கடந்த மூன்று நாட்களாக மதுரையில் இருந்தேன். மதுரைக்கு வந்துவிட்டு ஜிகர்தண்டா சாப்பிடாவிட்டால் குற்றமாகிவிடுமே என்ற யோசனை இருந்தப் போதும் வெளியில் போக நேரமில்லை.
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் நடந்த டேட்-எக்ஸ் (TEDX) நிகழ்வில் எனது உரைக்கு தயாராகவும், வெள்ளியன்று அதில் பேசவுமே நேரம் போய்விட்டது. களைப்பாகவும் இருந்தது.
சனிக்கிழமை காலை இருந்த நேரத்தில் அருள்மிகு ஶ்ரீ கூடலழகர் திருக்கோயிலில் கூட்டம் இல்லாத நிம்மதியான சேவைக் கிடைத்தது. பின்னர் அருள்மிகு மீனாட்சி அம்மன் கோயிலுக்கு போனேன், மதிய நேரம் வந்திருந்தது, கூட்டமாகவும் இருந்தது. வெளியில் செல்பேசியையும் காலணிகளையும் கொடுத்துவிட்டு உள்ளே சென்று வந்தால் மாலை சென்னைக்கு திரும்ப வேண்டிய விமானத்திற்கு நேரமாகிவிடும் என்பதால் மாட வீதியில் ஒரு சுற்றுச் சுற்றி, வடக்கு கோபுரம் வழியாக வெளிவந்தேன்.
அங்கே வடக்கு கோபுரத்திற்கு அருகிலிருந்த ஒரு சாதாரண பழச்சாறு கடையில் ஜிகர்தண்டா கிடைக்கும் என்ற பதாகையைப் பார்த்தவுடன் வாங்கிச் சாப்பிட்டேன். சென்னையில் ஃபேமஸ் ஜிகர்தண்டா மற்றும் முருகன் இட்லி கடைகளில் ஜிகர்தண்டா என்ற பெயரில் கொடுக்கும் சர்க்கரை பாகைவிட நன்றாகவே இருந்தது. அடியில் கடற்பாசி இல்லாமல் பாதாம் பிசினை தாராளமாக போட்டு, அதற்கு மேல் நிறைய ஐஸ்கிரீமைப் போட்டு கலந்துக் கொடுத்தார். சுவை பரவாயில்லை. விலை சுமார் ஐம்பது.

Discover more from Mangoidiots.com
Subscribe to get the latest posts sent to your email.

