அரங்கம் நிறைந்த காட்சி. இன்றைக்கு மாலையில் அருமையான ஒரு நாடகத்தைப் பார்க்கும் வாய்ப்பு  நண்பர் ஒருவரால் கிடைத்தது. நாங்கள் பார்த்த மேடை நாடகம், டம்மீஸ் ட்ராமா குழுவினரின் “பயணம்”. சரியாக ஐந்து மணிக்கு ஆரம்பித்து எண்பது நிமிடங்களில் முடித்தார்கள், அதற்காகவே ஒரு பெரிய பாராட்டு குழுவுக்கு.

இது இந்த நாடகத்தின் பத்தாம் ஆண்டு என்பதை நம்பவே முடியவில்லை,  என்னை அழைத்த நண்பரைப் போன்றே ஏற்கனவே பார்த்த பலரும் மீண்டும் பார்க்க வந்திருந்தார்கள் அந்தளவு நாடகம் வேடிக்கையாகவும் யதார்த்தமாகவும் இருந்தது காரணம். இவர்களின் நாடகங்கள் பலவற்றுக்கும் அனுமதி இலவசம், பொதுவாக மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் அரங்கில் (இசபெல் மருத்துவமனைக்கு அருகில் இருப்பது) நடத்தப்படுகிறது.

அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வரும் வழியில் கத்தார் தோஹா விமான நிலையத்தில் அவர்களின் அடுத்த விமானத்திற்காகக் காத்திருக்கும் ஆறு நபர்களுக்குள் நடக்கும் உரையாடல்கள் தான் கதைக் களம்.  அவர்கள் ஒவ்வொருவரும்  வெவ்வேறு வயதானவர்கள், வாழ்வின் வெவ்வேறு நிலையில் இருப்பவர்கள், இருந்தும் ஒரே இடத்தில் பல மணி நேரம் இருக்க வேண்டிவரும் போது மனம் திறந்து பேசுகிறார்கள்.  இப்போது உங்களுக்குத் திரு மௌலி  அவர்களின் ஃப்ளைட் – 172  (1969) நாடகம் நினைவுக்கு வரும், அது அன்றைய காலத்தில் ஒரு மைல்கல், நான் அதைத் தொலைக்காட்சியில் பல முறை பார்த்து ரசித்திருக்கிறேன். ஆனால் அதில் வசனங்கள் நீளமாக இருக்கும், டம்மீஸ்  “பயணம்” நாடகத்தில் குழுவின் நிறுவனர் மற்றும் இயக்குநரான திரு  ஶ்ரீவத்ஸன் அவர்களின் வசனம் இன்றைய காலத்திற்கு ஏற்றமாதிரி சுருக்கமாகவும் நல்ல வேடிக்கையாகவும் இருந்தது சிறப்பு.

நாடகத்தின் ஆரம்பத்தில், அமெரிக்காவில் இருக்கும் ஓர் அடுக்கு மாடி வீடு வருகிறது. தமிழ்நாட்டிலிருந்து இங்கே வந்து வேலை செய்யும் மென்பொருள் பொறியாளர்கள் இருவர் அங்கே இருக்கிறார்கள், ஒருவருக்கு அடுத்த இரண்டு நாட்களில் கல்யாணம், அவர் ஊருக்குக் கிளம்பப் பெட்டியைக்  கட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது மண்டபத்திற்குக் கிளம்பும் அவரின் அம்மாவோடு ‘ஸ்கைப்’பில் பேசுகிறார், அதிலிருந்தே நகைச்சுவை துணுக்குகள் தொடங்கிவிடுகிறது. அமெரிக்கா கனவோடு அங்கே வந்து சொந்தங்களை விட்டுத் தவிக்கும் இளைஞர்களின் வாழ்க்கையை வசனங்கள் அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது. உதாரணம்: “நாமெல்லாம் பஞ்சம் பிழைக்க இங்கே வந்திருக்கிறோம் என்றால், இவன் பஞ்சாகப் பறந்து வந்திருக்கிறான்”. இந்த நபரின் நண்பரின் தந்தை திடீரென்று இறந்த சேதி கேட்டு அவரும் இந்தியாவிற்குக் கிளம்புகிறார்.

பல கனவுகளோடு அமெரிக்காவுக்குக் கல்யாணம் ஆகி வந்திருக்கும் ஓர் இளம் பெண், கணவன் வேலைக்குப் போக இவள் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வேதனைப்படுகிறாள், இதனால் இருவருக்கும் தகராறு, அவளும் கோபத்தில் இந்தியா கிளம்புகிறாள். தன் மூன்று மகளும் அமெரிக்காவில் குடியேறிவிட்டதால் தன் சென்னையில் இருக்கும் பூர்வீக வீட்டை விற்க வருகிறார் பெரியவர் ஒருவர்.

சென்னையை விட்டு வந்த வேதனையில் தன் மகனையும் மனைவியையும் அமெரிக்காவில் இருக்கச் சொல்லி ஊர் திரும்புகிறார் தந்தை ஒருவர். அமெரிக்காவிலிருந்து திரும்பும் எல்லோரும் மூட்டை மூட்டையாக துணிகளையும் மிட்டாய்களையும் கொண்டு வரும் போது, இவர் மட்டும் வெறும் கையை வீசி வருவதற்கு அவர் சொல்லும் காரணம் நல்ல வேடிக்கை. படிக்க அமெரிக்கா வந்து படித்து முடித்து, மீண்டும் அமெரிக்காவிற்கு வர விசா வாங்க சென்னைக்கு வருகிறாள் மாணவி ஒருத்தி.

இப்படியான இந்த ஆறு நபர்களும் எப்படி இணைகிறார்கள் என்பதை இயல்பாகக் கையாண்டுள்ளார் இயக்குநர், ஒரு துளி செயற்கைத் தனமும் இல்லை என்பது சிறப்பு. வெறும் ஆறு நாற்காலி, ஒரு சுவர் பதாகையைக் கொண்டு நம் மனக் கண்ணில் விமான நிலைய ஓய்வறையைக் கொண்டுவந்துள்ளார்கள் குழுவினர்.

டம்மீஸ் ட்ராமா குழுவினரின் “பயணம்”
டம்மீஸ் ட்ராமா குழுவினரின் “பயணம்”
Dummies Drama - Payanam
Dummies Drama – Payanam
Dummies Drama - Payanam
Dummies Drama – Payanam
கத்தார் தோஹா விமான நிலையக் காட்சி
கத்தார் தோஹா விமான நிலையக் காட்சி

டம்மீஸ் நாடகங்களில் வரும் பிரசன்னா இதிலும் சிறப்பாகச் செய்திருக்கிறார். அவரை மிஞ்சுகிறார் தந்தையைப் பறிகொடுத்து வேதனைப்படும் பாத்திரத்தில் வந்த விக்னேஷ் சுரேஷ், சில இடங்களில் என் கண்ணிலிருந்து சிறு துளி அழுகையே வந்துவிட்டது. இளம் மனைவியாக நடித்த ப்ரித்தி ஹரி அற்புதமாகச் செய்திருந்தார். இயக்குநர்  ஶ்ரீவத்ஸன் பெரியவர் வேடத்தில் முதிர்ச்சியாக நடித்திருந்தார். ஆனால் பார்வையாளர்கள் அனைவரின் ஒட்டு மொத்தக் கரகோஷம் கிடைத்தது இயக்குநரின் அண்ணாவான திரு ஶ்ரீதர் அவர்களுக்கு – அவரின் இயல்பான நடிப்பில் எல்லோரையும் சிரிக்க வைத்து அசத்தினார்.

இன்றைய (20 அக்டோபர் 2024) காட்சியில் நடித்த அனைத்துக் கலைஞர்களும் நல்ல தேர்வு, அனைவருக்கும் பாராட்டுக்கள். அடுத்த முறை வாய்ப்பு கிடைக்கும் போது கண்டிப்பாகப் பார்க்கவும் – நான்கு ஆண்டுகளுக்கும் முன்னர் ஒளிப்பதிவு செய்யப்பட்ட இதே நாடகம் யூ-ட்யுப்பிலும் இருக்கிறது.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading