அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா கண்டங்களில் சில நாடுகளுக்கு நான் போய் இருக்கிறேன். ஆனால் இதுவரை மனிதக் குலத்தின் தொட்டிலான ஆப்பிரிக்காவுக்குப் போனது இல்லை. ஏனோ அதற்கு வாய்ப்பு வரவில்லை. அதனால் ஆப்பிரிக்காவைப் பற்றிய நண்பர்களின் பேஸ்புக் பதிவுகளாகட்டும், யூ-ட்யூப் வீடியோக்களாகட்டும் கண்ணில்பட்டால் கூடுதல் ஆர்வத்தோடு பார்ப்பேன்.

காலனிய ஆதிக்கக்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து பல கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளுக்கு இந்திய மக்கள், கொத்தடிமைகளாக / கூலித் தொழிலாளர்களாய் போய் அங்கேயே தங்கி, இன்றைக்கு எண்ணிக்கையில் உணரக்கூடிய அளவில் இருக்கிறார்கள், இருந்தும் பெரும்பாலான தமிழக (இந்திய) மக்களுக்கு அவர்களைப் பற்றி, அந்த நாடுகளைப் பற்றித் தெரிந்திருப்பதில்லை என்பது எனக்கு வருத்தமே.

பயணக் கட்டுரைகளுக்குத் தமிழில் பஞ்சமேயில்லை: முன்னோடியான திரு ஏ.கே.செட்டியார் தொடங்கி, தி. ஜானகிராமன், சாவி, இதயம் பேசுகிறது மணியன் என வளர்ந்து, திருமதி சாந்தகுமாரி சிவகடாட்சம் வரை தொடர்கிறது. இவர்களில் பலரும் அங்கே பயணிகளாகப் போய் வந்தவர்கள். அங்கேயே சில, பல ஆண்டுகள் வாழ்ந்து, ஒரு தமிழரின் பார்வையில் அந்த நாட்டை, மக்களைப் பற்றி விவரமாக எழுதியவர்கள் குறைவே என நினைக்கிறேன்.

இந்த இரண்டு குறைகளுக்கும் பதில் சொல்லும் வகையில் ஒரு தொடர் எனக்கு இன்று அகப்பட்டது, தீவிரத் தமிழ் இணைய வாசகர்களுக்கு முன்பே தெரிந்திருக்கும். தான்ஸேனியா நாட்டில் வேலைக்காக எட்டு ஆண்டுகளாக அங்கே வாழும் திரு பாலசுப்ரமணியம் முத்துசாமி அவர்களின் ஆப்பிரிக்க டயரி குறிப்புகள் தொடரைப் பற்றித் தான் சொல்கிறேன். ஒரு கட்டுரையைப் படித்ததும் நிறுத்த முடியாமல், இதுவரை ‘சமஸ்’ அருஞ்சொல் தளத்தில் வெளிவந்துள்ள எல்லாக் கட்டுரைகளையும் படித்துவிட்டேன். அவ்வளவு சுவாரஸ்யம், யதார்த்தம். ஒவ்வொரு கட்டுரையும் இரண்டு, அல்லது இரண்டரைப் பக்கங்கள் தான், படிக்க சில நிமிடங்களே ஆகும்.

கடந்த இருபது ஆண்டுகளில் ஆனந்த விகடம், குழுதம், அமுதசுரபி, கல்கி போன்ற பெரிய பத்திரிகைகளின் வீழ்ச்சியால், பலருக்கும் இப்படியான எழுத்துக்கள் போய்ச் சேராமல் இருந்தது, தற்போது தமிழில் இது போன்ற (மெட்ராஸ் பேப்பர் உட்பட) முயற்சிகளால் சரியாகும் என்ற நம்பிக்கை வருகிறது.

#arunchol #africa #travelnotes #balasubramaniam

Categorized in:

Tagged in:

,