Thirupathi Bhimas Veg, Spencers Plaza, Chennai
Thirupathi Bhimas Veg, Spencers Plaza, Chennai

சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகத் திருப்பதி பயணம் என்றாலே, சுவாமி தரிசனத்திற்குப் பிறகு கீழ்த் திருப்பதிக்கு வந்து, ‘திருப்பதி பீமாஸ்’ சைவ உணவகத்தில் ஒரு முழுச் சாப்பாடு சாப்பிடுவதுதான் வழக்கம். அவர்களின் கோங்கூரா ஊறுகாயும் பருப்புப் பொடியும் மிகப்பிரசித்தம்; அதே போல அவர்களின் தோசையும் மிக நன்றாகவே இருக்கும். இப்பொழுதெல்லாம் திருமலையிலும் கீழ்த்திருப்பதியிலுமே பல உணவகங்கள் வந்துவிட்டதாலும், சீக்கிரமாகவே திருப்பதி சென்று வர முடியும் என்பதாலும் அந்த அளவுக்குப் பீமாஸ் உணவகத்திற்குச் செல்வதில்லை.

இப்போது அந்தத் திருப்பதி பீமாஸ் நேராகச் சென்னைக்கே வந்திருக்கிறார்கள். சென்னையில் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த அண்ணா சாலை ஸ்பென்சர்ஸ் அங்காடியில், அவர்களின் புதிய கிளையைச் சமீபத்தில் திறந்திருக்கிறார்கள். இரண்டு வாரங்களுக்கு முன்பாகப் பொங்கல் சமயத்தில், அங்கே நானும் மனைவியும் மாலை உணவுக்குச் சென்றிருந்தோம்.

2026 பொங்கல் விடுமுறையில் வெள்ளிக்கிழமையன்று சுமார் 8:30 மணிக்குச் சென்றிருந்தோம். கூட்டமே இல்லை. இரண்டு மேஜைகளில்தான் வாடிக்கையாளர்கள் இருந்தார்கள். மீதமிருந்த 10-15 மேஜைகள் காலியாகத்தான் இருந்தன. நாங்கள் வசதியாக உட்காரலாமென்று நான்கு பேர் அமரும் மேஜையில் போய் அமர்ந்தோம். உடனே வந்த மேற்பார்வையாளர், “அங்கே உட்காரக் கூடாது; இருவர் அமரும் இடத்தில்தான் நீங்கள் அமர வேண்டும்” என்று கண்டிப்பாகக் கூறி எங்களை எழுப்பிவிட்டார். பசியாக இருந்ததால், முகம் சுளித்துக்கொண்டே நாங்கள் அவர் காட்டிய மேஜையில் போய் அமர்ந்தோம்.

தொடக்கத்திலேயே ஏற்பட்ட இந்தக் கசப்பான நிகழ்வு, மொத்த அனுபவத்தையுமே பாழாக்கிவிட்டது. எங்களுக்குப் பிறகு இது மாதிரியே இருவராக வந்தவர்களை நான்கு பேர் அமரும் மேஜையில் அமர விட்டார்கள். ஏன் எங்களுக்கு மட்டும் இந்தப்பாரபட்சம் என்று தெரியவில்லை?

நாங்கள் சாப்பிட்டது (ஆர்டர் செய்தது) ஒரு:

  • தட்டு பூண்டு (கார்லிக்) நான்,
  • தட்டு மசாலா குல்ச்சா, இவற்றோடு தொட்டுக்கொள்ளக்
  • காஷ்மீரி தம் ஆலு,
  • குங்க் பா பன்னீர் மற்றும்
  • கலந்த தயிர் பச்சடி;

இறுதியாக இருவருக்கும் சேர்த்து:

  •  தண்டாய் பானம்.
திருப்பதி பீமாஸ், அண்ணா சாலை ஸ்பென்சர்ஸ் அங்காடி
திருப்பதி பீமாஸ், அண்ணா சாலை ஸ்பென்சர்ஸ் அங்காடி
Garlic Naan
Garlic Naan
Masala Kulcha
Masala Kulcha
Kashmiri Dum Aloo Medium
Kashmiri Dum Aloo Medium
Kung Pau Paneer
Kung Pau Paneer
Mixed Veg Raitha
Mixed Veg Raitha
(Left) Thandai
(Left) Thandai
Namma Chennai, Namma Bhimas
Namma Chennai, Namma Bhimas
Thirupathi Bhimas Veg, Spencers Plaza, Chennai
Thirupathi Bhimas Veg, Spencers Plaza, Chennai

மொத்தமாக ₹1133 பில் வந்தது, வரிகளையும் சேர்த்து. இதில் ₹245 விலையுள்ள தண்டாய் பானம்தான் விலை அதிகமாக இருந்தது.

நாங்கள் சாப்பிட்ட உணவு வகைகளில் குறை சொல்ல ஒன்றுமே இல்லை; அமர்க்களம் என்றெல்லாம் சொல்ல முடியாது என்றாலும் சுவையாகவே இருந்தது. ஆனால், வாடிக்கையாளர் சேவையில்தான் கோட்டை விட்டார்கள்.

சாப்பிட்டுப் பில் செலுத்தி வெளியில் வரும் வழியில் உணவக மேலாளரை அழைத்து, வந்தச் சமயத்தில் நடந்த கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டேன். மிகவும் தன்மையாகவே எனது கருத்தைத் தெரிவித்தேன். இருந்தும் அவர் அதைப் பெரிதாகக் கண்டுகொண்ட மாதிரி தெரியவில்லை. “ஒரு திருமணக் குழு சாப்பிட வரப்போகிறார்கள், அதனால் மேஜைகளைக் காலியாக வைத்திருக்கிறோம்” என்று ஏதோ கதை சொன்னார். இரவு 10:00 மணிக்கு மேல் அங்கே எந்தத் திருமணக் குழு வரப்போகிறது என்று எனக்குத் தெரியவில்லை. “பொய் சொல்லலாம், ஆனால் சொல்லுவதைப் பொருத்தமாகச் சொல்லவும்” என்று தன்மையாகக் கூறிவிட்டு விடைபெற்றேன்.

மொத்தத்தில் அந்தப் பக்கம் போனால் சாப்பிடச் செல்லலாம், உணவு நன்றாகவே இருந்தது; ஆனால் கொடுக்கும் காசுக்கு ஏற்ற சேவைத் தரம் இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். நன்றி!

2026-01-16 Thirupathi-Bhimas Veg Restaurant Spencers Plaza, Chennai. Bill.
2026-01-16 Thirupathi-Bhimas Veg Restaurant Spencers Plaza, Chennai. Bill.

பொறுப்பு துறப்பு: இந்தப் பதிவில் எந்த விளம்பரமோ, நிதியுதவியோ பெறப்படவில்லை. முழுக்க நான் காசுக் கொடுத்து வாங்கி பயன்படுத்தும் பொருட்களை அல்லது சேவையைப் பற்றியது. இவை என் தனிப்பட்ட அனுபவம், இதன் பயனைப் பற்றி எந்தவித உத்தரவாதமும் நான் அளிக்கவில்லை. நன்றி.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

2 thought on “Thirupathi Bhimas Veg, Spencers Plaza, Chennai”

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading