வணங்கிய தெய்வமும் கூட.

33. குழுமாயி அம்மன்:
திருச்சியில் நடக்கும் புத்தூர் திருவிழா, உருவம் கிடையாது. ஒரு நாளில் இங்கே ஆயிரம் கடாக்கள் கூட வெட்டப்படும். முதல் கடா தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும்.

34. பெரியநாயகி மாதா தேவாலயம்:
வீரமாமுனிவர் ஏற்பாடு செய்த கோயில், அங்கே இருந்த மக்களுக்குக் கிறிஸ்தவக் கடவுளின் பெயர்கள் புரியவில்லை என்பதால், அங்கே இருந்த இந்து பெரியநாயகி அம்மனை கிறிஸ்தவக் கடவுளாக மாற்றப்பட்டதாக இருக்கலாம்.

35. இருக்கன் குடி மாரியம்மன்:
இது இரு தீவில் அமைந்திருக்கிறது. முன்னோர்கள் பெயர்களை அறிந்தில்லாமல் இருப்பவர்கள் இவரை தங்களது முன்னோராக நினைத்து வழிப்படுகிறார்கள்.

36. கொல்லங்குடி வெட்டுடையார்காளி:
வேலு நாச்சியார் இருக்கும் இடத்தை ஆங்கிலேயர்களுக்குக் காட்டிக் கொடுக்க மறுத்ததால் கொல்லப்பட்டவர் நினைவாக உருவான கோயில்.

37. தீப்பாஞ்சம்மன்:
தீயில் விழுந்து இறந்தவர்களை நினைத்து வழிபடும் கோயில்.

38. பாம்பு வழிபாடு

39. புத்து மாரியம்மன்:
குழந்தை வரம் வேண்டி இங்கே இருந்து மண்ணை எடுத்து வீட்டில் வைத்து வழிபடுகிறார்கள்.

40. பாவாட ராயன்:
இவர் தனது நாக்கை அறுத்துக் கொடுப்பவர்.

இரண்டு மணி நேரங்கள் சென்றதே தெரியவில்லை. திருச்சி பார்த்தி அவர்களின் பேச்சில் அப்படி ஒரு வேகம், ஆழம், எளிமை, எடுத்துக் கொண்ட தலைப்பின் மீது அவருக்கு இருக்கும் ஆர்வம் – அவரைப் பற்றி எனக்கு அறிமுகம் இல்லை, ஆனால் இந்த உரைக்குப் பின் இருக்கும் அவரின் வாசிப்பு மற்றும் உழைப்பு யதார்தமாகத் தெரிந்தது.

காணொலி பாகம் – ஒன்று:

காணொலி பாகம் – இரண்டு:

 

Tagged in:

, ,