நான் எழுத நினைத்து, சோம்பேறித்தனத்தால் மிகத் தாமதமான வலைப்பூ இது. இந்தாண்டு ஜனவரி மாதத்தில் வழக்கம் போல் சென்னை புத்தகக்காட்சி நடந்தது. 27 ஆண்டுகளைக் கடந்து, இது 28ஆவது ஆண்டு. சில வருடங்களாய் இங்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருப்பது புத்தகத்துறைக்கு நல்ல ஒரு விஷயம்.

புத்தகம் வாங்குவது (படிக்கிறேனா இல்லையா என்பது வேறு விஷயம்) எனக்கு மிகப் பிடித்த விஷயம். அதே போல இந்தாண்டும் நிறைய வாங்கினேன். அதில் நான் ரசித்த புத்தகம், சரியாகச் சொல்வதென்றால் ஒலிப்புத்தகம் – குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாமின் “அக்னிச்சிறகுகள்” ஒலிப்புத்தகம் (Dr.A.P.J.Abdul Kalam’s Wings of Fire Audiobook).

ஆ.ப.ஜெ.அப்துல் கலாமின் வாழ்க்கைச்சரித்திரத்தை மிக அழகாகக் குறுக்கி, தனது கம்பீரமான குரலில் அற்புதமாக படைத்துள்ளார் கவிஞர் வைரமுத்து. கலாமின் முழுப் புத்தகத்தைப் படித்திருந்தாலும் நான் இந்தளவு ரசித்திருப்பேனா என்பது சந்தேகம். பல வாரங்கள் என் வாகனத்தில் இந்த ஒலித்தட்டைக் கேட்டுக்கொண்டே இருந்தேன்.
ஒலிப்புத்தகத்தில் பல நல்ல விஷயங்களிருப்பினும் என்னை மிகவும் பாதித்த வரிகள்:

சரிவுகளின் அழகைப் பருகியவாறே மலையுச்சியை நோக்கி நடப்பதில் தான் ஒரு இனிமை இருக்கிறது.
சரிவுகளில் ஜீவிதம் இருக்கிறது. சிகரத்தில் அல்ல.
சரிவுகளில்தான் எல்லாமும் வளர்கின்றன. அனுபவம் கிட்டுகிறது. நிபுணத்துவம் சாதிக்கப்படுகிறது.
சரிவுகளைத் தீர்மானிக்கிறது என்ற அளவில் சிகரத்தின் முக்கியத்துவம் நின்று போய்விடுகிறது.

"அக்னிச்சிறகுகள்" ஒலிப்புத்தகம்

“அக்னிச்சிறகுகள்” ஒலிப்புத்தகம்

டாக்டர் அப்துல் கலாம் போன்றொரு வெற்றி மனிதரின் சரித்திரம் கேட்கும் ஒவ்வொருவரையும் சாதனைச் செய்ய மட்டுமன்றித் தினம் வரும் சோதனைகளையும் கடக்க ஊக்கப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.


24 பிப்ரவரி 2022:

டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் காமிக்ஸ்

சிறுவர்கள் இந்தப் புத்தகத்தை எளிதாகப் படிக்கும் வகையில் “அமர் சித்ர கதை” (Amar Chita Katha) நிறுவனம் படக்கதையாக (காமிக்ஸ்) வெளியிட்டியுள்ளது. ரூ 150க்கு (10% தள்ளிபடி உண்டு) சென்னை புத்தகக் காட்சி 2022யில் அவர்களின் அரங்கில் கிடைக்கிறது.

Categorized in:

Tagged in:

,