இலான் மஸ்க்கின் கிராகிப்பீடியா!

இணையத்தைப் பயன்படுத்தி மனிதக் குலம் சாதித்ததில் முக்கியமானதாக நான் பார்ப்பது கட்டற்ற மின்-கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவின் உருவாக்கம்.

இன்று உலகில் இருக்கும் எல்லோருக்கும் எளிதாகக் குறைந்தளவு கட்டுப்பாடுகளோடு எந்த நேரமும் இலவசமாக அறிவியல், வரலாறு, கலை, ஆன்மீகம் என்று அனைத்துத் துறைகளின் தகவல்களும் கிடைக்கிறது என்றால் அதற்குக் காரணம் விக்கிப்பீடியாவே. இதற்குப் பின்னால் இருப்பது பெரும்பாலும் தன்னார்வலர்கள் என்பது இதன் கூடுதல் சிறப்பு. இன்று செய்யறிவு இந்தளவு நாம் வாழும் உலகைத் தெரிந்து கொண்டிருப்பதற்குக் காரணமும் விக்கியே. எல்லாவற்றையும் போல இதிலும் சில குறைகள் உள்ளது, எனக்குக் கூட சில விருத்தங்கள் உண்டு. ஆனால் (விலங்கு குணம் கொண்ட) மனிதர்களால் இதைவிடச் சிறப்பாகச் செய்ய முடியாது என்பது என் கருத்து.

இதற்கு முன்னர் பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் தான் மனிதக் குலத்தின் அறிவு புதையலாக இருந்தது. ஆனால் அதை விலை கொடுத்து வாங்க லட்சாதிபதிகளாலே முடிந்தது. புதுத் தகவல்களை வர பல வருடங்கள் எடுக்கும், அதுவரை பழைய தகவல்களே இருக்கும். மேலும் இது ஒரு நாட்டின் கண்ணோட்டமாகவே பெரும்பாலும் இருந்தது.

உலகப் பணக்காரராக பில் கேட்ஸ் இருந்த போது, 1995இல் தனது தீ ரோடு அஹேடு (The Road Ahead) நூலில் எப்போதும் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும் ஒரு மின்-கலைக்களஞ்சியத்தின் தேவையை ஆழமாகச் சொல்லியிருப்பார். இப்படி ஒன்றைத் தனது சொந்தப் பணத்தில் உருவாக்கவும் செய்தார். அதன் பெயர் மைக்ரோசாப்ட் என்கார்ட்டா. முதலில் இது குறுந்தகடுகளில் வந்தது, விலை பிரிட்டானிகா அளவு இல்லை, இருந்தாலும் அன்றைய பணத்தில் சில ஆயிரம் ரூபாய். பின்னாளில் இது இலவசமாக இணையச் சேவையாக வந்தது, ஆனால் அதற்குள் விக்கி நிலை கொண்டுவிட்டது. சமீபத்திலும் தமிழ் விக்கியோடு கருத்து வேறுபாடுக் கொண்டு சிலர் சேர்ந்து புது முயற்சி செய்தார்கள், அதன் தாக்கம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை.

தமிழில் முன்னோடியான கலைக்களஞ்சியம் என்று பார்த்தால் அது ஆ. சிங்காரவேலு முதலியார் அவர்களின் “அபிதான சிந்தாமணி” நூல். கலைக்களஞ்சியம் இல்லை என்றாலும் தமிழில் 19ஆம் நூற்றாண்டில் அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார் எழுதிய “விநோத ரச மஞ்சரி” ஒரு முக்கியமான முயற்சி. தமிழ் நாடு அரசும், இந்தியாவின் பிற மாநிலங்களும் அவரவரின் மொழிக்கான கலைக்களஞ்சியங்களை உருவாக்கி இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்தவரை இவை எதுவுமே விக்கியில் இருக்கும் தகவல்களின் எண்ணிக்கைக்கு அருகில் கூட வரமுடியாது, அதே போலத் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டும் இருப்பதாகத் தெரியவில்லை. சிங்கப்பூர் அரசும் சமீபத்தில் ஒரு குறிப்பிட்ட துறைக்கு முயற்சிகள் செய்கிறது.

ஓர் ஒப்பீட்டுக்குச் சொல்கிறேன். பிரிட்டானிக்காவின் ஆன்லைன் பதிப்பில் 120,000க்கும் மேற்பட்ட கட்டுரைகள் உள்ளன. 2009இல் என்கார்ட்டா நிறுத்தப்பட்டது, அதன் இறுதிப் பிரீமியம் பதிப்பில் 62,000க்கும் மேற்பட்ட கட்டுரைகள் இருந்தன. அக்டோபர் 2025 நிலவரப்படி, ஆங்கில மொழி விக்கிப்பீடியாவில் மட்டும் 7 மில்லியனுக்கும் அதிகமான (சுமார் 70 லட்சம்) கட்டுரைகள் உள்ளன.

