சிங்கப்பூரிலிருந்து வந்திருக்கும் நண்பர் ஒருவர் எனக்கு சில ஆயிரம் ரூபாய் தர வேண்டும். அவரிடம் இந்திய ரூபாய் இல்லை, நானோ எனக்கு சிங்கப்பூர் டாலர் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.
அப்போதுதான் எனக்குத் தோன்றியது, இந்தியாவின் யுபிஐ (UPI) பணப் பரிமாற்ற முறையும் சிங்கப்பூர் நாட்டு பேநவ் (Paynow) முறையும் சில ஆண்டுகளாக இணைக்கப்பட்டுள்ளதே, அதைப் பயன்படுத்திப் பார்க்கலாம் என்று.
இதற்கு முதல் படியாக உங்களது கூகுள் பே (Google Pay) செயலிக்குச் சென்று, மேல்-வலதில் இருக்கும் உங்கள் படத்தை சொடுக்க வேண்டும். அடுத்து உங்கள் வங்கிக் கணக்கைத் (Bank Accounts > Account of your choice) தேர்வு செய்யவும். அடுத்து வரும் திரையில் Manage International Payments என்பதை சொடுக்கவும். அதில் கீழே இருக்கும் Receive International Payments என்கிற வசதியை இயக்கவும். இறுதியாக உங்களது யுபிஐ ஐடி (முகவரி) உங்கள் சிங்கப்பூர் நண்பருக்கு அனுப்பவும்.

உங்கள் சிங்கப்பூர் நண்பர் அங்கே டிபிஎஸ் (DBS) வங்கியில் கணக்கு வைத்திருந்தால், அவர்களது செயலியில் பேநவ் வசதிக்குச் செல்ல வேண்டும். அங்கே UPI (India) transfer என்பதைத் தேர்வு செய்து உங்களது யுபிஐ ஐடியை உள்ளிட வேண்டும். பிறகு எத்தனை சிங்கப்பூர் டாலர் அல்லது இந்திய ரூபாய் எனச் சொல்லி, அதை உறுதிப்படுத்த வேண்டும். அவ்வளவுதான்.
சோதனை முயற்சியாக நண்பர் எனக்கு சிங்கை டாலர் 10 அனுப்பினார். அடுத்த சில நொடிகளில் நண்பரின் சிங்கப்பூர் கணக்கிலிருந்து எனது இந்திய வங்கிக்கு இந்திய மதிப்பில் ரூபாய் 738.10 வந்துவிட்டது. இன்றைய சிங்கப்பூர் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில், ஒவ்வொரு டாலருக்கும் வெறும் தொண்ணூறு காசு மட்டுமே குறைவு.
இதை அவர் சிங்கப்பூரிலிருந்தும் செய்யலாம்.
நம்முடைய யுபிஐ ஐடிக்கு மட்டுமே வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்ப முடியும்; விரைவு குறியீடு (QR Code) முறை வேலை செய்யாது. சிங்கப்பூர் மட்டுமில்லாமல் இலங்கை, நேபாளம், பூடான், மொரிசியஸ், அமீரகம் ஆகிய நாடுகளிலிருந்தும் இப்படி பணம் பெறலாம்.
இதற்கு எதிர்மாறாக, நாம் வெளிநாட்டிற்குச் செல்லும்போது மட்டும், அங்கே கடையில் இருக்கும் அவர்கள் நாட்டு விரைவு குறியீட்டிற்கு நம் கூகுள் பேயிலிருந்தே பணம் அனுப்பலாம். ஆனால் அங்கே இருக்கும் நண்பரின் வங்கிக் கணக்கிற்கோ அல்லது அவரின் செல்பேசி எண்ணிற்கோ அனுப்ப முடியாது. இது இந்திய அரசின் கட்டுப்பாடு.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

