தமிழில் 90களில் வெளிவந்த நகைச்சுவை தொலைக்காட்சி தொடர்களில் மிகப் பிரபலமானது இயக்குனர் சிகரம் திரு கே.பாலசந்தர் அவர்களின் நிறுவனம் மின்-பிம்பங்கள் (கவிதாலயா) தயாரித்து, திரு நாகா இயக்கி வெளிவந்த “ரமணி vs ரமணி“.

1998யில் வெளிவந்த ரமணி vs ரமணி சீசன் ஒன்றில் பப்லு (Babloo Prithiveeraj) மற்றும் வாசுகி (Vasuki) மிக தத்ரூபமாக ஒரு இளைய (புது மண) ஜோடிகளின் உணர்வுகளை, காமேடியாக நடித்தியிருப்பார்கள்.

2001யில் வெளிவந்த ரமணி vs ரமணி சீசன் இரண்டில் ராம்ஜி (Ramji) மற்றும் தேவதர்ஷினி (Devadarshini), கொஞ்சம் வயதான (30களில்), ஒரு சிறு பெண் குழந்தையோடிருக்கும் தம்பதிகளின் இயல்பான தினங்களைக் காட்டியிருப்பார்கள்.

இரண்டு சீசன்களையும் நானும், என் குடும்பத்தினரும் பல பலமுறைப் பார்த்திருக்கிறேன், சிடிக்களை வாங்கியே வைத்துள்ளேன். எங்கள் வீட்டில் நிரந்தர விருப்பம் இந்தத் தொடர்கள்.

Ramany vs Ramany Season 1 - ரமணி vs ரமணி சீசன் ஒன்று

Ramany vs Ramany Season 1 – ரமணி vs ரமணி சீசன் ஒன்று

இரண்டில் முதல் சீசன் தான் மிகச்சிறப்பு, அதில் வரும் பப்லு, வாசுகி, பூவிலங்கு மோகன், பம்பாய் ஞானம், சேடன், (ஒரு அத்தியாயத்தில் மட்டுமே வரும்) கவிதாலயா கிருஷ்ணன் என அனைவருமே தூள் கிளப்பியிருப்பார்கள். அதிலும் அசட்டையான, ஆனால் தைரியமான மனைவியாக வரும் வாசுகியின் நடிப்பு தான் பிரமாதம், அதற்கு பிறகு அவர் எதிலும் (என்று தான் நினைக்கிறேன்) நடிக்கவில்லை என்பது கோடம்பாக்கத்தின் இழப்பு. இந்த சீசனை யூடியூப்பில் இலவசமாகப் பார்க்கலாம்.

Ramany vs Ramany Season 2 - ரமணி vs ரமணி சீசன் இரண்டு

Ramany vs Ramany Season 2 – ரமணி vs ரமணி சீசன் இரண்டு

இரண்டாவது சீசனில் வரும் குட்டி பேபி ரஞ்சிதா (இப்போது குழந்தையில்லை, இருந்தாலும் விக்கி அப்படித் தான் அவரை சொல்கிறது) அபாரமாக செய்திருப்பாள். பல அத்தியாயங்களில் அவள் தான் வேடிக்கையே. இந்த சீசனயையும் யூடியூப்பில் இலவசமாகப் பார்க்கலாம்.

நேற்று ஆஹா (aha. video) ஓடிடியில் தளத்தில் ரமணி vs ரமணி சீசன் மூன்று எனப்பார்த்ததும் எனக்கு மிக மகிழ்ச்சி, உடனே நானும் மனைவியும் பார்த்துவிட்டோம். முதல் அத்தியாயம் மட்டும் தான் வந்திருக்கிறது. இதில் தம்பதியாக வருவது இரண்டாவது சீசனில் கணவன் ரமணியாக வந்த ராம்ஜியும் (Ram G), முதல் சீசனில் மனைவி ரமணியாக வந்த வாசுகியும், ஜோடி நன்றாகவே இருக்கிறது. கதைப்படி அவர்களுக்கு ஒரு வளர்ந்த பெண், ஒரு சிறு பையன். கணவன் ரமணியின் அப்பாவாக முதல் சீசனில் அதே வேடத்தில் வந்த பூவிலங்கு மோகன், மற்றவர்கள் புதியவர்கள் போலயிருக்கிறது. முதல் அத்தியாயத்தை பார்த்ததில் 2022க்கு ஏற்றால் போல் எடுத்திருக்கிறார்கள், நன்றாகவேயிருந்தது. அடுத்தடுத்த அத்தியாயங்கள் விறுவிறுப்பாக, நகைச்சுவையாக இருக்கும் என நம்புகிறேன்.

Ramany vs Ramany Season 3 - ரமணி vs ரமணி சீசன் மூன்று

Ramany vs Ramany Season 3 – ரமணி vs ரமணி சீசன் மூன்று

ஒரு காலத்தில் சோ, காத்தாடி, கிரேஸி மோகன், எஸ். வி. சேகர், அடடே மனோகர் எனப் பலர் தமிழ் தொலைக்காட்சியில் அவர்களின் படைப்பால் மக்களின் கவலையை மறந்து சிரிக்கவைத்தார்கள். சில வருடங்களாக தமிழில் நகைச்சுவைப் படங்களும் (பேய் படமெல்லாம் இதில் சேர்த்தியில்லை), தொடர்களும் அரிதாகிவிட்டது. இன்று ஓடிடியால் இது திரும்ப உயிர் பெரும் என நம்புகிறேன் – 2020யில் அமேசான் வெளியிட்ட “டைம் என்ன பாஸ்” ஒரு தொடக்கம் – அதற்காக காமேடியே இல்லை என அர்த்தமில்லை, யூடியூப்பில் நக்கலைட்ஸ் (nakkalites) போன்றவர்கள் நன்றாக செய்கிறார்கள்.

ரமணி vs ரமணி சீசன் மூன்று தயாரிப்பாளர்களுக்கு எனது எதிர்ப்பார்ப்போடு கலந்த பாராட்டுக்கள்.

Categorized in: