
Sinthai Kavarntha Thiruvizhakkal
நல்லவனுக்கு மட்டும்தான் வாழ்க்கை திருவிழாவாகிறது – ரால்ப் வால்டோ எமர்சன்.
ஊரெல்லாம், சமூக வலைத்தளங்களில், செய்திகளில் “கொரோனா, கொரோனா” என்ற அச்சப் படுத்திக் கொண்டிருக்கும் போது – உலகத்தின் மீதும், மக்களின் மீதும், நம்பிக்கையை, நமக்கு கிடைத்துள்ள இந்தப் பொன்னான வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று உணர்த்தும் வகையில் நடந்தது இந்த நிகழ்ச்சி.
என்ன நிகழ்ச்சி என்று கேட்கிறீர்களா? திருமதி சாந்தகுமாரி சிவகடாட்சம் அவர்களின் புதிய பயணக்கட்டுரைத் தொகுப்பான “சிந்தை கவரும் திருவிழாக்கள்” என்ற நூல் வெளியீட்டு விழா தான் அது.
புத்தகங்களைப் படிப்பது குறைந்திருக்கும் இன்றைய காலத்தில், புத்தகங்களை வாங்குவது என்பதே அரிதாகவிட்டது, ஒரு புத்தகத்தை விற்பனைக்கு எடுத்துச் சென்று சாதிப்பது மிகப் கடினமான ஒன்று, அப்படிப்பட்ட சூழலில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்குப் பார்வையாளர்கள் வருவதே மிகவும் அரிது – இதையெல்லாம் முறியடிக்கும் விதத்தில் இருந்தது நேற்றைய (14 மார்ச் 2020) மாலையில் நடந்த புத்தக வெளியீட்டு விழா.

ரம்மியமான மாலைப் பொழுதில், சென்னை கோட்டூர்புரத்தில், மாளிகை போன்ற ஒரு வீட்டின் புல்தரையில் அற்புதமான நிகழ்ச்சியாக இது நடந்தது. நிகழ்ச்சியில் முன்னிரண்டு வரிசையில் சென்னையின் பிரபலமானவர்கள், முக்கியஸ்தர்கள், எழுத்தாளர்கள் எனப் பலர் வந்திருந்து சிறப்பித்தார்கள். இவர்களோடு திருமதி சாந்தகுமாரியின் வாசக விசிறிகள் பலரும் வந்திருந்தார்கள்.
டாக்டர் சிவகடாட்சம் மற்றும் திருமதி சாந்தகுமாரி அவர்களும் எங்கள் குடும்ப நண்பர்கள்.
திருமதி சாந்தகுமாரி பல ஆண்டுகளாக உலகத்திலுள்ள பல இடங்களுக்குச் சென்று, பார்த்து, ரசித்து, அனுபவித்து எண்ணற்ற பயணக் கட்டுரைகளும், திரு சாவி அவர்களுக்கு அடுத்து சுவையாக பயணக் நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். அந்த வரிசையில் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாகத் (81 வாரங்கள்) தினமணி நாளிதழில் வாரம்தோறும் வந்த அவரின் பயணக் கட்டுரையின் தொகுப்புதான் இந்த நூல்.

“சிந்தை கவரும் திருவிழாக்கள்” என்று தலைப்பிடப்பட்ட இந்த நூலில் உலகத்தின் பல்வேறு பகுதிகளில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்த திருவிழாக்களுக்குச் சென்று அவற்றைப் பற்றி விலாவாரியாக, அவற்றின் வரலாற்றையும் எழுதியுள்ளார் ஆசிரியர். நானும் ஒன்றிரண்டு திருவிழாக்களுக்கு இந்தியாவிலும், வெளிநாட்டிலும் சென்றிருக்கிறேன், அந்த அனுபவத்தில் 32 திருவிழாக்கள் என்றால் மலைப்பாக இருக்கிறது, கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கிறது!
