எல்லா ஆண்டுகளைப் போலவும் இந்த ஆண்டும் சென்னைத் தீவுத் திடலில் நடக்கும் சுற்றுலாப் பொருட்காட்சிக்குச் (Chennai Trade Fair) சென்று வந்தேன். 2026-இல் நடப்பது 50-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் துறை கண்காட்சியாம்.
சில நாட்களுக்கு முன்னர் போன போது நான் பார்த்ததை நேரலையாகப் பேஸ்புக்கிலும், யு-ட்யூப்பிலும் பதிவேற்றினேன். வேடிக்கையான முயற்சியாக இதைச் செய்தேன். கையில் செல்பேசியைப் பிடித்துக் கொண்டு நடப்பது கொஞ்சம் கூச்சமாகவே இருந்தது; அதுவும் இளைஞர்கள் என்னைக் கடந்து சென்ற போது, “பூமர் அங்கிள்லாம் லைவ் வீடியோப் போடுகிறார்கள்” என்ற அவர்களின் மைண்ட் வாய்ஸ் கேட்டது. அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டால் சமூக (வலைத்தளப்) பணி செய்ய முடியுமா?
கடைகளின் காணொலி இங்கே, அரசு அரங்குகளின் காணொலி இங்கே.







கண்காட்சிக்குச் செல்பவர்கள் கவனத்திற்கு, கார் பார்க்கிங் கட்டணம் அதிகமில்லை ஜெண்டில்மென் (மற்றும் லேடிஸ்), ரூபாய் 150 மட்டுமே. சென்னை மெட்ரோ இரயிலில் போய் ஓமந்தூரர் மருத்துவமனை நிறுத்தத்தில் இறங்கி, சுமார் ஒன்றரைக்கிலோ மீட்டர் நடந்து போகலாம் அல்லது ஷேர் ஆட்டோவில் தீவுத் திடலை அடையலாம். அதைவிட எளிதான முறை மாநகரப் பேருந்தில் போவது; ஒரு பெரிய பேருந்து நிலையமே இப்போது தீவுத் திடலில் அமைக்கப்பட்டுள்ளது – சென்னை பிராட்வே பேருந்து நிலையம் இடிக்கப்பட்டுவிட்டதால் இந்தத் தற்காலிக மாற்றம்.
வழக்கம் போலவே இருந்தது கண்காட்சி; அதே தில்லி அப்பளம், பேய் வீடு, போலி அணிகலன் கடைகள், வீட்டு உபயோகப் பொருள் கடைகள், ராட்டினங்கள் மற்றும் இதர விளையாட்டு ஏற்றங்கள். ஆற்றைத் தாண்டிப் போனால் தமிழக அரசுத் துறை அரங்குகள். இந்த ஆண்டு அவை அளவில் சிறியதாக இருப்பது போலத் தோன்றியது. குறிப்பிட்டுச் சொல்லும்படி எந்த அரங்கும் இல்லை.



புதிது என்று சொல்ல வேண்டுமென்றால், அது தமிழகச் சுற்றுலாத் துறை புதிதாக வாங்கியுள்ள மாடிப் பேருந்துப் பயணம். இருபது நிமிடப் பயணமாக கடற்கரைச் சாலையில் பயணித்து மீண்டும் தீவுத் திடலுக்கு வந்துவிடலாம். கட்டணம் ரூபாய் ஐம்பது.


நவீன செல்பேசி உலகத்தில் இந்தக் கண்காட்சியைத் தொடர்ந்து நடத்த வேண்டுமா என்றால், “நிச்சயமாக நடத்த வேண்டும்” என்றுதான் சொல்வேன். புத்தாண்டு, பொங்கல் எனப் பண்டிகைகள் முடிந்து கையில் காசு இருக்க வாய்ப்பில்லாத நிலையிலும் பொதுமக்கள் திரளாகவே வந்திருந்தார்கள்; இதுவே இந்தக் கண்காட்சி வேண்டும் என்பதற்கான சான்று. அதோடு சிறுவர்கள் எப்போதும் செல்பேசியிலேயே மூழ்கியிருப்பதைத் தவிர்த்து, அதிகம் செலவு செய்யாமல் குடும்பத்தை வெளியில் அழைத்துச் செல்லக்கூடிய இடங்களில் கடற்கரையை அடுத்து இருப்பது இத்தகைய கண்காட்சிகளே. என்னதான் சமூக வலைத்தளங்களில் காணொலிகளாகப் பார்த்தாலும், அரசுத் துறைகளைப் பற்றி மக்கள் நேரில் அறிந்து கொள்ள வாய்ப்பளிப்பது இக்கண்காட்சியின் அரசு அரங்குகளே.
இதையெல்லாம் சொன்னாலும், ஐம்பது ஆண்டுகளைக் கடந்த இந்தக் கண்காட்சியின் அமைப்பையும், இடம்பெறும் கடைகளையும், அரங்குகளின் வடிவமைப்புகளையும், அவற்றில் இருக்கும் காட்சிப் பொருட்களைப் பற்றிய சிந்தனையையும் காலத்திற்கு ஏற்ப மாற்றி யோசித்தால் மேலும் சிறப்பாக இருக்கும். முன்பெல்லாம் இங்கே பெரிய திறந்தவெளி அரங்கில் நாடகங்கள், நடனங்கள், உரையாடல்கள் நடக்கும்; இந்த ஆண்டு என் கண்ணில் அத்தகைய நிகழ்ச்சிகள் நடப்பதாகப் படவில்லை. இத்தகைய நிகழ்ச்சிகளை, குறிப்பாகச் ‘சென்னை சங்கமம்’ போன்ற மறக்கப்பட்ட நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளைத் தினமும் நடத்தலாம்.
நன்றி.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