நான் கல்வியாளர் இல்லை. இருந்தும் லிப்கோ பதிப்பக குடும்பத்திலிருந்து வந்ததால், ஒரு புது ஆங்கில-ஆங்கில-தமிழ் (அல்லது தமிழ்-ஆங்கில) அகராதியை உருவாக்குவது எவ்வளவு கடினம் என்பதைக் கடுகளவு நான் அறிவேன். புது அகராதியை உருவாக்குவது, இருப்பதைப் புதுப்பிப்பது போன்ற பணிகளை என் தந்தை அறிஞர்கள் குழுவைக் கொண்டு பல ஆண்டுகள் செய்வதைப் பார்த்திருக்கிறேன். அப்படி இருக்கையில் ஒரு கலைக்களஞ்சியம் என்பது மிக மிகக் கடினம், பல ஆண்டுகளாக எடுக்கும் முயற்சி, இன்றைய உலகில் வில்லங்கம் பிடித்த வேலையும் கூட.

இந்தச் சூழ்நிலையில் உலகப் பணக்காரரான இலான் மஸ்க் அவரின் முயற்சியாக கிராகிப்பீடியா (Grokipedia) என்னும் கலைக்களஞ்சியத்தை அறிவித்து இருக்கிறார். மஸ்க் அவர்களின் அரசியல், சமூகப் பார்வை என்னவென்பது எல்லோருக்கும் தெரிந்தது, அது பன்முகத்தன்மைக் கொண்டது இல்லை. இந்த முயற்சி அவரின் எக்ஸ்-ஏ.ஐ. (xAI) நிறுவனத்தின் கீழே வருவதால் இதன் உருவாக்கத்தில் செயற்கை நுண்ணறிவின் பங்கு பெரிதாக இருக்கும். இதையெல்லாம் வைத்துப் பார்க்கையில் இதன் நம்பகத் தன்மையும், இதன் குறிக்கோளும் மஸ்க்கின் பிரதிபலிப்பாகவே இருக்கும்.

எந்த ஒரு விசயமும், ஒன்றாக இல்லாமல் பல இருந்தால் அது நல்லதே. பலரின் பலவிதக் கருத்துக்கள் கிடைக்கும், புது யோசனைகள் வரும். விக்கியும் ஒரே மாதிரியாகவே அவர்கள் தொழில்நுட்பத்தை வைத்திருக்கிறார்கள். அதில் புது முறைகள் வருவது வரவேற்க வேண்டியவையே. மனிதக் குலத்தின் அறிவுக் களஞ்சியம் என்று சொல்லும் போது அது விக்கி என்ற ஒற்றைப் புள்ளியாக இருக்க முடியாது என்பது உண்மை. அந்த விதத்தில் கிராகிப்பீடியாவை வரவேற்க வேண்டும்.

இன்றைய சூழலில் காசுக் கொடுத்து யாரும் கலைக்களஞ்சியங்களைப் படிக்கப் போவதில்லை. அந்த விதத்தில் எந்தக் கலைக்களஞ்சிய உருவாக்கமும் லாபம் ஈட்டும் முயற்சியாக இருக்க வாய்ப்புகள் குறைவு. அதனால் உலகப் பணக்காரர்களின் முயற்சியாக அல்லது பணக்கார நாடுகளின் அரசாங்க முயற்சியாகவே இருக்கும். அப்படி எந்த அரசு செய்தாலும் அது அவர்களின் பார்வையாகவே இருக்கும், உலக மக்களின் போது பார்வையாக இருக்க வாய்ப்பில்லை.

இறுதியாக, கிராகிப்பீடியா வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் அதன் பாதிப்பு விக்கிக்கு இருக்கும். இரண்டுமே மனிதக் குலத்தின் அறிவுக் களஞ்சியங்களை சேமிக்கும் முயற்சிக்குப் பின்னடைவாகவே இருக்கும் என்று கருதுகிறேன். பொறுத்திருந்து பார்ப்போம்.

குறிப்பு 1: மெட்ராஸ் பாஷையில் சொல்லப்படும் சாவுக்கிராக்கி என்கிற வார்த்தையின் தொணியில் “கிராகிப்பீடியா” பெயரைப் படித்தால் அதற்கு கம்பெனியோ மஸ்கோ பொறுப்பில்லை.

குறிப்பு 2: “விநோத ரச மஞ்சரி” நூலை எங்கள் லிப்கோ நிறுவனம் 1958இல் பதிப்பித்தது. இது இலவசமாகத் தமிழ் மின் நூலகத்தில் கிடைக்கிறது (TamilDigitalLibrary dot in). “அபிதான சிந்தாமணி” நூலும் அங்கேயே கிடைக்கிறது.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading