மைக்ரோசாப்டின் நிரலர்களுக்கான மாநாடு (Microsoft Build 2026) தற்போது சான் பிரான்சிஸ்கோவில் நடந்துகொண்டிருக்கிறது. முன்பெல்லாம் இதற்காக அமெரிக்காவிற்கு ஒவ்வொரு ஆண்டும் செல்வேன், பெருந்தொற்றுக்குச் சில ஆண்டுகளுக்கு முன்பே போவதை நிறுத்திவிட்டேன். வீட்டிலிருந்தே இணையம் வழியாகப் பார்ப்பது வசதியாக இருக்கிறது.
இன்றைக்கு மைக்ரோசாப்ட் தலைவர் சத்யா நாதெல்லா, “Surface RTX Spark Dev Box” என்கிற புதிய கணினியை அறிமுகம் செய்தார். இது மென்பொருள் உருவாக்குபவர்களுக்காகவே (Developers) உருவாக்கப்பட்ட ஒரு சூப்பர் கம்ப்யூட்டர்! இதை அவர் “உங்க மேஜையில் இருக்கும் குட்டி ஏ.ஐ. தரவு மையம் (Data Center)” என்று அழைத்தார். இது மிகைப்படுத்தப்பட்டதாக இருந்தாலும், நிறைய உண்மையும் இருக்கிறது.

நான் கூட இதை வாங்கக் காத்திருப்போர் பட்டியலில் (Waitlist) பேர் கொடுத்திருக்கிறேன், விலை தெரியவில்லை, சில பல லட்சங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன், வங்கிக் கடன் வாங்கிக் கொள்ளலாம். 🙋♂️
இந்தக் கணினியின் சிறப்பு இதன் வேகம் மட்டுமில்லை, அதன் நோக்கமும்தான். இந்தக் கணினியில் மிகச் சக்திவாய்ந்த என்விடியாவின் சில்லுள்ளது (NVIDIA RTX Spark). இது இருந்தால், பெரிய திறமூலச் செய்யறிவு மாதிரிகளை உங்கள் மேஜையிலேயே பயன்படுத்தலாம். இணையச் சந்தா செலுத்திப் பயன்படுத்துவதைக் குறைக்கலாம். 🚀
முன்னணிச் செய்யறிவு மாதிரிகளான சாட்ஜிபிடி, கிளாட் போன்றவை செய்யும் எல்லா வேலைகளையும் இந்த மேஜையில் இயங்கும் மாதிரிகளால் செய்ய முடியாது, அவை செய்யவும் வேண்டாம். பல விதப் புதுவிதமான வேலைகளை மேஜையில் கணினியில் இயங்கும் ஏ.ஐ. மாதிரிகளால் செய்ய முடியும் – இதைப் பற்றி பின்னர் விரிவாக சேப்பியன் யு-ட்யூப் சானலில் பேச உள்ளேன்.
இன்னொரு முக்கியச் செய்தி! சில மாதங்களாக ஏ.ஐ. உலகில் எல்லோரையும் கவர்ந்த ஓபன்க்ளா (OpenClaw) செயலி, இப்போது விண்டோஸுக்கு நேரடியாக வருகிறது. ஓபன்க்ளாவை உருவாக்கிய பீட்டர் ஸ்டைன்பெர்கர், இப்போது ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனத்தில் வேலை செய்கிறார். அவர் மைக்ரோசாப்ட் மாநாட்டு மேடையில் இதை அறிவித்தது பெருமளவு வரவேற்பைப் பெற்றது. ‘உங்கள் நிறுவனத்தில் ஓபன்க்ளாவை இப்போது நீங்கள் பயன்படுத்தலாம்’ என்றார் அவர். இது ஒரு நல்ல தொடக்கம்தான்; என்றாலும், இது வெளிவந்து பலரும் இதை நன்றாக ஆராய்ந்த பிறகே பயன்படுத்துமாறு நான் அறிவுறுத்துவேன்.

இதோடு மைக்ரோசாப்ட் அவர்களுடைய (MAI) ஏழு செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை அறிவித்தார்கள். இதில் சிலவற்றை ஏற்கனவே நாம் பார்த்திருந்தாலும், அவற்றின் புதிய பதிப்புகளை இன்று பார்த்தோம், சில புதியவையும் இன்று வெளிவந்துள்ளது. வரும் நாட்களில் இவற்றைப் பயன்படுத்திப் பார்க்கவுள்ளேன்.

இறுதியாக இன்றைய நிகழ்வில், மைக்ரோசாப்ட் மறுபடியும் நிரலர்கள் (Developers) பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பியிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது!
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

