தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் என்றாலே ஒரே மாதிரி தான் இருக்கும் என்பதை மாற்றத் தொடங்கியுள்ளது, இப்போது வந்து கொண்டிருக்கும் இணையத் தொடர்கள் (தமிழ் மக்கள் இவற்றை ‘வேப் சீரிஸ்’ என்று அழைப்பார்கள்).
அந்த வரிசையில் சில நாட்களுக்கு முன்னர் டிஸ்னி- ஹாட்ஸ்டாரில் வந்திருக்கும் சட்னி-சாம்பார் தொடர். ராதா மோகன் இயக்கி, யோகி பாபு நடித்திருக்கும் தொடர் இது. ‘கயல்’ சந்திரன், வாணி போஜன், நிதின் சத்யா, இளங்கோ குமரவேல், சார்லி மற்றும் பலரும் உடன் நடித்திருக்கிறார்கள். கதை நடக்கும் இடம் ஊட்டி என்பதால் காட்சிகள் பார்க்க ரம்மியமாக இருக்கிறது.
மொத்தத்தில் இந்த இணையத் தொடர், வித்தியாசமாக இருக்கிறது. தற்போது மூன்றாவது அத்தியாயத்தில் இருக்கிறேன், கதை நன்றாகவே போகிறது. குழுவுக்கு வாழ்த்துகள்.
தொடர்ச்சி:
மொத்தம் இருந்த ஆறு பாகங்களையும் பார்த்துவிட்டேன். கடந்த சில ஆண்டுகளில் தமிழில் இந்தளவு இயல்பாகத் தற்காலச் சமூகத்தின் வாழ்வை ஒரு குடும்பத்தின் பார்வையிலிருந்து சொல்லி வெற்றியும் பெற்றிருப்பது இந்தத் தொடர் தான். இரண்டு நாட்களாகத் தொடரில் வந்த கதாபாத்திரங்கள் என் நினைவிலேயே இருக்கிறார்கள். யோகி பாபுவின் நடிப்பு அட்டகாசம், தன் தாயைப் பழித்துப் பேசி இருக்கும், கோபம் வர வேண்டிய காட்சியில் பக்குவமாக, பாசமாக, தன் சித்தியிடம் பேசும் இடம் நடிப்பில் அவருக்கு ஒரு மைல்கல்.
இன்று எந்தப் படமுமே கடைசியில் முடிக்காமல், பாகம் இரண்டு, மூன்று என்று இழுக்கும் காலத்தில் இந்தத் தொடரை இன்னும் நான்கு ஆண்டுகள், நான்கு பருவங்களாக இழுத்து அதன் ஆத்மாவைக் கொலை செய்யும் வாய்ப்பிருந்தும், அப்படிச் செய்யாமல், அழகாக இந்தப் பருவத்திலேயே முடித்துவிட்ட இயக்குநர் ராதா மோகனுக்குப் பெரிய பாராட்டுகள்.

Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

