ஒரு காலத்தில் தமிழில் நகைச்சுவை மற்றும் நையாண்டி நாடகங்கள் கொடிகட்டிப் பறந்தது, தொலைக்காட்சி வந்தவுடன் இவற்றில் பலவும் அங்கே தொடர்களாக வந்தது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் திரு சோ அவர்களின் முகமது பின் துக்ளக் நாடகம், காத்தாடி ராமமூர்த்தியின் அய்யா அம்மா அம்மம்மா நாடகம், க்ரேசி மோகனின் நாடகங்கள், எஸ்.வி.சேகரின் “வால் பையன்” மற்றும் “நம் குடும்பம்” தொடர்களைச் சொல்லலாம். ஆனால் சமீபகாலங்களில் இவை முற்றிலுமாக குறைந்து, குடும்ப கதைகள், பலிவாங்கல், காதல், அரசியல் என்று சுருங்கிவிட்டது. இதே பாணி இணையத் தொடர்களில் வந்தவுடனும் தொடர்ந்தது. கடந்த சில ஆண்டுகளில் தமிழில் வந்த நகைச்சுவை தொடர்கள் வெகு சில மட்டுமே: அவற்றில் நான் பார்த்து ரசித்தவை “டைம் என்ன பாஸ் (2020)“, “ரமணி vs ரமணி-3 (2022)“, “சட்னி-சாம்பார் (2024)“. இந்த வறட்சி வேதனையாக இருக்கிறது, குறிப்பாக நையாண்டியை வரவேற்காத மொழியோ, சமூகமோ இழப்பது அதிகம்.
இணையத்தில் இந்தக் குறையைப் போக்கும் வகையில் சென்ற மாதம் வெளிவந்துள்ளது அமேசான் ப்ரைம் தளத்தில் “தலைவெட்டியான் பாளையம்”. இது ஹிந்தியில் ஏற்கனவே மூன்று பருவங்களாக வந்து சக்க-போடு போட்ட “பஞ்சாயத்” தொடரின் அதிகாரப்பூர்வத் தமிழாக்கம். பெருமளவு அதே கதை, ஆனால் தமிழ்நாட்டில் நடப்பது போல எடுத்துள்ளார்கள். ஒவ்வொரு அத்தியாயமும் சுமார் முப்பது நிமிடங்கள், ஒரு சின்ன நகைச்சுவையான நிகழ்வை மையமாக வைத்து, அதைச் சுற்றி வருமாறு கதை நடக்கிறது. சில அத்தியாயங்கள் மெதுவாகப் போகிறது, ஒன்றிரண்டு மொக்கையாக இருந்தாலும் மொத்த எட்டையும் சேர்த்து கருத்தில் கொண்டால் நன்றாகவே இருந்தது.
ஒட்டு மொத்தத் தொடரின் கதை என்று பார்த்தால், பெரிய கதை என்றெல்லாம் ஒன்றுமில்லை, திருநெல்வேலி அருகே ஒரு கிராமப் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு, சென்னையில் படித்த பட்டதாரி இளைஞர் செயலாளராக வருகிறார். எப்படி ஊருக்கு வந்து சேருவது, எங்கே தங்குவது என்பதில் ஆரம்பித்து கிராம வாழ்க்கை அவருக்கு வித்தியாசமாக இருக்கிறது. அதோடு கிராமத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் திருமதி மீனாட்சி, ஆனால் பதவியில் இருப்பது அவரின் கணவர் திரு மீனாட்சி, இதுவே இளைஞருக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் ஓரிரு மாதங்களில் கிராமத்தில் ஒருத்தராகவே மாறுகிறார் செயலாளர். அதோடு முடிகிறது இந்தப் பருவம்.
எந்த மாதிரிகதைகள் என்றால்: ஒன்றில் பேய் மரம் உண்மையா என்று ஆராயப்படுகிறது, மற்றொன்றில் புது நாற்காலி எப்படிச் செயலாளருக்கும் தலைவருக்கும் போட்டியாக மாறுகிறது, இன்னொன்றில் சாலையில் நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனத்தில் இடித்த ஆட்டோ ஓட்டுநருக்கும் செயலாளருக்கும் எப்படிச் சண்டை வருகிறது என்று போகிறது. எல்லாக் கதைகளும் நகைச்சுவையாகவே கையாளப்படுகிறது, இது வரை எதுவும் கெட்டதாக நடக்கவில்லை. உலக நடப்பில் பலவும் சோகமாக இருக்க, இங்கேயாவது வேடிக்கையாகப் பார்த்துச் சிரிக்க முடிகிறதே என்பதே இந்தத் தொடர் எனக்குப்பிடிக்க முக்கிய காரணம்.
நாயகனாக அபிஷேக் குமார் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அவரைப் பார்க்க, இந்திய-ஆங்கிலத்தில் புகழ் பெற்ற “இங்கிலிஷ், ஆகஸ்டு” புனைவு நூலில் வரும் அகஸ்டியா-சென் பாத்திரம் நினைவுக்கு வந்தது – இந்திய ஆட்சிப் பணியில் புதிதாகச் சேரும் ஒருவரின் கதை அது. கிராமத் தலைவராக வரும் தேவதர்ஷினி அவரின் இயல்பான நடிப்பால் நம்மை கவர்கிறார். இவர்களோடு சேட்டன், பால்ராஜ், ஆனந்த் ஸ்வாமி என்று எல்லோருமே கலக்குகிறார்கள். இயக்குநர் நாகா (ரமணி vs ரமணி புகழ்) நடிகர்கள் தேர்வில் சரியாகச் செய்திருக்கிறார்.
மொத்தத்தில் ஹிந்தியின் தமிழாக்கம் என்றாலும் நல்ல தொடராகவே வந்துள்ளது “தலைவெட்டியான் பாளையம்”. குழுவுக்கு வாழ்த்துகள்.

Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

