அக்டோபர் 6ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் நடந்த இந்திய விமானப் படை சாகச நிகழ்வு அதிகம் பேர் கண்டுகளித்த வான் சாகச நிகழ்ச்சி என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்துள்ளது.
இந்திய விமானப் படையின் சாகசக் காட்சிகள் ஒவ்வொன்றும் அருமையாக இருந்தன. பல இலட்சம் மக்கள் வந்திருந்தார்கள். குறிப்பாகச் சிறுவர், சிறுமியர்கள் ஆயிரக்கணக்கில் வந்திருந்தது நம் நாட்டின் வருங்காலத்திற்கு நம்பிக்கை அளிப்பதாக இருந்தது.
இந்திய விமானப் படையின் தினத்தையொட்டி மேற்கொள்ளப்படும் இந்த நிகழ்ச்சிகள் 2021ஆம் ஆண்டு வரை தலைநகர் டெல்லியில் மட்டுமே நடந்து கொண்டிருந்தன. மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்து மற்ற மாநிலங்களிலும் நடத்தப்படுகிறது. 2023ஆம் ஆண்டு பஞ்சாப்பின் சண்டிகர், அடுத்தாண்டு உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் (அலகாபாத்) நடந்தது. தென் இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் நடந்திருப்பது தமிழ்நாட்டு மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு.
நான்காம் தேதி அன்று ஒத்திகைகள் நடந்தன. என் வீட்டிலிருந்து மெரினா கடற்கரை சுமார் ஒரு கிலோ மீட்டர் என்பதால், என் வீட்டு மொட்டை மாடியில் இருந்தே தெரியும் என்று எண்ணி அன்றைக்குக் கொளுத்தும் வெயிலில் நின்று தலைவலி வந்தது தான் மிச்சம். எல்லாச் சாகசங்களும் கடலின் மேல் செய்யப்பட்டதால் எங்கள் வீட்டிலிருந்து விமானங்கள் போவதும் வருவதும் மட்டுமே தெரிந்தது. அப்பொழுதே முடிவு செய்தேன், இவ்வளவு அருகிலிருந்து இந்த நிகழ்ச்சியைத் தவற விடக் கூடாதென்று.
சாகச நிகழ்வு நடந்த அன்று, காலையில் எழுந்து தயாராகி, கையில் தண்ணீர் புட்டியும் டி.எஸ்.எல்.ஆர். பெரிய படக்கருவியும், தலைக்குத் தொப்பியும், கறுப்புக் கண்ணாடியும் மாட்டிக் கொண்டு 11 மணி நிகழ்ச்சிக்கு அரை மணி நேரம் முன்னதாகவே கிளம்பிவிட்டேன். பத்து இலட்சம் பேர் வருவார்கள் என்ற செய்தியைப் படித்திருந்தேன். இங்கே நடக்கும் மெட்ரோ வேலையால் கடற்கரைக்குச் செல்லும் பல வழிகளும் பாதிக்கு மேல் மூடப்பட்டுள்ள நிலையில் எப்படிப் போய் வருவது என்கிற பயம் உள்ளுக்குள் இருந்தது. முன் வைத்த காலை பின்வைப்பது தமிழனுக்கு அழகில்லை என்பதால் கிளம்பிவிட்டேன்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலைக்குப் போகும் வழி அனைத்திலும் காவலர்கள் இருந்தார்கள். மெரினா வரை, ஒவ்வொரு பத்தடிக்கும் ஒரு காவலர் மக்களை வரிசையாகப் பொறுமையாகப் போகும்படி வழிகாட்டினார்கள். வாகனங்கள் சிட்டி சென்டர் வாசலில் திருப்பிவிடப்பட்டன. பத்து நிமிடத்தில் முன்பு காந்தி சிலை இருந்த இடம் வரை சென்றுவிட்டேன். அங்கே போனவுடன் ஒலிபெருக்கியில் இடதுபுறம் விவேகானந்தர் இல்லம் செல்லும் வழி நிரம்பிவிட்டது, வலதுபுறம் கலங்கரை விளக்கம் அருகில் இருக்கும் மணல்வெளியில் நிறைய இடம் இருக்கிறது, அங்கே போகவும் என்று அறிவிக்கப்பட்டது. பரந்து விரிந்த மெரினா கடற்கரை என்பதால் கூட்டம் எவ்வளவு வந்தாலும் எல்லோரும் பார்க்கும் படி அமைந்தது, சிறப்பு.

பல ஆயிரம் மக்கள் அருகில் இருந்த கட்டிடங்கள், கலங்கரை விளக்கம், டி.ஜி.பி. அலுவலகத்தின் மேல்மாடியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களெல்லாம் அரசு அலுவலகர்களாக இருக்கும். என் குடும்பத்தில் எனக்கு பாஸ் வாங்கிக் கொடுக்க யாரும் இல்லையே என்று வருந்தி நடையைத் தொடர்ந்தேன். என் முன்னர் மக்கள் கூட்டம் என்றாலும், வரிசையாக நிதானமாகப் போனார்கள். காவலர்கள் அதிகம் இருந்ததால் பாதுகாப்பாக உணர்ந்தேன். அவர்கள் சொன்ன வழியே சுலபமாகச் சென்று, கடல் தண்ணீர் காலில்படும் இடத்தில் எனக்கென்று ஓர் இடம் கிடைக்க, அரசு நிகழ்ச்சியில் முதல் வரிசை சீட்டு கிடைத்த மகிழ்ச்சியை உணர்ந்தேன்.
அடுத்த இரண்டு மணி நேரம் இந்திய விமானப்படை விமானிகள் செய்தது மாயாஜாலம் என்று தான் சொல்ல வேண்டும். என்னைச் சுற்றிப் பல குடும்பங்கள்: ஆசையாகத் தன் பதின்மவயது மகளை அழைத்துவந்திருந்த தந்தை ஒவ்வொரு விமானம் வரும்போதும் தன் மகளுக்காகச் சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தார். இரண்டு இளம் தாய்மார் அவர்களின் இரண்டு வயது மகளையும், மூன்று வயது மகனையும் அழைத்து வந்திருந்தனர், இருவரும் மேலே நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி கவலையில்லாமல், ஈர மணலில் உருண்டு விளையாடிக் கொண்டிருந்தனர். ஓர் இஸ்லாமியக் குடும்பத்தினர் பாசமாக அவர்களின் தாயைக் கையைப் பிடித்து உதவிக் கொண்டிருந்தார்கள். என் அருகே இருந்த இளைஞர் மனைவி வெயிலில் வாடக்கூடாது என்பதற்காகத் தாழ்வாகப் பிடித்திருந்த குடையைக் கொண்டு அருகில் இருந்த என்னையும் மற்றவர்களையும் கவலையே இல்லாமல் குத்திக் கொண்டே இருந்தார் – இதையெல்லாம் பார்க்க இந்தக் கலவை தான் என் தமிழ் மக்கள், என் இந்தியப் பண்பாடு என்று பெருமையாக இருந்தது.
நானும் எனது கேமிராவில் படங்களாக எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தேன். முதல் ஒரு மணி நேரம் மெதுவாகப் போன நிகழ்வுகள், அடுத்த பாதியில் சரவெடி. வானில் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் பல்வேறு வித்தைகளைச் செய்தார்கள் – இந்தியக் கொடியில் இருக்கும் மூவண்ணங்களை வானில் வரைந்தார்கள், கடைசியில் அன்பின் சின்னமான இதயத்தையும் புகையிலேயே வரைந்து நம் இதயங்களைக் கொள்ளைக் கொண்டார்கள்.
மொத்தத்தில் அட்டகாசமான காட்சி, மக்களின் ஆர்வமும், ஒவ்வொரு விமானம் பறந்த போது விமானிகளுக்கு (அவர்களுக்குக் கீழே நாம் தெரிவோமா என்று தெரியாது இருந்தாலும்) கை தட்டி, கையைக் காட்டி, அனந்த கூச்சலிட்டுப் பாராட்டியது மகிழ்ச்சியாக இருந்தது. இரண்டு மணி நேரம், சுட்டெரிக்கும் வெயிலில் நின்றாலும், இந்த நிகழ்ச்சியில் நேரில் பார்த்துக் கொண்டிருக்கிறோமே என்கிற மகிழ்ச்சியில் எந்தக் களைப்பும் தெரியவில்லை.
நிகழ்ச்சி சரியாக ஒரு மணிக்கு ஒரு பச்சை வண்ண ஹெலிகாப்டர் மெரினா கடற்கரை முழுவதையும் சுற்றி வந்ததோடு இனிதே முடிந்தது. கூட்டம் கலையும்வரை மண்ணிலேயே நின்றுவிட்டு பிறகு போகலாம் என்று தான் எண்ணியிருந்தேன். ஆனால் மக்கள் சுலபமாகப் போகத் தொடங்கியதால் நானும் ஏமாந்து போனேன். ராணி மேரி கல்லூரி முன்னர் வந்தவுடன் தான் தெரிந்தது, ஆரம்பத்தில் பத்தடிக்கு இருந்த காவலர்கள் யாரையும் காணவில்லை, அவர்களும் அவர்களின் வண்டிகளை எடுக்கப் போய்க் கொண்டிருந்தார்கள்.

எந்தப் பக்கம் போகவும் ஓர் அடி இடம்கூட இல்லை. இது போதாதென்று, வி.ஐ.பி. கார்கள், காவல்துறை ஜீப்புகள், விமானப் படையினர் திரும்பப் போகும் பேருந்துகள் வேறு. இதோடு பொது மக்களின் இருசக்கர வாகனங்கள். நடப்பவர்களுக்கே இடம் இல்லாத போது அவர்களும் போட்டி கொண்டு, ஒலியெழுப்பிக் கொண்டு இருந்தார்கள். இரண்டு நிமிடங்கள் பொறுத்துப் பார்த்தேன். பின்னால் இருந்து தள்ள ஆரம்பித்தார்கள்.
பரந்த மெரினா கடற்கரைச் சாலையிலேயே மூச்சு முட்டுமோ என்ற எண்ணம் வரத் தொடங்கியது. டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் எல்லோரும் போக வேண்டும். அங்கே தான் தள்ளுமுள்ளு. வாகனங்களும் போக முடியாமல், மக்களும் போக முடியாமல் இருந்தது. அருகில் போய்க் கொண்டிருந்த காவலரைக் கேட்டேன். “ஏன் சார் இப்படி வாகனங்களை இப்பொழுதே போகவிட்டீர்கள், கொஞ்ச நேரம் அவர்களைத் தடுத்து நிறுத்தி இருக்கலாமே” என்று, அதற்கு அவர் “நாங்கள் சொல்வதை எங்கே சார் பொதுமக்கள் கேட்கிறார்கள், எல்லோருக்கும் அவசரம், நீங்கள் தான் பொறுமையாக இருக்கிறீர்கள், இது ஜனநாயக நாடு என்பதால் யாரும் கேட்பதில்லை நாங்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை” என்று பரிதாபமாகச் சொல்லி மகளிர் கல்லூரிக்குள் மறைந்தார் – அங்கேயிருந்தும் வாகனங்கள் வெளிவரப் போராடிக் கொண்டிருந்தன.
சாலையில் கூட்டத்தில் இருந்தால் ஆபத்து என்று எண்ணி, பக்கவாட்டில் பார்த்தேன். நடைபாதையில் மக்கள் நின்றிருந்தார்களே தவிரக் கூட்டம் இல்லை. அதனால் நடைபாதை கைபிடி கம்பிகளைத் தாண்டி, ராணி மேரி கல்லூரி வளாகத்தின் சுவரையொட்டி இருந்த மின்சாரப் பெட்டியின் மறைவில் நின்றுவிட்டேன் – அதே சுவரில் என்னோடு இன்னும் பலரும், தொடர்ந்து போவது ஆபத்து என்று எண்ணி பொறுமையாக நின்றிருந்தார்கள்.
சாலையில் நடக்கும் ஒழுங்கின்மையை வேடிக்கை பார்த்து, மனது வருந்தி, கோபம் வந்து போனபடியே அடுத்த அரைமணி நேரம் அங்கேயே இருந்துவிட்டேன். உண்மையில் பயமாகத் தான் இருந்தது. இப்போது வாகனங்கள் நகர ஆரம்பித்திருந்தன. கூட்டம் இலேசாக முன் சென்றது. அதையடுத்து 1:30 மணிக்கு அருகில் இருக்கும் மைலாப்பூர் தீ அணைப்பு நிலையத்தின் எதிரில் இருக்கும் (மூத்திர) சுவரின் அருகில் வந்து மர நிழலில் அமர்ந்துவிட்டேன். அடுத்த அரைமணி நேரத்தில் ஓரளவு வாகனங்களும், மக்களும் நகரத் தொடங்கியதால் நானும் நடக்க ஆரம்பித்து, மெரினாவிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் என் வீட்டுக்கு வந்து சேர்ந்த போது நேரம் 2:30 மணி. எண்ணிப் பார்த்தால், வீரர்கள் வானில் நிகழ்த்தியதற்கு நிகரான சாகசமாக நான் மண்ணில் எதையோ நிகழ்த்திவிட்டாற்போலத்தான் தோன்றியது.
மாலை வரை நீடித்த நெரிசலுடன் வெயிலும் சேர்ந்து பலர் மயங்கி விழுந்தனர். சிலர் இறந்தே போயினர். அமைப்பாளர்களும், மாநகராட்சியும், காவல்துறையும் கூடுதலாகத் திட்டமிட்டு, அதைக் கண்டிப்போடு செயல்படுத்தியிருந்தால் வருகை தந்த மக்களுக்கு வசதியாகப் பாதுகாப்பாக இருந்திருக்கும். இதை ஏதோ தற்போதிருக்கும் ஆட்சியாளர்களின் குறை என்று சொல்லவில்லை, எந்தக் கட்சி இந்தியாவின் எந்த மாநிலத்திலும், குறிப்பாகத் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தாலும் வி.ஐ.பி.கள் போனவுடன் வேலை முடிந்தது என்று எண்ணும் அரசு நிர்வாகம் இருக்கும் நாட்டில், சாதாரண மக்கள் நடந்து செல்லவே இடமில்லாத இடத்தில் வண்டியில் உட்காதிருப்பதால் ஹாரன் அடிக்கும் மனிதாபிமானமே இல்லாத ஓட்டுநர்கள் இருக்கும் ஊரில் இருக்கிறோம் என்று மிகவும் மன வேதனை அடைந்தேன். பல நாடுகளில் இதைவிட அதிகக் கூட்டத்தைப் பார்த்த காரணத்தால் நம்மிடம் சமூக அக்கறையும் சட்ட ஒழுக்கமும் இருப்பதில்லையோ எனத் தோன்றியது. இதெல்லாம் இல்லையேல் இந்தியா வல்லரசாகவே முடியாது.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

