Rare books are being destroyed to train AI models (in Tamil)

இந்த வீடியோவைப் பார்த்துப் பதறிவிட்டேன். இது ஏஐ உருவாக்கிய வீடியோ, ஆனாலும் அது சொல்லும் விசயத்தை உறுதிப்படுத்தி விட்டேன்.

உண்மையில் என்ன நடக்கிறது?

பெரும் ஏ.ஐ. நிறுவனங்கள் அவர்களின் செய்யறிவு மாதிரிகளைப் பயிற்றுவிக்கச் சிறந்த தரவுகளாகப் பழைய, அரிய நூல்களைக் கருதுகிறார்கள். 2022ஆம் ஆண்டு சாட்ஜிபிடி வருவதற்கு முன்பாகப் பதிப்பிக்கப்பட்ட நூல்களே ஏஐ குப்பை இல்லாமல் எழுதப்பட்டுள்ளன, அதனால் அவற்றை அவர்கள் தேடித் தேடி சேகரிக்கிறார்கள்.

அப்படி வாங்கிய பழைய நூல்களை, முதலில் அந்தந்த புத்தகத்தின் கட்டமைப்பை (பைண்டிங் செய்பவர்கள் இதனை முதுகெலும்பு என்று அழைப்பர்) வெட்டி எடுக்கிறார்கள். அதன் பின் தானியங்கி முறையில் ஒவ்வொரு பக்கமாக எடுத்து அதைப் பெரிய படிம வருடிகளுக்கு (ஸ்கேனர்களுக்கு) கொடுக்கிறார்கள். அவை எல்லாப் பக்கங்களையும் துல்லியமாக எண்ணிம (டிஜிட்டல்) கோப்புகளாக மாற்றுகிறது. பிறகு இந்தத் தரவுகளைக் கொண்டு அந்தந்த நிறுவனம் அவர்களது செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை மேம்படுத்துகின்றன. இவற்றை ஆந்த்ரோபிக், ஓபன்-ஏஐ போன்ற நிறுவனங்களுக்குச் செய்து கொடுக்கவே பல பெரிய நிறுவனங்கள் இருக்கிறதாம்.

வருடியதற்குப் பிறகு நூல்களின் கதி என்னவாகும்? வெறும் காகிதங்களாக மாறிவிடுவதால் பெரும்பாலும் அவற்றைத் தூக்கி எறிந்து விடுவார்கள். இப்படி அரிய நூல்கள் அழிக்கப்படுவதை நினைத்தே நான் கண் கலங்கினேன். ஏஐ நிறுவனங்கள் பழைய நூல்கள் கெட்ட எண்ணத்தோடு, வேண்டுமென்றே அழிக்கவில்லை. கூகுள் நிறுவனம் பல தசாப்தங்களாக அவர்களின் கூகுள் புக்ஸ் செயல்திட்டத்தில் பல இலட்சம் நூல்களை வருடி இருக்கிறார்கள், நம்மூர் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் போன்றவை பழைய நூல்களைப் பாதுகாப்பாக, முதுகெலும்பை அறுக்காமல், ஒரு பக்கம் கூடக் கசங்காமல்,வருடுகிறார்கள். ஆனால் அப்படிச் செய்யச் செலவும், நேரமும் அதிகமாகும், எந்த ஏஐ நிறுவனங்களுக்கும் அந்தப் பொறுமையில்லை.

இதில் இன்னொரு முக்கிய விசயம். ஏன் ஏஐ நிறுவனங்கள் நூல்களை வாங்கி இப்படிச் செய்கிறார்கள். இதற்குப் பதிலாக இந்த நூல்கள் ஏற்கனவே இணையத்தில் கோப்புகளாக இருந்தால் அவற்றை எடுத்துக் கொள்ளலாமே? இதற்குக் காரணம், இன்று மின்-நூல்களாக வழங்கப்படும் இரண்டு முறையிலுமே சிக்கல். ஒன்று திருட்டு பிரதி (Pirated copies), அதாவது சட்டப்படி எழுத்தாளர் அல்லது பதிப்பாளரிடம் இருந்து அனுமதி பெறாமல் எடுத்துக் கொண்டது. இரண்டாவது, அமேசான் கிண்டில் போன்ற தளங்களில் வாங்கப்படும் மின்-நூல்கள் உங்களுக்குச் சொந்தமில்லை, அவை உங்களது சொத்தாகாது. அவற்றைப் படிக்கும் உரிமையை மட்டுமே நீங்கள் பெறுகிறீர்கள். ஆனால் அச்சு நூல்கள் அப்படி இல்லை, அவற்றை நீங்கள் வாங்குகிறீர்கள், அவற்றை நீங்கள் படிக்கலாம், உங்கள் நண்பருக்கு இரவலாகக் கொடுக்கலாம், அடுத்தவருக்கு விற்கலாம். இந்தச் சட்ட உரிமையைக் கொண்டே ஏஐ நிறுவனங்கள் தங்களின் ஏஐ மாதிரிகளுக்குப் புத்தகங்களைப் படிக்க (அதாவது பயிற்றுவிக்க) பழையப் புத்தகங்களைக் கொடுக்கிறார்கள்.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading