கடவுள் எனும் ஸ்பைடர்மேன் – ஶ்ரீதர் சுப்ரமணியம்

கடவுள் எனும் ஸ்பைடர்மேன் - ஒரு நூல் விமர்சனம்
கடவுள் எனும் ஸ்பைடர்மேன் - ஒரு நூல் விமர்சனம்

சமீபத்தில் நான் ரசித்துப் படித்த நூல் நண்பர் ஶ்ரீதர் சுப்ரமணியம் அவர்களின் “கடவுள் எனும் ஸ்பைடர்மேன்”, வெளியீடு: யாவரும் பதிப்பகம். இது நாத்திகத்தை வலியுறுத்தும், முழுமையான கடவுள் மறுப்பு நூல். அறிவியல் தேடல் உள்ள அனைவரும் இந்த நூலைப் படிக்க வேண்டும். அப்படி இல்லாதவர்களும் ஒரு கடினமான பொருளை எப்படி இலகுவாக எழுதுவது, வாசிப்பாளரிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பது என்பதற்கான உதாரணமாக இந்த நூலை வாசிக்கவும்.

இந்த நூலைப் படித்து, கடவுளைப் பற்றியும், பல மதங்களைப் பற்றியும் பல அரிய தகவல்களைக் கற்றுக்கொண்டேன். இந்து மதத்தைப் பற்றியுமே ‘அடடா, இது இப்படியா, அது அப்படியா, இந்த விசயத்தைப் பற்றி மூல நூலில் இப்படித்தான் சொல்லப்பட்டுள்ளதா’ என்று பல இடங்களில் படித்து ஆச்சரியப்பட்டேன். உதாரணமாக, கீதையில் இருந்து பலரும் அடிக்கடிச் சொல்லும் வரி, “எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது”. உண்மையில் அது கிருஷ்ணர் சொன்னதல்ல, கீதையில் அப்படி ஒரு வசனமே கிடையாது என்று படித்து ஆச்சரியப்பட்டேன். இதைப் படித்தவுடன் நூலை வைத்துவிட்டு, அடுத்த ஒரு மணி நேரம் செயற்கை நுண்ணறிவிடம் (AI) இதைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொண்டேன். நூலில் உள்ள ஒரே ஒரு கட்டுரையைத் தவிர மற்ற எல்லாவற்றிலும், கடவுளைப் பற்றிப் புதிதாகப் பல விசயங்களைத் தெரிந்துகொண்டேன் என்பது உண்மை.

“நாத்திகம் குறித்து தமிழில் ஒரு முழுமையான நூல்” என்று அட்டையில் சொல்லப்பட்டுள்ளதை மாற்றி “கடவுளைக் குறித்து தமிழில் ஒரு முழுமையான நூல்” என்று நான் சொல்லுவேன்.

நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். அதே சமயம் தீவிர அறிவியல் தேடல் உடையவன்; ஒரு பொறியாளராக எல்லாவற்றையும் பார்ப்பவன், உணர்பவன். இந்த இரண்டு ங்களையும் ஒரே நேரத்தில் என்னால் சிந்திக்க முடியும், எனக்கு முரண்பாடு இல்லை. ஆசிரியர் ஶ்ரீதருக்கு இவை இரண்டும் வேறுவேறு. நூலில் பல கட்டுரைகளில் கடவுளை அறிவியல் மூலம் கண்டுகொள்ளப் பார்க்கிறார். அதன்படி கடவுள் இல்லை என்பதைத் தரவுகளோடு நிறுவ முயல்கிறார். அவர் படித்ததை, அவரின் தேடல் அவரை அழைத்துச் சென்ற வழியை நான் ஆவலாகப் படித்தேன். பல தகவல்கள் சுவையாகவும் இருந்தன. இது அவர் சென்ற வழி, அவரின் பாதை; அதை நான் மதிக்கிறேன்.

இந்த நூல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஶ்ரீதரின் மனிதவியல், சமூகப் பார்வை, கருணை ஆகியவை நூலில் தெளிவாகத் தெரிகின்றன; பாராட்டுகள். ஆனால், இந்த நூலில் சொல்லியுள்ளதில் இருந்து நான் மாறுபடுவது: காலம், அண்டசராசரத்தைத் தாண்டிப் பரம்பொருள் என்பவர் இருக்கிறார் என்று நான் நம்புகிறேன். நூலில் அப்படி ஒன்று இல்லவே இல்லை என்கிறார்; அதில் எனக்கு உடன்பாடு இல்லை.

நிற்க.

நூலின் முதல் அத்தியாயமே அமர்க்களமாக ஆரம்பிக்கிறது. ‘காணாமல் போன கடவுளர்கள்’ என்கிற தலைப்பில், ஜியுஸ், சோமா, அல்-லத், மன்-னத், அஹூர மஸ்தா போன்ற பண்டைய காலக் கடவுளர்களின் பெயர்கள் இன்று பலருக்கும் தெரியாது, யாருமே வழிபடுவதுமில்லை என்று தொடங்குகிறார். கட்டுரையை முடிக்கும்போது, “காலாவதியான கடவுளர்களுக்கும், அமலில் இருக்கும் கடவுளர்களுக்கும் இடையே வேறு என்ன வித்தியாசம் இருக்கிறது?” என்று சொல்லி அசத்துகிறார்.

ஒவ்வொரு மதத்திலும் சொல்லப்பட்டுள்ள சடங்குகள் பல, இன்று நம்மால் நினைத்துப்பார்க்க முடியாத அளவு கொடுமையானவை, கொடூரமானவை என்று பல இடங்களில் ஆதாரங்களோடு விளக்குகிறார் ஶ்ரீதர். மனித இனமாக நாம் கடந்து வந்த பாதையைத் தெரிந்துகொள்வது மிக அவசியம் என்று நினைக்கிறேன்.

நம்மால் தீர்க்க முடியாத துயரங்களில் சிக்கியிருக்கும்போது நமக்கு அழுது தீர்க்க இருக்கும் நம்பிக்கை கடவுள்; அதுவே ஒருவிதத்தில் ஆறுதலாக, தொடர்ந்து போராட ஓர் உந்துதலாக இருக்கும். இந்தப் பார்வையை “நான் கடவுள்” என்கிற ஏழாவது அத்தியாயத்தில் ஆசிரியர் அவரின் முறையில் விளக்கியுள்ளார். ஆனால், கடைசி வரியில் இது நேர விரயம் என்கிறார்; படிப்பவர்களுக்கும் அப்படியே இருக்க வேண்டியதில்லை.

உலக வரலாற்றில் நடந்திருக்கும் பல போர்களுக்கு மதங்களே காரணம் என்ற உண்மையை மீண்டும் மீண்டும் முன்வைக்கிறார் ஶ்ரீதர். அது நம் மனதைக் கனக்க வைப்பதோடு சிந்திக்க வைப்பதும் உறுதி. பால்வீதி அண்டத்தில் மட்டும் பார்த்தாலே நமது சூரியக் குடும்பமே ஒரு தூசிதான் என்பதை அவர் நினைவுபடுத்தும்போது, மதங்களுக்குள் ஏற்படும் சண்டைகள் எவ்வளவு அர்த்தமற்றவை என்று தெரிகிறது. கற்கால மனிதனில் இருந்து இருபத்தோராம் நூற்றாண்டு மனிதன் வளர்ந்திருப்பதற்கு அறிவியல் முக்கியக் காரணம் என்கிற மறுக்க முடியாத உண்மையையும் வலியுறுத்துகிறார் ஶ்ரீதர்; அதற்கு அவருக்குப் பாராட்டுகள்.

நூலில் சுமாரான பகுதி என்றால், அது அத்தியாயம் 13: பிராமணியம். ஶ்ரீதரின் பார்வையில், “இந்து மரபில் கடவுள் மறுப்பைவிட முக்கியத் தேவை பிராமணிய மறுதலிப்பு. காரணம், அதுவே கடவுளுக்கு முந்தைய கேட்.” நூலின் கடவுள் மறுப்புக் குறிக்கோளில் இருந்து விலகி இந்த அத்தியாயம், குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உயர் பதவியில் எங்கெல்லாம் இருக்கிறார்கள் என்ற புள்ளிவிவரங்களைப் பேசுகிறது. இது ஒரு அரசியல் பார்வை; இதற்கும், ‘கடவுள் இல்லை’ என்கிற நூலுக்கும் என்ன தொடர்பு என்பது எனக்கு உடன்பாடாக இல்லை. அப்படியே சாதியக் கட்டமைப்பைப் பேசியே ஆக வேண்டுமென்றால், இன்று அதிகாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் மற்ற பிரிவுகளில் ஒன்றிரண்டையும் சேர்த்து அலசியிருக்கலாம்.

