அந்தமான் போர்ட் பிளேரை நாங்கள் சுற்றிப் பார்த்து, இரவு தங்கிவிட்டு அடுத்த நாள் சென்றது கடற்கரை சொர்க்கமான ஹேவ்லாக் ஐலாண்டு என்கிற சுவராஜ் தீவு. இது போர்ட் பிளேருக்கு கிழக்கில் இருக்கிறது – இங்கேயிருந்து சில நூறு மைல்களில் மியான்மார் (பர்மா) வரும் என்றால் இந்தியத் தீபகற்பத்திலிருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். சுவராஜ் தீவுக்குள் போக வர ஒரே வழி, போர்ட் பிளேரில் இருந்து தினம் சில முறை செல்லும் பயணப்படகுகள் (ஃபெர்ரி). போர்ட் பிளேர் துறைமுகத்தில், விமான நிலையம் போன்ற சோதனைகளைக் கடந்து முன்பே சீட்டு வாங்கி இருந்த தனியார் நிறுவன சொகுசுப் படகில் ஏறி அமர்ந்தோம். போர்ட் பிளேரில் இருந்து சுவராஜ் தீவு போகும் பயணம் சுமார் இரண்டு மணி நேரம் எடுக்கிறது. நான் இதற்கு முன்னர் பல முறை வெளிநாடுகளில் அமெரிக்கா, ஹாங்காங் -மக்காவு, தாய்லாந்து போன்ற நாடுகளில் ஃபெர்ரிகளில் போய் இருந்தாலும் இந்தியாவில் இப்படியான பயணம் செய்வது பெருமையாகவும், ஏனோ நிம்மதியாகவும் இருந்தது. 🛳️போர்ட் பிளேர் துறைமுகத்தைத் தாண்டியதிலிருந்து நமக்கு முன்னே கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சலனமற்ற நீல நிறத் தண்ணீர், தண்ணீர், தண்ணீர். இலக்குக்கு அருகே வர வர அடர்ந்த காடுகள் பச்சைப் பசேல் என்று நம்மை எங்கோ கற்பனை உலகுக்கு அழைத்துச் சென்றது. தமிழ் சினிமா இது வரை இந்த அழகை அள்ளிக் கொள்ளாமல் போனது நம் இழப்பு. சரி, சுவராஜ் தீவுக்குப் படகு வந்தவுடன், படியில் இறங்கி, நம் கைப்பைகளை எடுத்துக் கொண்டு அப்படியே சாலைக்கு வர வேண்டியது தான். துறைமுகமோ, பாதுகாப்புக் கட்டிடங்களோ எதுவும் கிடையாது. இதுவே ஓர் அனுபவமாக இருந்தது. ஓர் அடி நிழல்கூட இல்லை, அதுவும் நாங்கள் போனது மே மாதக் கோடை வெயில் என்பதால், சுட்டுப் பொசுக்கியது. வெளியே வந்து முன்பே பதிவு செய்திருந்த வழிகாட்டி, காரில் வந்து எங்களுக்கான விடுமுறை தங்குமிடத்திற்கு (ரீசார்ட்) அழைத்துச் சென்றார். மதிய உணவுக்கு ரீசார்ட்டில் இல்லாமல், அதற்கு வெளியே சாலையில் அடுத்திருந்த ராஜஸ்தானி டாபாவில் எளிமையான, ஆனால் சூடாகப் பரிமாறிய சைவ உணவைச் சாப்பிட்டோம் – யு.பி.ஏ. (கூகுள் பே) டிஜிட்டல் முறையிலேயே பணம் செலுத்தினோம், இதுவும் ஏனோ எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ⛱️சிறு ஓய்வுக்குப் பிறகு நாங்கள் முதலாவதாகச் சென்றது, உலகப் புகழ் பெற்ற ராதாநகர் பீச் (கடற்கரை), இது தீவின் மேற்கில் இருக்கிறது. சிறிய தீவுதான் என்பதால் எங்கள் இருப்பிடத்திலிருந்து இந்தக் கடற்கரை சுமார் ஆறு, ஏழு கிலோமீட்டர். போக்குவரத்து நெரிசல் என்றெல்லாம் எதுவுமில்லை, மனம் ஏனோ இதை நினைத்துக் கொண்டது. சுத்தமான மணல், பளிங்கு நிற அலைகள். கடற்கரை எங்கும் சுற்றலா பயணிகள் இருந்தார்கள், ஆனால் மொத்தமே சுமார் நூறுக்கு குறைவாக இருந்ததால் கூட்டம் இல்லை, பயமின்றி இங்கே குளிக்கலாம் என்பதால் குடும்பமாக வந்திருந்தவர்களில் முதியவர்கள் கூட கடல் நீரில் அரைக்கால் சட்டையில், சுடிதாரில் இறங்கி மகிழ்ந்தார்கள். இந்தியாவில் இது ஆச்சரியம் அதனால் குறிப்பிட்டுச் சொல்லிவிடுகிறேன், உடை மாற்றிக் கொள்வதற்குத் துர்நாற்றம் அடிக்காத குளியல் அறைகள், பத்து ரூபாய் கட்டணம் என்றாலும் பாராட்ட வேண்டியது. நிறையப் புது மணத் தம்பதிகள் என்று நினைக்கிறேன், ஒவ்வொரு ஜோடிக்கும் ஒரு போட்டோகிரப்பர் என்று படம் எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தனர், நான் கவனித்தவரை மனைவிகள் போட்டோகிரப்பர் நிற்க, கட்டிப்பிடிக்க, சிரிக்க என்று சொன்னதையெல்லாம் சரியாகப் புரிந்து கொண்டு செய்தார்கள், ஆனால் கணவன்மார்கள் ஏனோ வெட்கப்பட்டுக் கொண்டு, விஜய் ஆண்டனி மாதிரியான பாவனையில் இருந்தார்கள், உள்ளூர் புகைப்படக் கலைஞர்கள் ஏண்டா இந்தத் தொழிலுக்கு வந்தோம் என்று மனதில் நினைத்ததை அருகில் நடக்கையில் கேட்க முடிந்தது. நீண்ட கடற்கரை என்பதால், கூட்டத்தைத் தாண்டி நடந்தால் ஆள் நடமாட்டமே இல்லை, அவ்வளவு ரம்மியமாக இருந்தது, சுத்தமான காற்று, அமைதி, அதைவிட எங்குமே குப்பை இல்லை. 🩴சுமார் இரண்டு மணி நேரம் காலாற நடந்து திரும்புகையில் சூரிய அஸ்தமனம். வானம் எங்கும் தங்க நிறமாக ஜொலித்தது. இந்தக் கடற்கரையில் இரவில் பூச்சிகள் தொல்லை என்பதால் மாலை ஆறு மணிக்குப் பிறகு கடற்கரையைப் பூட்டிவிடுகிறார்கள் – அதாவது எல்லோரையும் காவல்துறையினர் வெளியே அனுப்பி, சாலையிலிருந்து உள்ளே செல்லும் நுழைவாயிலை மூடிவிடுகிறார்கள். இந்த அழகைப் பார்த்தபடியே இருக்க வேண்டும் என்றால் அங்கேயிருக்கும் தாஜ் ஹோட்டலில் அறை எடுத்துத் தொலைவிலிருந்து பார்க்கலாம், சரி அதைச் செய்யலாம் என்று நினைத்து உள்ளே போய் ஒரு நாள் இரவு வாடகை என்னவென்று கேட்டேன் – அதிகமில்லை ஆரம்பமே வெறும் முப்பதாயிரம் ரூபாய் என்றார்கள். தாஜ்’க்கு அருகிலேயே இன்னொரு பிரபல ரீசார்ட் – பேர்புட் அட் ஹேவ்லாக், இதிலும் வாடகை அதிகம், அடுத்த முறை வாய்ப்புக் கிடைத்தால் இங்கே தங்க ஆசை. 🍽️எங்கள் விடுதிக்குத் திரும்பி, உடை மாற்றிக் கொண்டு இரவு உணவுக்கு, என்னுடன் வந்த நண்பரின் நண்பர் இங்கே ஹேவ்லாக்கில் இருப்பதால் அவரின் அழைப்பை ஏற்று இங்கே புதிதாக வந்திருக்கும் இன்னுமொரு பெரிய ஆடம்பர விடுதியான “திலார் சிரோ அந்தமான்” (சி.ஜி.எச். எர்த்) சென்றோம். இங்கே எல்லாமே விலை அதிகம் ஆனால் இங்கேயிருக்கும் உணவகத்தில் நாம் கேட்ட பிறகே, நாம் தேர்வு செய்த உணவை முதலிலிருந்து சமைத்து சுடச்சுடக் கொடுக்கிறார்கள் – நல்ல சுவையாக இருந்தது. அடுத்த நாள் காலையில் போக வேண்டிய இடத்தை நினைத்து எனக்கு இரவு உறக்கம் வர நள்ளிரவுக்கு மேல் ஆனது. ☀️இந்தியத் தீபகற்பத்திற்கு ஆயிரம் மைல் கிழக்காக இருப்பதால் இங்கே சுமார் நாலரை மணிக்கே சூரியன் உதயமாகவிடுகிறது. ஐந்து மணிக்கெல்லாம் வெளிச்சமாக இருக்கிறது. சரி விசயத்திற்கு வருவோம். அடுத்த நாள் காலை ஐந்து மணிக்கு எழுந்து, காப்பிக் குடித்து தயார் ஆகி, ஐந்தரை மணிக்குச் சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த அந்தப் பயிற்சிப் பள்ளிக்குச் சென்றுவிட்டோம். என்ன பயிற்சி என்றா கேட்கிறீர்கள் – நான் குருட்டுத் தைரியத்தில் பதிவு செய்த ஆழ்கடல் மூழ்குதல், அதாவது ஸ்கூபா டைவிங் பயிற்சி. இங்கே பல இடத்தில் ஸ்கூபா டைவிங் செய்கிறார்கள், சரியாகச் செய்யவில்லை என்றால் ஆபத்து என்பதால் எங்கள் வழிகாட்டி பதிவு செய்த இந்த இடத்தை எங்களின் விடுதி அலுவலரிடமும் சரிபார்த்த பிறகு தான் வந்திருந்தோம். இந்தப் பள்ளியில் இரண்டு மணி நேர வகுப்புக்கு ஒருவருக்கு ஐந்தாயிரம் ரூபாய், இதில் நிலத்தில் சுமார் முப்பது நிமிடப் பயிற்சி, ஆழ் கடலுக்கு முப்பது நிமிடப் படகுச் சவாரி, கடல் நீரின் உள்ளே முப்பது நிமிடம், நீங்கள் ஸ்கூபா டைவிங் செய்யும் போது உங்களைப் படமும், நிகழ்படமும் எடுத்துக் கொடுப்பது எல்லாம் அடக்கம். போன உடன் நாம் அணிந்திருக்கும் உடையிலிருந்து மாறி, அவர்கள் கொடுக்கும் ரப்பர் சூட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் – நமக்கு முன்னர் பயன்படுத்தித் திரும்பிய சூட்டை டேட்டால் கிருமி நீக்கி தண்ணீரில் முக்கி எடுத்து காயவைத்துக் கொடுக்கிறார்கள், ரொம்ப நல்லவர்கள் என்று மகிழ்ந்தேன். 🤿எங்களைக் கடற்கரைக்குக் கூட்டிச் சென்று ஸ்கூபா கருவியைக் கண்ணையும், மூக்கையும் சூழ்ந்திருக்கும் வகையில் மாட்டி விட்டார் எனக்கான பயிற்சியாளர் – பிராணவாயு தொட்டி அவரிடமே இருந்தது. தலையைத் தண்ணீரில் மூழ்கி, வாய் வழியாக அந்தச் செயற்கை உதட்டை, காற்றுப் போகா தளவு இறுக்கக் கவ்விக் கொண்டு மூச்சுவிட அவர் செய்துகாட்டினார், பிறகு நானே அதே மாதிரி செய்யக் கட்டளைகளைச் சொல்லிக் கொண்டே போனார். எளிதாகத் தான் இருந்தது, ஆனாலும் இன்னும் சிறிது நேரத்தில் இதை நான் ஆழ்கடலில் செய்யப் போகிறேன் என்பது நினைவில் வந்தவுடன் அதுவரை இருந்த தைரியம் எங்கோ போய்விடத் தொடங்கியது. வெளியில் காட்டிக் கொள்ளாமல் எப்படியோ பயிற்சியை முடித்து எங்களோடு அந்த நேர வகுப்புக்கு வந்திருந்த பத்துபேரோடு படகில் ஏறினேன். எங்களோடு ஒரு கேரளா குடும்பம், அதில் பத்து வயதுக்கு மேலான சிறுவனும் சிறுமியும் இருந்தார்கள் – அவர்களே