தமிழில் அரசியல் தொலைக்காட்சி தொடர்கள் குறைவு. ஆனால் இணையத் தொடர்கள் வரத் தொடங்கியதிலிருந்து பல வருகிறது. அவற்றில் சில மாதங்களுக்கும் முன்னர் ஜீ-5 வந்தது “தலைமை செயலகம்”. பிரபலமாக இருக்கும் முதல்வர் ஊழல் வழக்கில் சிக்கிக் கொள்ள, அவரின் நாற்காலிக்கு வீட்டிலும் வெளியிலும் போட்டி, இதற்கு நடுவில் நக்சல் குழு, சி.பி.ஐ. விசாரணை என்று போகும் கதை இது. சுவாரஸ்யமான பெரிய கதைக் களம், நல்ல நடிகர்கள், சிறந்த இயக்குனர் விருது பெற்ற திரு வசந்தபாலன் என்று எல்லாம் இருந்தாலும் எதிர்பார்த்த அளவுக்குப் பிரகாசிக்கவில்லை.
முதல்வராக வரும் நடிகர் கிஷோர் அமைதியாக இருந்தாலும் அழுத்தமாக வருகின்ற பாத்திரத்தை நன்றாகச் செய்துள்ளார், பாராட்டுக்கள். சண்டைக்காட்சிகளில் ஸ்ரீயா ரெட்டி நம் கவனத்தைக் கவர்கிறார். முதல்வரின் பெண்ணாக வரும் ரம்யா நம்பீசன், வருத்தப்படும் காட்சிகளில் அவரின் நடிப்புத் திறமையை வெளிக்காட்டுகிறார். காவல்துறை அதிகாரியாக வரும் பரத் முதல் சில அத்தியாயங்களில் ஏதோ பெரியதாகச் செய்யப் போகிறார் என்று பார்த்தால், மத்தியப் புலனாய்வுத் துறை அதிகாரியாக வரும் ஆதித்யா மேனனுக்கு வழிவிட்டு நகர்ந்துவிடுகிறார். முதல்வரின் மாப்பிள்ளையாக வரும் நீருப் நந்தகுமார் வெறுப்பைக்காட்டும் இடங்களில் நன்றாக நடித்துள்ளார். சந்தான பாரதி, ஒய்.ஜி.மகேந்திரன் போன்றவர்கள் வந்து போகிறார்கள்.
முதல் பருவத்தில் எட்டு அத்தியாயங்கள், ஒவ்வொன்றும் சுமார் 35 நிமிடங்கள், இருந்தும் அவசரமாக எங்கெங்கோப் பயணிக்கிறது திரைக்கதை. நிலையாக ஒரு விசயத்தை ஆழமாகப் பேசிவிட்டு அடுத்த விசயத்திற்கு நகர்ந்திருந்தால் “தலைமை செயலகம்” மனதில் நின்றிருக்கும். கதையில் எல்லோரும் குழப்பத்தில் மீன் பிடிக்க முயல்கிறார்கள் சரி, ஆனால் மத்திய அரசு என்ன திட்டமிடுகிறது, எதிர்க்கட்சி என்ன செய்து கொண்டிருக்கிறது, கட்சியில் மற்ற தலைவர்கள் உறங்கிக் கொண்டியிருக்கிறார்கள் என்று ஏகப்பட்ட கேள்விகள் பதிலின்றி நிற்கிறது.
அது ஏன், தமிழ்த் திரைப்படங்களைப் போலவே இங்கேயும் பெரிய காவல்துறை அதிகாரி ஆணாக இருந்து, அவருக்கு உதவியாளராக ஒரு பெண் அதிகாரி வந்தால் அவர் வெறும் பின்னணியாக மட்டுமே இருக்கிறார்?
மொத்தத்தில், “தலைமை செயலகம்” ஒரு சராசரியான அரசியல் நாற்காலி போட்டித் தொடர்.

Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