எனக்குப் பிடித்த அத்தியாயங்களில் ஒன்று, அத்தியாயம் 10: “எதுக்கும் கும்பிட்டு வைப்போம்”. இதில் ‘எதற்கும் இருக்கட்டுமே, கடவுளைக் கும்பிட்டு வைப்போமே’ என்கிற கருத்தை, பாஸ்கல் வேஜர் (Pascal Wager) என்கிற 17-ஆம் நூற்றாண்டின் வாதத்தை வைத்து விளக்கியுள்ளார். ‘திண்டுக்கல் ஜிக்கப்பா’ என்கிற அத்தியாயத்தில் (ஶ்ரீதரின் ஒவ்வொரு தலைப்பும் அபாரம்), “ஆதாரமின்றி சொல்லப்படும் ஒரு விஷயத்தை ஒதுக்கித் தள்ள எந்த ஆதாரமும் தர வேண்டியதில்லை” என்ற கிறிஸ்டோபர் ஹிச்சென்ஸின் வரிகளின் மூலம் எதிர்ப்போரின் வாயை அடைக்கிறார். ‘கூவத்துக் கொசுக்கள்’ என்கிற அத்தியாயத்தில், பெருவெடிப்பில் துவங்கிய அண்டம் பேரிருளில், பெரு அமைதியில் முடியப் போகிறது என்கிற உண்மையைச் சொல்லி நம்மைத் திகிலடையச் செய்கிறார் ஆசிரியர்.

அறிவியலுக்குத் தெரியவராத இடங்களில் கடவுளை இட்டு நிரப்பும் அணுகுமுறைக்கு ‘இடைவெளிகளின் கடவுள் (God of the Gaps)’ என்ற பெயரைச் சொல்லி அவர் விளக்கும்போது, நம் கவனத்தை முழுவதுமாக நூலின்பால் இழுத்துவிடுகிறார். இந்த விசயத்தின் தொடர்பாக அவரோடு நான் எடுத்த ஒரு பேட்டி சேப்பியன் சயின்ஸ் சானலில் “மாறாத ஒன்றா அறிவியல்?” என்ற தலைப்பில் 14 மே 2026 அன்று வெளிவந்துள்ளது.

இப்போது நமக்குத் தெரிந்த மதங்களில் இருக்கும் கடவுள்களைத் தாண்டி, ‘தெய்வீகக் கடவுள் (Cosmic God)’ என்னும் ஒரு கருத்தையும் அறிமுகம் செய்கிறார். இந்தக் கடவுளுக்கு மனிதர்களின் இருப்பே கண்ணுக்குத் தெரியாதாம். இந்தப் பிரபஞ்சத்தின் பயணத்தில் நாம் அர்த்தமற்றவர்கள், ஒரு விபத்தின் மூலம் உருவானவர்கள்; இல்லை, இந்தப் பிரபஞ்சத்துக்கு ஒரு நோக்கம் இருக்கிறது என்று நம்புவதும் நம் மனித அகந்தையைச் (Ego) சொறிந்துவிடும் செயல் என்கிறார் ஆசிரியர்.

ரிச்சர்ட் டாக்கின்ஸின் ‘குருட்டுக் கடிகாரக்காரன் (The Blind Watchmaker)’ நூலில் விளக்கப்பட்டுள்ள பரிணாம வளர்ச்சியைச் சுருக்கமாகச் சொல்கிறது அத்தியாயம் 9.

கடவுள் நம்பிக்கையே இன்று உலகில் ஒழுக்க நியதி இருக்கக் காரணம் என்கிற வாதத்தை, ஶ்ரீதர் இந்து புராணங்களில் இருந்து உதாரணங்களை மேற்கோள் காட்டி அலசுகிறார். இன்று இந்துக்களில் பெரும்பாலானோர் ஒழுக்கமாக வாழ, அரசியல் சாசனமும், அறிவியல் பார்வையும், குற்றவியல் சட்டங்களும்தான் காரணம் என்கிறார். இந்து மதத்தைத் தாண்டி இதே விஷயத்தைக் கிறித்துவ மதத்தின் நூல்களில் இருந்தும், முஸ்லிம் மத நூல்களில் இருந்தும் உதாரணங்களைக் கொடுக்கிறார். இதில் பெரிய மூன்று மதங்களில் எதையும் அவர் விட்டுவிடவில்லை.

