திருமதி சாந்தகுமாரி சிவகடாட்சம் அவர்கள் எழுதியுள்ள “மரங்களும் மனிதர்களும்” ஒரு சிறுகதைத் தொகுப்பு. “கம்ப்யூட்டர் கிராமம்” கதையில் ஒரு மரத்தை வைத்து அறிவியல் சொல்லியிருப்பார் எழுத்தாளர் திரு சுஜாதா, அதுப் போல இங்கேயுள்ள பத்துக் கதைகள் செய்துள்ளார் நூலாசிரியர் – ஒவ்வொரு கதையும் ஒரு மரத்தை மையமாக வைத்துப் புனையப்பட்டுள்ளது. வெறும் மரத்தைப் பற்றி எழுதினால் அது ஒரு தாவரவியல் பாடமாக மாறி அலுப்புத் தட்டும், அதற்காகவே ஒவ்வொரு மரத்தைச் சுற்றியுள்ள மனிதர்களின் வாழ்க்கையை, அவர்களின் குடும்பத்தின் சுக, துக்கங்களை சுவாரஸ்யமாகக் கலந்துள்ளார்.
எல்லாக் கதைகளும் அபாரம். ஆனால், ஏனோ பெரும்பாலானக் கதைகளில் ஒரு சோகம் இழையோடுகிறது – அது கதைகளுக்குப் பொருத்தமாகத் தான் இருக்கிறது, ஆனாலும் நம் கண்களை ஈரமாக்குகிறது.

முதல் கதை “முருங்கை மரம்” : குமணன்-கற்பகம் ஒரு எடுத்துக்காட்டான தம்பதியினர், குமணன் பல வருடங்களாகவே ஒரு முருங்கை மரத்தை ஆசையாக வளர்க்கிறான், அவன் அம்மாவைக் கூட நம்ப மாட்டான், அவனே தான் அந்த மரத்திற்குத் தண்ணீர் ஊற்றி, பாதுகாத்து வளர்க்கிறான். இப்படி ஆரம்பித்துப் போகிறது கதை. ஆசிரியர் மரத்தை எப்படி அழகாக வர்ணிக்கிறார் பாருங்கள்:

அந்த மரத்தின் கிளைகள், மல்லிகைப்பூவின் மொக்குகளைப் போலச் சில முருங்கைப் பூக்கள், மலர்ந்த நிலையில் சில, சணல் கயிற்றைப் போலத் தொங்கிக் கொண்டிருக்கும் பிஞ்சு முருங்கைக்காய்கள், பச்சைப்பசேல் என்று இரண்டடி நீளத்திற்கு வளர்ந்து பறிக்கும் பதத்தில் இருக்கும் காய்கள் என்று அந்த முருங்கை மரத்தின் கிளைகள் பன்முகம் காட்டி நின்றன.

மரத்தை மட்டுமில்லை, முருங்கையிலிருந்து செய்யும் உணவையும் அவற்றைச் சாப்பிடும் ரசனையையும் கூடத் தெளிவாகப் படம் பிடித்து காட்டுகிறார் நூலாசிரியர்:

குழம்பைச் சோற்றில் பிசைந்து பெரிய உருண்டையாக்கி விழுங்கத் தொடங்கினான், குமணன், நடுவே ஒவ்வொரு முருங்கைத்துண்டுகளாக எடுத்து, ஆட்டு நல்லியை உறிஞ்சுவதுப் போல உறிஞ்சி பிறகு இலையில் வைத்து, துண்டைப் பிதுக்கி, உள்ளே இருக்கும் மிருதுவான பாகத்தை விரல்களால் வழித்து ருசித்துச் சாப்பிட்டான்.

இரண்டாவது கதை “ஆல மரம்”, இதில் மரம் காதல் கொள்கிறது, எப்படியா? படித்துப் பாருங்கள் தெரியும்.

மூன்றாவது கதை “வேப்ப மரம்”, இதில் அந்த மரம் எப்படி “வேப்பந்தாயி” ஆகி அதிருக்கும் வீட்டின் குடும்பத்தைக் காக்கிறது.

இதுவரை இருக்கும் கதைகளிலிருந்து மாறுபட்டு, தேனைப் போல் இனிக்கும் அந்த ஊரே மெச்சும் பலாப்பழத்தைக் கொடுக்கும் ஒரு “பலா மரம்” தான் நாலாவது கதை.

பனை மரம்” – இதொரு தமிழ் தொலைக்காட்சி சீரியல் கதைப் போல் விரிகிறது.

தென்னை மரம்” – கதையின் நாயகன் ஏழைக் கூலி மாரிமுத்துவுக்கு அவனின் யாழ்ப்பாணத்துத் தென்னை மரமென்றால் அப்படி ஒரு பிரியம். அது எப்படி அவனுக்கு உதவுகிறது என்றுச் சொல்கிறது ஆறாவது கதை.

மரங்கள் என்றால் வளர்ந்து நிற்கும் பெரிய மரங்கள் மட்டுமல்ல, சின்னஞ்சிறிய போன்சாய் (Bonsai) மரமும் “அரச மரம்” என்கிற கதையில் உண்டு.

“தேக்கு மரம் போல உடம்பு” என்று கேட்டியிருக்கிறோம், ஆனால் உண்மையில் தேக்கு மரத்தை நாம் பலர் பார்த்திருக்க மாட்டோம், அப்படியான தேக்கு மரமிருக்கும் ஒரு தோட்டத்திற்கு அழைத்துச் செல்கிறது எட்டாவது கதையான “தேக்கு மரம்”.

முருங்கை கதையில் சமைத்த உணவைப் பற்றி எழுதிய நூலாசிரியர், “இலந்தை மரம்” என்கிற கதையில் சுவையான இலந்தை வடையை எப்படிச் செய்வது என்கிற செய்முறை விளக்கத்திற்காக முல்லைக்கொடி என்கிற கிராமத்தில் மரத்தடி கடை நடத்தும் கங்கம்மாவின் வீட்டிற்கே கூட்டிச் செல்கிறார்.

கடைசி கதையான “புளிய மரம்” ஊர் ஊராகச் சென்று பாசி, ஊசிகள் விற்கும் நாடோடிகளின் கதை, இது தமிழ் சினிமாவில் வரும் ஒரு காட்சிப் போல் விரிகிறது. நாயகி ஊஞ்சல் ஆடுவதைப் பற்றிப் படிக்கும் போது நம் மனதில் ரோஜாப் படத்தில் வரும் மதுபாலா பாடும் “சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை” என்கிற பாடல் கேட்கிறது.

இப்படிப் பத்து அருமையான கதைகளைக் கொண்ட ஒரு நூலைப் படிக்காமல் விட்டுவிடாதீர்கள்.

அனைவரும் படித்து ரசிக்கக் கூடியதாக இருந்தாலும், நகரங்களில் பிறந்து வளர்ந்து மரங்களைப் பற்றியே அதிகம் தெரியாமல் இருக்கும் என்னைப் போன்றவர்கள் இந்தப் புத்தகத்தைப் பெரிதும் ரசிப்பார்கள்.

இந்தப் புத்தகத்தைப் படித்தப் பின் முடிந்துவிட்டதே, மேலும் பல கதைகள் இருந்திருக்கலாமே என்று ஆசைப்படுவோர், மரத்தை நாயகமாக வைத்து எழுதப்பட்ட திரு சுந்தர ராமசாமியின் அவர்களின் “ஒரு புளியமரத்தின் கதை” என்கிற இலக்கியப்படைப்பை (அப்படித் தான் அந்த நாவலைச் சொல்லவேண்டும்) படிக்கலாம்.

தொடர்புக் கொள்ள: shanthisiva12@gmail.com மற்றும் செல்பேசி: +91 87544 31007

நலமாக வாழுங்கள். வாழ்க!

Categorized in:

Tagged in:

, ,