வரும் போது நாமும் தைரியமாக இருக்க வேண்டும் வெங்கட் என்று எத்தனை முறை கூறிக் கொண்டாலும் உள்ளுக்குள் உதறல். எப்படியோ நடுக்கடலுக்குப் படகு போனவுடன், அவர் அவருக்கு ஒரு பிராணவாயு தொட்டியை முதுகில் மாட்டி, படகின் சுற்றுச்சுவரின் மேல் திரும்பி உட்கார வைத்து திடீர் என்று கடலுக்குள் தள்ளிவிட்டார்கள், உயிர் போய் உயிர் வந்தது, இருந்தாலும் ஒருவிதத்தில் பெருமையாகவும் இருந்தது. எனக்கு ஓரளவுக்கு நீச்சல் தெரியும், ஆனால் அதெல்லாம் நீச்சல் குளத்தில், இதுவோ ஆழ்கடல், வாயில் மூச்சுவிட்டால் போதும் வேறு எதுவும் பயமில்லை என்று மூளை சொல்லிக் கொண்டேயிருந்தது, ஆனாலும் உதறல் நிற்கவில்லை. என்னோடு வந்த மற்றவர்களின் தலையைக் காணவே இல்லை, எல்லோரும் தொலைவில் தண்ணீருக்குள் இருந்தார்கள், சில நிமிடங்கள் பொறுமையாக இருந்த எனது பயிற்சியாளர் என்னை இழுத்துக் கொண்டு தொலைவுக்குக் கூட்டிச் சென்று என் தலையைத் தண்ணீரில் மூழ்கி கடலின் அடியில் பார்க்கச் சொன்னார். முதல் சில முறை தடுமாறினேன், நாங்கள் வந்த படகு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதைப் பார்த்து பயத்தில் உறைந்தே போனேன். பிறகு அடுத்தடுத்த முயற்சிகளின் போது ஒரு பிடிப்பு வந்தது, சுமார் நூறு அடி கீழே சென்றிருப்பேன், என் கூடவே, என்னைப் பிடித்துக் கொண்டு, பிராணவாயு அழுத்தத்தைச் சீர் செய்தபடியே பயிற்சியாளர் வந்தார் – கொஞ்சம் அமைதியாகி கீழே பார்த்தேன், என்ன அழகு, என்ன ஒழுக்கம் அங்கே, காணக் கண் கோடி வேண்டும். இன்னும் ஒரு முப்பது, நாற்பது அடி போகலாம், அங்கேயிருக்கும் பவழப் பாறைகளைப் பார்க்கலாம் என்றார், திடீரென்று பயம் திரும்பவே, போதும் என்று சொல்லி மேலே வரச் சைகைச் செய்தேன், புரிந்து கொண்டு என்னைப் பத்திரமாகப் படகுக்குக் கூட்டி வந்தார் – மொத்தம் இருபத்தைந்து நிமிடங்களுக்கு மேலாக ஆழ்கடலில் இருந்திருப்பேன், எனக்குப் போதும். அடுத்த முறை இன்னும் கொஞ்சம் மூச்சுப் பயிற்சி செய்தால் சுலபமாகச் செய்வேன் என்ற நம்பிக்கை இப்போது இருக்கிறது. கடற்கரைக்குத் திரும்பி, உடை மாற்றி, எங்களின் அறைக்குத் திரும்பினோம். 🏖️காலை உணவை முடித்து யானை தீவுக்குச் செல்லலாம், அங்கே பலவித நீர் விளையாட்டுகள் இருக்கும் என்று எங்களைப் படகுத்துறைக்குக் கூட்டிச் சென்றார் எங்களின் வழிகாட்டி. அங்கே போனால் பயங்கர வெயில், காலையில் சீக்கிரம் எழுந்து ஸ்கூபா டைவிங் செய்திருந்ததால் மிகச் சோர்வாக இருந்தது. அறைக்குத் திரும்பி, ஒரு தூக்கம் போட்டு மதிய உணவு உண்டு, மாலை மூன்றரை மணிக்குக் கிளம்பி, தீவில் இருக்கும் அடுத்த பிரபலமான கடற்கரையான காலாபத்தர் பீச்சுக்குச் சென்றோம், இது தீவின் கிழக்கில் இருக்கிறது, இது இருப்பதும் எங்கள் விடுதியிலிருந்து சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவு தான். இது நீளத்தில் சிறிய கடற்கரை, பச்சை நிறத்தில் ஓவியம் போன்ற கடல் அலைகள் இங்கே. இருபது முப்பது நபர்கள் தான் இருந்தார்கள். சாலை கடையில் மாகி நூடுல்ஸ்ஸும், அருகே செவ்விளநீரும் வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். நாங்கள் காலாற மிருதுவான கடற்கரை மணலில் நடந்துவிட்டு, பல நூறு படங்கள் எடுத்துவிட்டுத் திரும்பினோம். 🛵எங்கள் விடுதிக்கு எதிரிலேயே இருந்த கடையில் இரண்டு ஸ்கூட்டரை வாடகைக்கு எடுத்துக் கொண்டு தீவின் கிழக்கு மேற்கு என்று இருந்த ஒரே சாலை எங்கெல்லாம் சென்றதோ ஒரு மணி நேரத்திற்கு மேலாக அதில் சுற்றி வந்தோம். சுவராஜ் துவிப் (தீவு) காவல்துறை நடத்தும் இரவு கிரிக்கேட் போட்டியைக் கண்டோம், தீவுக்கு சென்னையிலிருந்து வரும் இணையத் தொலைத்தொடர்பு நீர்மூழ்கி கம்பிவடம் வந்திறங்கும் இடத்தைப் பார்த்தோம். வழியில் அழகான ஶ்ரீ ராதா கிருஷ்ணா கோயிலில் சாமி தரிசனம் செய்தோம், கோயிலைப் பராமரிக்கும் மூதாட்டி ஒருவர் அவராக வந்து எங்களுக்கு நாமம் வரைந்துவிட்டர் – தட்டில் பணம் போட்டோம், அவர் சிரித்துக் கொண்டு அதை அருகில் இருந்த கோயில் உண்டியில் போட்டு எங்களுக்கு வணக்கம் சொல்லி அனுப்பிவைத்தார் – எளிய மனிதர்களிடம் பணத்தாசை இருப்பதில்லை. இருட்டிவிட்டதால் வந்த வழியே திரும்பி விடுதியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த தமிழில் பெயர்ப் பலகையிருந்த #தோசை கொட்டகை உணவகத்தில் சுடச்சுட ஊத்தப்பம், பொடி தோசையும் சாப்பிட்டுவிட்டு மன நிறைவோடு அறைக்குத் திரும்பினோம். 🛳️அடுத்த நாள் காலையில் ஐந்தரை மணிக்கு எழுந்து, ஸ்கூட்டர் எங்களிடமே இருந்ததால், இருபத்தி நான்கு மணி நேர (ஒரு நாள்) வாடகை ஐந்நூறு இருநூறு ரூபாய் கொடுத்திருந்தோம், காலை வெளிச்சத்தில் (அமைதியில்) தீவை இன்னொரு முறை வண்டியில் சுற்றி வந்தோம். காலை உணவு முடித்து, அறையை ஒப்படைத்துவிட்டு, காரில் ஏறி படகுத்துறைக்கு வந்தோம். நாங்கள் பதிவு செய்திருந்த நிறுவனத்தின் கடையின் (கடை என்று கூடச் சொல்ல முடியாதளவு சிறியது) முன்னர் வெயிலில் வரிசையாக நின்று எங்களின் பதிவைக் காட்டி, இருக்கை சீட்டை வாங்கி பயணப்படகு வரும் வரை காத்திருந்து ஏறினோம். இதுவும் குளிர்சாதன வசதி கொண்ட படகு தான், வந்த படகைக் காட்டிலும் இது சொகுசாக இருந்தது. அடுத்த இரண்டு மணி நேரத்தில், மனதில் பல வண்ண மயமான நினைவுகளோடு போர்ட் பிளேருக்கு திரும்பினோம். போர்ட் பிளேரில் அன்றைக்கு நாங்கள் போன இடங்களை இதற்கு முன்னர் எழுதிய அந்தமான் பதிவில் படிக்கலாம்.
போர்ட் பிளேர் பயணிகள் துறைமுகம் - Andaman Port Blair Passenger Terminal

போர்ட் பிளேர் பயணிகள் துறைமுகம் – Andaman Port Blair Passenger Terminal

இது நாங்கள் சென்ற படகு இல்லை, இது உலகிலேயே பெரிய மிதக்கும் அடுக்குமாடி குடியிருப்பு, ஒவ்வொரு வீடும் பல நூறு கோடி ரூபாய், The World.

இது நாங்கள் சென்ற படகு இல்லை, இது உலகிலேயே பெரிய மிதக்கும் அடுக்குமாடி குடியிருப்பு, ஒவ்வொரு வீடும் பல நூறு கோடி ரூபாய், The World.

போர்ட் பிளேரில் இருந்து சுவராஜ் தீவு போகும் பயணப்படகு (ஃபெர்ரி)

போர்ட் பிளேரில் இருந்து சுவராஜ் தீவு போகும் பயணப்படகு (ஃபெர்ரி)

ஹேவ்லாக் ஐலாண்டு என்கிற சுவராஜ் தீவு படகுத்துறை - Swaraj Dweep

ஹேவ்லாக் ஐலாண்டு என்கிற சுவராஜ் தீவு படகுத்துறை – Swaraj Dweep

நாங்கள் தங்கியிருந்த விடுமுறை தங்குமிடம் (ரீசார்ட்)

நாங்கள் தங்கியிருந்த விடுமுறை தங்குமிடம் (ரீசார்ட்)

ராஜஸ்தானி டாபா, சுவராஜ் தீவு

ராஜஸ்தானி டாபா, சுவராஜ் தீவு

இராதாநகர் பீச் - Radhanagar Beach, Havelock Island

இராதாநகர் பீச் – Radhanagar Beach, Havelock Island

இராதாநகர் கடற்கரை

இராதாநகர் கடற்கரை

சுத்தமான மணல், பளிங்கு நிற அலைகள்

சுத்தமான மணல், பளிங்கு நிற அலைகள்

மொத்தமே சுமார் நூறுக்கு குறைவாக இருந்ததால் கூட்டம் இல்லை

மொத்தமே சுமார் நூறுக்கு குறைவாக இருந்ததால் கூட்டம் இல்லை

சூரிய அஸ்தமனம் - வானம் எங்கும் தங்க நிறமாக ஜொலித்தது

சூரிய அஸ்தமனம் – வானம் எங்கும் தங்க நிறமாக ஜொலித்தது

நான் பறந்தேன்

நான் பறந்தேன்

பெரிய ஆடம்பர விடுதியான “திலார் சிரோ அந்தமான்” (சி.ஜி.எச். எர்த்)

பெரிய ஆடம்பர விடுதியான “திலார் சிரோ அந்தமான்” (சி.ஜி.எச். எர்த்)

காலை ஐந்தரை மணிக்கு வெளிச்சம்

காலை ஐந்தரை மணிக்கு வெளிச்சம்

யானை தீவுக்கு (எலிபெண்ட் ஐலாண்ட்) போகும் முனையம்

யானை தீவுக்கு (எலிபெண்ட் ஐலாண்ட்) போகும் முனையம்

நான் முதல் முறையாக ஸ்கூபா டைவிங் செய்த போது

நான் முதல் முறையாக ஸ்கூபா டைவிங் செய்த போது

ஹேவ்லாக் ஐலாண்டு என்கிற சுவராஜ் தீவில் ஒரு கடற்கரை

ஹேவ்லாக் ஐலாண்டு என்கிற சுவராஜ் தீவில் ஒரு கடற்கரை

காலாபத்தர் பீச் - Kalapathar Beach, Havelock Island

காலாபத்தர் பீச் – Kalapathar Beach, Havelock Island

காலாபத்தர் கடற்கரையில் இருந்த கடை

காலாபத்தர் கடற்கரையில் இருந்த கடை

ஹேவ்லாக் ஐலாண்டு என்கிற சுவராஜ் தீவில் ஒரு கடற்கரை

ஹேவ்லாக் ஐலாண்டு என்கிற சுவராஜ் தீவில் ஒரு கடற்கரை

இரண்டு ஸ்கூட்டரை  வாடகைக்கு எடுத்துக் கொண்டு தீவின் கிழக்கு மேற்கு என்று இருந்த ஒரே சாலை எங்கெல்லாம் சென்றதோ ஒரு மணி நேரத்திற்கு மேலாக அதில் சுற்றி வந்தோம்.

இரண்டு ஸ்கூட்டரை வாடகைக்கு எடுத்துக் கொண்டு தீவின் கிழக்கு மேற்கு என்று இருந்த ஒரே சாலை எங்கெல்லாம் சென்றதோ ஒரு மணி நேரத்திற்கு மேலாக அதில் சுற்றி வந்தோம்.

தமிழில் பெயர்ப் பலகையிருந்த #தோசை  கொட்டகை உணவகம்

தமிழில் பெயர்ப் பலகையிருந்த #தோசை கொட்டகை உணவகம்

ஶ்ரீ ஶ்ரீ ராதா கிருஷ்ணா கோயில்

ஶ்ரீ ஶ்ரீ ராதா கிருஷ்ணா கோயில்

அதிகாலையில் மீண்டும் ஒருமுறை தீவைச் சுற்றி ஸ்கூட்டர் பயணம்

அதிகாலையில் மீண்டும் ஒருமுறை தீவைச் சுற்றி ஸ்கூட்டர் பயணம்

போர்ட் பிளேருக்கு திரும்பிய நாட்டிக்கா பயணப்படகு

போர்ட் பிளேருக்கு திரும்பிய நாட்டிக்கா பயணப்படகு


Discover more from Venkatarangan blog

Subscribe to get the latest posts to your email.

Tagged in:

,