‘கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு’ என்ற நம்புதல் உள்ளோர் இந்த நூலைப் படிக்கவும். அதே சமயம், கண்மூடித்தனமான நம்பிக்கையை மட்டுமே கடவுள் தன்னிடம் எதிர்பார்க்கிறார் என நம்புகிறவர்கள் இந்த நூலைத் தவிர்த்துவிடுவது அவர்களின் இதயங்களுக்கு நல்லது. தேவையில்லாமல் படித்து, கோபப்பட்டு ஶ்ரீதரிடம் சண்டைக்குச் சென்று உங்கள் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்கலாம்.

ஶ்ரீதரின் வெற்றி, இந்த நூலின் ஒவ்வொரு இடத்திலும் நம்மைச் சிந்திக்க வைப்பதில்தான் இருக்கிறது. ஒரு சிறந்த நூல் இதைச் செய்ய வேண்டும்; இல்லையென்றால் அது வெறும் வார்த்தைகளின் குவியல்தானே?

நூலை வாங்க யாவரும் பதிப்பகத்தின் இணையத்தளத்திற்குச் செல்லவும்.

கடவுள் எனும் ஸ்பைடர்மேன் - ஶ்ரீதர் சுப்ரமணியம்
கடவுள் எனும் ஸ்பைடர்மேன் – ஶ்ரீதர் சுப்ரமணியம்


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

2 thought on “கடவுள் எனும் ஸ்பைடர்மேன் – ஶ்ரீதர் சுப்ரமணியம்”
  1. Rick Sam (via Facebook):

    Sridhar Subramaniam: It’s a great question of Life, Does God exist? What’s the purpose of Life?
    This question, helped me to develop and acknowledge humility in both worlds, scientific and religious traditions.
    I find these are philosophical, theological questions that all religious traditions seek to answer. I support majority religious traditions, beliefs as they play an existential role in creating meaning and part of human flourishing.
    I’m also a Scientist, I think deeply about Science.
    I support both Science and Religion due to the pointers of this world matching to support both.
    With respect to religious traditions, I’ve considered that we might have to look at it rather not in atomistic, flattened out objective reality like how reductionism in Science teaches us. We might have to consider phenomenologically i.e aiming to describe religious phenomena as they appear, and to explore the meaning and significance of lived experience.
    So consider asking the question, Why not consider looking at the world with multiple perspectives?

    முதலில், பழைய காலத்தில் வழிபட்ட கடவுள்கள் இன்று மறைந்துவிட்டன என்பதால் கடவுள் இல்லை என்று நிரூபிக்க முடியாது. அது குறிப்பிட்ட வரலாற்று மத அமைப்புகள் மாறிவிட்டன என்பதைத்தான் காட்டுகிறது. மனிதர்கள் கடவுளைப் பற்றி தவறாகப் புரிந்திருக்கலாம்; ஆனால் அதனால் “பரம்பொருள் இருக்க முடியாது” என்று முடிவு செய்ய முடியாது.
    இரண்டாவது, அறிவியல் பிரபஞ்சத்தின் உள்ளே நிகழும் செயல்முறைகளை விளக்குகிறது. நட்சத்திரங்கள் எப்படி உருவாகின்றன, உயிரினங்கள் எப்படி பரிணாமம் அடைகின்றன, நோய்கள் எப்படி வருகிறது, பொருள் எப்படி நடக்கிறது என்பவற்றை அறிவியல் விளக்குகிறது. ஆனால் “ஏன் எதுவும் இல்லாமல் ஏதோ ஒன்று இருக்கிறது?”, “ஏன் பிரபஞ்சம் கணித ரீதியாக புரிந்துகொள்ளக்கூடியது?”, “ஏன் மனிதனுக்கு ஒழுக்கப் பொறுப்பு உணர்வு இருக்கிறது?”, “உணர்வு என்ற அனுபவம் என்ன?” போன்ற கேள்விகள் முழுக்க அறிவியல் ஆய்வுக்குள் மட்டும் முடிவதில்லை.
    மூன்றாவது, “God of the gaps” என்ற விமர்சனம் சரியானது, தெரியாத இடங்களில் கடவுளை வைத்து நிரப்புவது தவறு. ஆனால் ஆழமான இறைநம்பிக்கை அப்படிச் சொல்லாது. அது “அறிவியலுக்குத் தெரியாத இடத்தில் கடவுள் இருக்கிறார்” என்று அல்ல; “இருப்பதற்கே அடித்தளமான பரம்பொருள் இருக்கிறார்” என்று சொல்கிறது. இந்த இரண்டையும் குழப்பக்கூடாது.
    நான்காவது, மதத்தின் பெயரில் வன்முறை, சாதி, ஆணாதிக்கம், கொடுமை நடந்தது உண்மை. ஆனால் போர்களுக்கும் ஒடுக்குமுறைக்கும் மதம் மட்டும் காரணம் அல்ல. தேசியவாதம், பேரரசு ஆசை, சாதி/வர்க்க அதிகாரம், இனவாதம், அரசியல் சித்தாந்தம், மாநில அதிகாரம் ஆகியவையும் பெரும் வன்முறைகளை ஏற்படுத்தியுள்ளன. ஆழமான பிரச்சினை மதம் மட்டும் அல்ல; பொறுப்பில்லாத மனித அதிகாரம்.
    ஐந்தாவது, ஒழுக்கத்தை சட்டம், அரசியல் சாசனம், அறிவியல் என்ற மூன்றில் மட்டும் அடக்க முடியாது. சட்டம் தண்டிக்கலாம். அறிவியல் விளைவுகளைச் சொல்லலாம். ஆனால் “மனித கண்ணியம் ஏன் புனிதமானது?”, “பலவீனரை ஏன் காப்பாற்ற வேண்டும்?”, “சத்தியம் ஏன் மதிப்புடையது?” போன்ற கேள்விகளுக்கு வெறும் அறிவியல் மட்டும் பதில் தராது. மத மரபுகள் உட்பட பல நெறி மரபுகள் மனித கருணை, தியாகம், நீதி, பரிவு ஆகியவற்றை உருவாக்கியுள்ளன.
    ஆறாவது, பால்வீதியில் மனிதன் தூசி அளவு சிறியவன் என்பதால் மனித வாழ்க்கை அர்த்தமற்றது என்று ஆகாது. அளவு என்பது மதிப்பு அல்ல. ஒரு குழந்தை ஒரு மலைக்குப் பக்கத்தில் மிகச் சிறியது; ஆனால் அதன் மதிப்பு மலையை விட அதிகம். அதுபோல பிரபஞ்சம் மிகப் பெரியது என்பதால் மனிதனுக்கு நோக்கம் இல்லை என்று நிரூபிக்க முடியாது.
    அதனால் சரியான நிலைமை “அறிவியலுக்கு எதிரான கண்மூடித்தனமான நம்பிக்கை”யும் அல்ல; “அறிவியல் பெயரில் அனைத்து ஆன்மீகக் கேள்விகளையும் மூடிவிடும் நாத்திகம்”யும் அல்ல. மூடநம்பிக்கையை நிராகரிக்க வேண்டும். சாதி, கொடுமை, மதவெறி ஆகியவற்றை எதிர்க்க வேண்டும். அறிவியலை ஏற்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில் கடவுள் அல்லது பரம்பொருள் குறித்த ஆழமான தத்துவ நம்பிக்கைக்கும் இடம் இருக்கலாம்.

    1. Sridhar Subramaniam (via Facebook) — responding to the above points:

      — Comment 1 —

      // முதலில், பழைய காலத்தில் வழிபட்ட கடவுள்கள் இன்று மறைந்துவிட்டன என்பதால் கடவுள் இல்லை என்று நிரூபிக்க முடியாது. அது குறிப்பிட்ட வரலாற்று மத அமைப்புகள் மாறிவிட்டன என்பதைத்தான் காட்டுகிறது. மனிதர்கள் கடவுளைப் பற்றி தவறாகப் புரிந்திருக்கலாம்; ஆனால் அதனால் “பரம்பொருள் இருக்க முடியாது” என்று முடிவு செய்ய முடியாது. //
      அன்றைய மனிதர்கள் கடவுளை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. சரி, இன்றைய மனிதர்கள் கரெக்டாகப் புரிந்து கொண்டு விட்டார்களா? ஆமெனில் எதனை வைத்து அதை நிறுவுவீர்கள்?
      // இரண்டாவது, அறிவியல் பிரபஞ்சத்தின் உள்ளே நிகழும் செயல்முறைகளை விளக்குகிறது. நட்சத்திரங்கள் எப்படி உருவாகின்றன, உயிரினங்கள் எப்படி பரிணாமம் அடைகின்றன, நோய்கள் எப்படி வருகிறது, பொருள் எப்படி நடக்கிறது என்பவற்றை அறிவியல் விளக்குகிறது. ஆனால் “ஏன் எதுவும் இல்லாமல் ஏதோ ஒன்று இருக்கிறது?”, “ஏன் பிரபஞ்சம் கணித ரீதியாக புரிந்துகொள்ளக்கூடியது?”, “ஏன் மனிதனுக்கு ஒழுக்கப் பொறுப்பு உணர்வு இருக்கிறது?”, “உணர்வு என்ற அனுபவம் என்ன?” போன்ற கேள்விகள் முழுக்க அறிவியல் ஆய்வுக்குள் மட்டும் முடிவதில்லை. //
      ஆம், அறிவியலிடம் இவற்றுக்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை. அது போலவே மதங்களிடமும், கடவுள் நம்பிக்கையாளர்களிடமும் கூட விடை இல்லை. So, this is a classic ‘God of the Gaps’ argument.

      — Comment 2 —

      // மூன்றாவது, “God of the gaps” என்ற விமர்சனம் சரியானது, தெரியாத இடங்களில் கடவுளை வைத்து நிரப்புவது தவறு. ஆனால் ஆழமான இறைநம்பிக்கை அப்படிச் சொல்லாது. அது “அறிவியலுக்குத் தெரியாத இடத்தில் கடவுள் இருக்கிறார்” என்று அல்ல; “இருப்பதற்கே அடித்தளமான பரம்பொருள் இருக்கிறார்” என்று சொல்கிறது. இந்த இரண்டையும் குழப்பக்கூடாது. //
      பரம்பொருள் என்பதும் கடவுள் என்பதும் ஒன்றுதான். வேறு ஒரு பெயரை வைத்து இந்த வாதத்தில் முன்னேற முடியாது.
      // நான்காவது, மதத்தின் பெயரில் வன்முறை, சாதி, ஆணாதிக்கம், கொடுமை நடந்தது உண்மை. ஆனால் போர்களுக்கும் ஒடுக்குமுறைக்கும் மதம் மட்டும் காரணம் அல்ல. தேசியவாதம், பேரரசு ஆசை, சாதி/வர்க்க அதிகாரம், இனவாதம், அரசியல் சித்தாந்தம், மாநில அதிகாரம் ஆகியவையும் பெரும் வன்முறைகளை ஏற்படுத்தியுள்ளன. ஆழமான பிரச்சினை மதம் மட்டும் அல்ல; பொறுப்பில்லாத மனித அதிகாரம். //
      மனிதப் அகங்காரம், பொறுப்பின்மை மூலம் நிகழும் வன்முறை குரூரங்களுக்கு ஒரு expiry date இருக்கிறது. மதங்கள் சார்ந்த குரூரங்களுக்கு இல்லை. காரணம் அவற்றுக்கு இறை அங்கீகாரம் இருக்கிறது. 3500 ஆண்டுகளாக சாதி ஒழியாததற்கும், பிராமண உயர்வுவாதம் தொடர்வதற்கும், 2000 ஆண்டுகளாக யூத வெறுப்பு குறையாததற்கும், 1400 ஆண்டுகளாக புர்கா முறை ஒழியாததற்கும் மதம் காரணம். மதம் சாராத எந்த வன்முறையும், குரூரமும் ஒரு நூற்றாண்டைக் கூடத் தாண்டியதாக வரலாறு இல்லை.
      // ஐந்தாவது, ஒழுக்கத்தை சட்டம், அரசியல் சாசனம், அறிவியல் என்ற மூன்றில் மட்டும் அடக்க முடியாது. சட்டம் தண்டிக்கலாம். அறிவியல் விளைவுகளைச் சொல்லலாம். ஆனால் “மனித கண்ணியம் ஏன் புனிதமானது?”, “பலவீனரை ஏன் காப்பாற்ற வேண்டும்?”, “சத்தியம் ஏன் மதிப்புடையது?” போன்ற கேள்விகளுக்கு வெறும் அறிவியல் மட்டும் பதில் தராது. மத மரபுகள் உட்பட பல நெறி மரபுகள் மனித கருணை, தியாகம், நீதி, பரிவு ஆகியவற்றை உருவாக்கியுள்ளன. //
      “மனித கண்ணியம் ஏன் புனிதமானது?”, “பலவீனரை ஏன் காப்பாற்ற வேண்டும்?”, “சத்தியம் ஏன் மதிப்புடையது?” போன்ற எந்தக் கேள்விக்கும் எந்தப் புனித நூலிலும் விடை இல்லை. மாறாக, சூத்திரர்கள் ஏன் கேவலமானவர்கள் என்று இந்து நூல்கள் பேசுகின்றன. LGBT மக்களை ஏன் கொல்ல வேண்டும் என்று பைபிள் விளக்குகிறது. மனைவியரை எப்படி அடிக்க வேண்டும், அடிமைகளை எப்படி விற்று வாங்க வேண்டும், எந்தெந்த திருட்டுகளுக்கு மாறு கை, மாறு கால் வாங்க வேண்டும் என்று இஸ்லாமிய நூல்கள் விளக்குகின்றன.
      மாறாக, அடிமை முறையை ஒழித்தது செக்யூலரிசம், உடன்கட்டையை ஒழித்தது, சாதியை சட்டவிரோதமாக்கியது, தலித்துகளுக்கு உரிமைகள் தந்தது, பெண்களுக்கு உரிமைகள் கொடுத்தது, ஆகியவை எல்லாமே சாத்தியமானது மதம் தாண்டிய செக்யூலரிசத்தினால் மட்டுமே!

      — Comment 3 —

      // ஆறாவது, பால்வீதியில் மனிதன் தூசி அளவு சிறியவன் என்பதால் மனித வாழ்க்கை அர்த்தமற்றது என்று ஆகாது. அளவு என்பது மதிப்பு அல்ல. ஒரு குழந்தை ஒரு மலைக்குப் பக்கத்தில் மிகச் சிறியது; ஆனால் அதன் மதிப்பு மலையை விட அதிகம். அதுபோல பிரபஞ்சம் மிகப் பெரியது என்பதால் மனிதனுக்கு நோக்கம் இல்லை என்று நிரூபிக்க முடியாது. //
      மனித வாழ்வுக்கும் ஒரு கொசு, ஈ, எறும்பு வாழ்வுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதை ஆதாரபூர்வமாக புத்தகத்தில் நிறுவி இருக்கிறேன்.
      // அதனால் சரியான நிலைமை “அறிவியலுக்கு எதிரான கண்மூடித்தனமான நம்பிக்கை”யும் அல்ல; “அறிவியல் பெயரில் அனைத்து ஆன்மீகக் கேள்விகளையும் மூடிவிடும் நாத்திகம்”யும் அல்ல. மூடநம்பிக்கையை நிராகரிக்க வேண்டும். சாதி, கொடுமை, மதவெறி ஆகியவற்றை எதிர்க்க வேண்டும். அறிவியலை ஏற்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில் கடவுள் அல்லது பரம்பொருள் குறித்த ஆழமான தத்துவ நம்பிக்கைக்கும் இடம் இருக்கலாம். //
      இந்த மாதிரி தத்துவ நம்பிக்கைகளில் எனக்குப் பிரச்சினையே இல்லை. மனித உரிமை, பெண் உரிமை, தலித் உரிமை, விலங்குரிமை, LGBT உரிமை, போன்றவற்றை மீற முயலாமல், அறிவியல் முன்னேற்றங்களுக்கு குறுக்கே நிற்காமல், அரசியலில், ஆட்சியில் மதத்தை நுழைக்க முயலாமல் இயங்கும் எந்த இறை நம்பிக்கையையும் நான் கேள்வி கேட்பதில்லை. புத்தகமும் அதனை விமர்சிப்பதில்லை. அது வெறும் நேர விரயம் என்பதைத் தவிர அதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading