யூ.பி.ஐ. (கூகுள் பே, பே.டி.எம்) போன்ற செயலிகள் மூலம் மின்வழி பணப் பரிமாற்றம் செய்யும் போது, செய்தவுடன் திரும்பப் பெறும் ஒரு முறையை அரசாங்கம் ஆலோசித்துக் கொண்டிருக்கிறது என்று சொல்கிறது ஒரு செய்திக் குறிப்பு. இதில் பல நடைமுறை, தொழில்நுட்பச் சிக்கல்கள் இருக்கிறது, இதைச் செய்வது அவ்வளவு எளியதில்லை, இருந்தும் இது அமுலுக்கு வந்தால் என்னைப் போன்றவர்களுக்கு வசதியாக இருக்கும். ஏன் என்றா கேட்கிறீர்கள்?

சென்ற வாரம், ஒரு நிறுவனத்திற்கு, UPI (கூகுள் பே) மூலமாக ரூபாய் 17,500 அனுப்ப வேண்டும். என்னுடைய கவனக் குறைவினால் விசைப்பலகையில் ஒன்றுக்கு பதிலாக கீழேயிருக்கும் 4ஐ அழுத்தி, அடுத்து வந்த திரையையும் சரியாகப் பார்க்காமல் (இப்பொழுது என்ன நினைக்கிறீர்கள் என்று தெரியும், அதைச் சொல்லி என்னை வெறுப்பேற்ற வேண்டாம்) ரூபாய் 47,500 அனுப்பிவிட்டேன். அதாவது ரூபாய் 30,000 கூடுதலாக. அனுப்பியது பெரிய நிறுவனத்திற்கு, உடனேயே என் பான் அட்டை எண்ணை, வங்கிக் கணக்கு எண், செய்த பரிவர்த்தனை விவரங்களை எல்லாம் ஒரு கடிதமாக எழுதி, கையெழுத்திட்டு அந்த நிறுவனத்திற்கு அனுப்பி, கொஞ்சம் கெஞ்சி, இரண்டொரு நாளில் பணத்தை (ரூபாய் 30,000) திரும்பப் பெற்றேன். நல்ல காலம், அதிகமாகப் பெற்ற பணத்தைத் திருப்பியெல்லாம் தர மாட்டோம், வேண்டுமானால் சேவையாக/பொருளாக வாங்கிக் கொள்ளவும் என்று அவர்கள் சண்டித்தனம் செய்யவில்லை.

Categorized in:

Tagged in: