சீனாவிலிருந்து வெளிவந்துள்ள “DeepSeek v3” என்கிற இயற்றறிவு ஏ.ஐ. தமிழைப் புரிந்து கொள்வது போலத் தோன்றுகிறது. அதிகாரப்பூர்வமாக அவர்கள் சொல்வது ஆங்கிலம் மற்றும் சீன மொழி புரிதல் மட்டுமே.
அவர்களின் இணையத்தளத்தில் போய், சில கேள்விகள் கேட்டுப் பார்த்தேன், தமிழ் கேள்விக்குத் தமிழிலேயே பதிலும் வந்தது. ஆங்கிலத்திலிருந்து நன்றாகவே தமிழுக்கு மொழி பெயர்ப்பும் செய்கிறது. வரும் நாட்களில் மேலும் பயன்படுத்தினால் இதன் உண்மையான திறன் தெரியும். சீனாவிலிருந்து வெளிவந்துள்ள திறமூல இயற்றறிவு மாதிரி இது. அவர்களின் இணையப்பக்கத்தில் இலவசமாகப் பயன்படுத்திப் பார்க்கலாம். உங்களிடம் சக்திவாய்ந்த ஜி.பி.யு. இருந்தால் உங்கள் கணினியிலேயே நிறுவிக் கொள்ளலாம்.
இந்த மாதிரியைப் பயிற்றுவிக்க என்விடியா (NVIDIA) நிறுவனத்தின் எச்-800 (H800) ஜி.பி.யு. பயன்படுத்தியிருக்கிறார்கள். உலகளவில் எச்-100 (H100) ஜி.பி.யு.கள் தான் மிகச் சக்தி வாய்ந்தவை, ஆனால் அமெரிக்கத் தடையினால் சீன நிறுவனங்கள் அதை வாங்க முடியாது. அதைவிடத் திறனில் குறைந்த எச்-800 பயன்படுத்தியே இந்த மாதிரியைப் பயிற்றுவித்திருப்பது ஏ.ஐ. வல்லுநர்களால் வியக்கப்படுகிறது. இதன் மற்றொரு பயன், செலவு குறைந்திருப்பது. இந்த மாதிரியைப் பயிற்றுவிக்க வெறும் நாற்பத்தேழு கோடி ரூபாய் (5.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) தான் செலவாகியிருக்கிறது என்று சொல்கிறார்கள் (CNBC Television). ஒபன்-ஏ.ஐ. மற்றும் கூகுள் அவர்களின் முன்னணி மாதிரிகளைப் பயிற்றுவிக்க 8500 கோடிக்கு மேல் செலவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்னர் சீனாவின் மிகப் பெரிய நிறுவனமான அலிபாபாவும் அவர்களது க்வென் (QWen) இயற்றறிவு மாதிரியை வெளியிட்டார்கள். அதுவும் திறமூல மாதிரி தான்.
இப்படிச் சீன மென்பொருள் நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவில் அமெரிக்காவிற்கு வலுவான போட்டியாக வருகிறார்கள். இதனால் தான் அமெரிக்கா சீனாவின் வளர்ச்சியைப் பார்த்துப் பயந்து அவர்களைத் தடுக்கப் பலவற்றையும் செய்கிறது. வரும் காலங்கள் ஆராய்ச்சிகள் நடந்து தரவுகள் வெளிவந்தால் யாரது தொழில்நுட்பம் எந்தளவு திறன் வாய்ந்தது என்பது தெரியும். அதுவரை இந்தப் போட்டியும் இந்தத் துறையின் வளர்ச்சிக்கு நல்லது என்று படுகிறது.
இந்தியாவில் இதுவரை எந்தவொரு மிகப் பெரிய இயற்றறிவு மாதிரியும் முழுவதுமாக இங்கேயே தயாரிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அரசாங்கமும், தனியார் நிறுவனங்களும் உடனே இதில் இறங்க வேண்டும், குறைந்தது ஒரு பில்லியன் அமெரிக்க டாலாராவது தேவை, செய்வார்களா தெரியவில்லை. இந்தளவு பணத்தை இந்தியா வீண் செய்ய வேண்டாம், மற்ற நாடுகளிலிருந்து கிடைக்கும் திறமூல மாதிரிகளை நாம் பயன்படுத்தினால் போதும் என்று இன்போசிஸ் தலைவர் திரு நந்தன் நிலெக்கணி சொன்னதாகக் கேள்வி. ஒரு விதத்தில் இது சரியாகத் தோன்றுகிறது. இந்த ஏ.ஐ. மாதிரிகள் ஒவ்வொரு நாளும் மாறிக் கொண்டே வருகிறது, ஓரிரு ஆண்டுகள் கழித்து அடுத்துவரும் கண்டுபிடிப்புகளைப் பார்த்து, எப்படி அணு ஆராய்ச்சியில், விண்வெளியில் செய்தோமோ அது போலச் செய்வது புத்திசாலித்தனம் என்பது ஒரு வாதம்.
ஆனால் வரும் காலங்கள் செயற்கை நுண்ணறிவு தான் உலகை ஆட்சி செய்யப் போகிறது என்று வைத்துக் கொண்டால், இந்த நூற்றாண்டில் வல்லரசாக வரப் போகும் கனவோடு இருக்கும் இந்தியா இதில் முயற்சியாவது செய்யாமல் இருப்பது தேசியப் பாதுகாப்புக்கு எதிராக போய்விடலாம். நம்மை விடச் சிறிய நாடான ஐக்கிய அரபு, சிங்கப்பூர் கூட அவர்களது சொந்த இயற்றறிவு மாதிரிகளைச் செய்து பார்க்கிறார்கள் என்பதை இங்கே கவனிக்க வேண்டும்.
அதுவரை சீனாவிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் அவர்கள் செலவில் வந்துள்ள மாதிரிகளைப் பயன்படுத்தி நம் திறனை அதிகரித்துக் கொள்ளலாம். எல்லோரும் இவற்றைச் சோதித்துப் பார்க்கவும்.
#deepseekv3 #USAChina #செயற்கைநுண்ணறிவு
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