திருவிழாக்கள் என்றால் நாம் ஏதோ சாதாரணமாக நினைத்துக் கொள்வோம், ஆனால் அங்கே போன பிறகு உங்களுக்கே அது ஒரு புது அனுபவமாக, புத்துணர்ச்சி ஊட்ட கூடியதாகவும், ஒரு விவரிக்க முடியாத ஒரு சந்தோஷத்தைக் கொடுக்க கூடியதாகவும் இருக்கும்.
திருவிழாவின் லட்சியமே வாழ்வை மகிழ்ச்சியாக வைத்திருப்பது தான். உயிருடைய நோக்கமே மகிழ்ச்சியாக இருப்பது – திருமதி சாந்தகுமாரி

நேற்றைய விழாவில் முதலில் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் கோ விசயராகவன் அவர்கள் நூலிலிருந்து பல கட்டுரைகளை மேற்கோள் காட்டினார்: முதல் கட்டுரை, அகமதாபாத்தின் காத்தாடி திருவிழா, அதில் வஞ்சிரம் கலந்த மாஞ்சாவை செய்யும் முறையில் ஆரம்பித்து காத்தாடி விடிவதைப் பற்றி ஒரு பத்து வயது சிறுமியின் கண்களால் பார்த்து, பிரமித்துச் சொல்லியுள்ளார் திருமதி சாந்தகுமாரி.
பிறகு பேசிய எனது நண்பர் திரு ந. அருள் (இயக்குனர், மொழிபெயர்ப்புத் துறை) அவர்கள் புத்தகத்தை எப்படி ரசித்து படித்தார் என்பதைப் பகிர்ந்தார்: “சங்க காலத்தில் இருந்தே திருவிழாக்கள் கொண்டாடப்பட்டிருக்கின்றன. அதில் இந்திரவிழா என்பது மிக விமரிசையாக இருபத்தெட்டு நாட்கள் கொண்டாடப்பட்டதாக சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை காப்பியங்கள் எடுத்துரைக்கின்றன”. அதன் அடிப்படையில் தான் இளங்கோ அடிகளின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24 என்று நான் கணித்தேன். புத்தகத்தில் வரும் வண்ணப்படங்கள் ஒவ்வொன்றும் அழகாக இருக்கிறது, அதற்கு காரணம் படங்களை எடுத்த எங்கள் டாக்டர் சிவகடாட்சம், அவரின் ஒரு படத்தைப் பார்த்தால் அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு விரைவில் தேடிவரும் என நம்புகிறேன்.
விழா தலைமை தாங்கிய திரு தமிழருவி மணியன் ஒரு “பல்கலைக்கழக” அருவியாக பொழிந்தார். புத்தரில் தொடங்கி இஸ்லாத்தை தொட்டு, ஆங்கில எழுத்தாளர்களுக்குச் சென்று, பதஞ்சலி யோகத்தையும் செய்து (பேசி), ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்களையும் நினைவுக்கூர்ந்து, புத்தகத்தில் அவர் விரும்பிய பகுதிகளையும் சொல்லி, பார்வையாளர்கள் அனைவரையும் சிந்திக்க வைத்தார்:

அவர் பேசியதில் இருந்து நான் எழுதிக் கொண்ட சில வரிகள் கீழே (இது முழுமையானது இல்லை, என் குறிப்புகள் மட்டுமே இவை, பிழை இருப்பின் அது என் தவறு):
- “Life is a festival” says OSHO
- ஒன்றை வாசிப்பது மட்டும் பயன் தராது, அதைப் பற்றி யோசிக்கும் போது தான் அது பயன் தரும்
- இருளை இருளால் விரட்ட முடியாது, ஒளியால் தான் முடியும். அதே போல் பகைமையை, பகைமையால் விரட்ட முடியாது, அன்பால் தான் முடியும். ரசவாதம் – நீங்கள் பல பறவைகளோடு பழகினாலும் நீங்கள் ஒரு பறவையாக முடியாது, நீங்கள் பல நதிகளோடு நடந்தாலும் நீங்கள் நதி ஆக முடியாது, ஆனால் நீங்கள் பல புத்தகங்கள் படித்தால், நீங்களே ஒரு புத்தகமாக ஆகிவிடுகிறீர்கள்.
- நாம் பலரும் பார்க்கிறோம், நோக்குவது இல்லை, கேட்கிறோம் கவனிப்பதில்லை, தொடுகிறோம் உணர்வதில்லை, காற்றை உள்வாங்குகிறோம் சுவாசிப்பதில்லை, உண்ணுகிறோம் சுவைப்பதில்லை, பேசுகிறோம் சிந்திப்பதில்லை – லியனாடோ டாவின்சி (Leonardo da Vinci)
- The time to be happy is now, the place to be happy is here, the way to be is to (make others so) give to others. By Robert Green Ingersoll.
- இந்த நொடி நமக்கானது, அடுத்த நொடி அதைப் பற்றி நமக்குத் தெரியாது.
- அலைச்சல் என்கிற கவிதை, கல்யாண்ஜி என்ற வண்ணதாசன் அவர்கள் எழுதியது: இக்கரைக்கும் அக்கரைக்கும், பரிசல் ஓட்டிப், பரிசல் ஓட்டி, எக்கரை என்கரை என்று மறக்கும், இடையோடும் நதி மெல்லச் சிரிக்கும்
- இந்தியாவில் இருந்து புத்த மதம் விரட்டப்பட்டது, அது சீனா, கொரியா வழியாக ஜப்பான் சென்றது, அங்கே எழுதப்பட்டுள்ள ஜென் (Zen) கவிதைகள் அற்புதமானவை, அவற்றைப் படியுங்கள்.
- ஒரு விசயம் பாமர, படிக்காத மக்களுக்கும் சென்று சேர வேண்டுமானால் அவர்களது அன்றாட மொழியில் இருக்க வேண்டும், அதனால் தான் புத்தரும் பாலி மொழியில் பேசினார். அதைப் போல ஒரு நூலும், அதுவும் பயணக்கட்டுரை நூல் எல்லோருக்கும் படிக்கும் வண்ணம் இருக்க வேண்டும் என்றால் அதற்கு எழுத்தாளரின் நடை (Style) மிக முக்கியம் – அப்படியான ஒரு எளிய, தங்கு தடையின்றி போகும் நடை திருமதி சாந்தகுமாரி அவர்களுக்கு இயல்பாக இருக்கிறது.
- புத்தரின் போதனைகள், “அங்குத்தர நிக்காய” என்கிற தொகுப்பில் சொல்லியுள்ள வாழ்வின் ஐந்து பேருண்மைகள்: 1) உனக்கும் முதுமை வரும் 2) நீயும் ஒரு நாள் நோய்வாய்ப்படுவாய், 3) உனக்கும் இழப்பு வரும், 4) உனக்கும் மரணம் வரும், 5) உனது செயலே உனது காரணம். [Gautama Buddha revealed the five big truths of life in “Anguttara Nikaya” to his disciples – 1) you will get old, 2) you will also get ill, 3) you will also face a loss, 4) you will die, 5) your action is your cause]
- புத்தர் சொன்ன மிகப் பெரிய உண்மை “நீங்களும் புத்தர் ஆகலாம்”, ஆனால் அவர் வாழ்ந்து 2600 ஆண்டுகளுக்குப் பின்னும் நம்மால் இன்னொரு புத்தரைக் காணமுடியவில்லை.
- நபி நாயகம்(ஸல்) [Prophet Muhammed] அவர்களது கடைசி சொற்பொழிவில் தனது மக்களிடம் சொன்ன மூன்று கருத்துக்கள்: அடிமைகளை விடுவியுங்கள் (Free the slaves), நோயாளிகளைச் சென்றுப் பாருங்கள் (Go and see the sick), பசித்தவர்களுக்கு உணவளியுங்கள் (Feed the hungry).
- பதஞ்சலி (Patanjali) யோக சூத்திரத்தில் (yoga sutras) சொல்லுகிறார், மனிதன் அனைவருக்கும் மூன்றே மூன்று (மூல) உணர்ச்சிகள் தான், அவை – மகிழ்ச்சி, பயம் மற்றும் வெறுப்பு (Happiness, Fear and Hatred).

இறுதியில் ஏற்புரை வழங்கி பேசிய திருமதி சாந்தகுமாரி, எப்படி தினமணி ஆசிரியர் திரு வைத்தியநாதன் அவர்கள் தற்செயலாகத் தன்னை ஒரு விழாவில் பார்த்து, இந்தக் கட்டுரைகளை எழுத தனக்கு வாய்ப்பளித்தார் என்றும், பயணங்கள் செல்ல எப்படி கணவர் திரு சிவகாடாட்சம் பெரிதும் துணையிருந்தார் எனவும் சொன்னார்.
மேலும் ஒரு முறை மதுரை மீனாட்சி அம்மனின் திருவிழாவைப் பற்றி எழுத எண்ணியிருந்தப் போது, அவர்களுக்கு மிகவும் தெரிந்த ஒரு நபர், மீனாட்சியின் பரம பக்தர், திடீர்யென புற்று நோயால் அவதிப்பட்டு இறந்தார் என்ற செய்தி வந்ததால் கலக்கமுற்ற நூல் ஆசிரியர், மதுரையைப் பற்றி எழுதுவதை விட்டு, வேறு ஒரு திருவிழாவை எழுதலாம் எனத் தொடங்க, அப்போது அவருக்கு விடையளிக்கும் விதமாக ஒரு WhatsApp குறுஞ்செய்தி வந்ததையும், அது மனக்கலக்கத்தை விளக்கியதாகவும் விவரித்தப் போது, கேட்ட நமக்குப் பரவசமாக இருந்தது.
புத்தகத்தைப் பற்றி மேலும் சொல்லத் தோன்றுகிறது, ஆனால் விழாவில் தலைமை தாங்கி உரையாற்றிய திரு தமிழருவி மணியன் அவர்கள் கூறியது – புத்தக விழாவில் புத்தகத்தில் உள்ள அனைத்து விஷயங்களையும் சொல்லக்கூடாது ஒன்றிரண்டை மட்டும் கோடிட்டுக் காட்டிவிட்டுச் சென்றால்தான் புத்தகம் விற்பனையாகும் – நினைவுக்கு வந்ததால் மேலும் சொல்லாமல் நிறுத்தி விடுகிறேன்.
“சிந்தை கவரும் திருவிழாக்கள்” புத்தகத்தை வாங்கிப் படியுங்கள், அதில் குறிப்பிட்டுள்ள திருவிழாக்களுக்குச் சென்று குடும்பத்தோடு மகிழுங்கள்.
தொடர்புக் கொள்ள: shanthisiva12@gmail.com மற்றும் செல்பேசி: +91 87544 31007
Update 19 மார்ச் 2020: விழாவின் காணொளிப் பதிவுகள் கீழே:


2 Comments
Vasuki Egyasamy
வர்ணிக்க வார்த்தைகள் இல்லை
அருமை அழகான தமிழில் மெய் மறந்து போனேன்
அந்த நாளை மிக மிக இனிய நாளாக மாற்றிய தங்களின் குடும்பத்தினருக்கும் ஆச்சிக்கும் தமிழருவிக்கும் மற்றும் அனைவருக்கும் என் உளமாற நன்றி தெரிவித்து வாழ்த்தி மகிழ்கிறேன்
K. Venkatesan
Dr.sivagadatsam welcome address is very super.open atmosphere is excelent. Tamilaruvi manian speech nice.acceptance speech very excelent.aachi hospitality is good.vote of thanks very very excelent we enjoyed the meeting thank u sir