கரோனாவுக்குப் பிறகு மக்கள் கூட்டம் கூட்டமாக எல்லாச் சுற்றுலாத் தலங்களுக்கும், விமானங்களிலும் பயணம் செய்கிறார்கள். சுற்றுலாவுக்கு அடுத்ததாக அதி வேகமாகப் பல இடங்களிலும் வேலை நடைபெறுவது என்றால் அது கட்டிடத்துறை போலிருக்கிறது. சென்னையில் திரும்பிய இடமெல்லாம் பழைய வீடுகளை இடித்து புது அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது, தென் சென்னையில் அப்படிக் கட்டப்படுவது எல்லாமே ஆடம்பரக் குடியிருப்புகள் தான், சில அதி சொகுசு குடியிருப்புகள் (Super Luxury). பெருந்தொற்று காலத்தில் இந்தக் கட்டுமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கலாம், அதனால் ஒரே சமயத்தில் பல இடங்களிலும் வேலை நடப்பது போல் தோன்றுகின்றது.

நான் இருக்கும் தெருவில் சென்ற இரண்டு வருடமாக அடுத்த வீட்டில் கட்டிட வேலைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. சென்ற வாரம் தான் ஓர் அளவுக்கு முடிந்தது. அதற்குள், எதிர் வரிசையில் சில மாதங்களுக்கு முன்பு இரண்டு வீடுகள் இடிக்கப்பட்டு அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டத் தொடங்கிவிட்டார்கள். நேற்றிலிருந்து எங்கள் வீட்டிற்குப் பின்புறம் இருக்கும் ஒரு வீடும் இடிக்கப்படத் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் தொடர்ந்து துளையிடும் (டிரிலிங்) மற்றும் இடிக்கப்படும் சத்தம் தான்.

இது இப்படி இருக்க அலுவல் ரீதியாக நான் போகும் தி. நகர் பகுதியிலும் கட்டிடங்கள் இதேபோல இடிக்கப்பட்டு அடுக்குமாடிக் குடியிருப்புகள் வரத் தொடங்கி உள்ளது. அங்கேயும் இதே இடிமான சத்தம் தான். முன்பெல்லாம் கையில் உளி, சுத்தியல் வைத்து கட்டிடங்கள் இடிக்கப்பட்டது, இது மிகச் சிரமமான வேலை என்றாலும் பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்குச் சத்தம் கொஞ்சம் குறைவாக, கை வலிக்கும் போது இடைவேளை விட்டு சத்தம் வரும். இப்போது பிரேக்கர் என்கிற நவீன மோட்டார் இயந்திரம் பயன்படுத்துவதால் இடைவேளை இல்லாமல் சத்தம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒரு வீடு இடிக்கப்பட்டு, புதிதாகக் கட்டப்படுகிறது என்றால், மொத்தத் தெரு அகலத்தையையும், பக்கத்தில் இருக்கும் பல வீடுகளின் முன்புறமும் இவர்களின் கம்பி, செங்கல், பொக்கான பாளங்கள் (ஹாலோ பிளாக்ஸ்) மற்றும் வேலையாட்களின் இரு சக்கர வாகனங்கள் தான். நாம் வாகனத்திலிருந்து இறங்கி அவர்களை வேண்டிக் கேட்டுக் கொண்டால் கொஞ்சம் வழிக் கிடைக்கும், அரசுப் பேருந்து, காவல்துறை வாகனம், அவசரவூர்தி எல்லாவற்றுக்கும் இதே கதி தான் – கட்டுமான துறையின் செல்வாக்கு அந்தளவு.

ஒரு தெருவில் ஒரு வீடு இடிக்கப்படுகிறது, பிறகு கட்டப்படுகிறது என்றால் அந்தத் தெருவே தூசியாகி விடுகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு வாகனங்களாலோ, விமானங்களாலோ கூடக் குறைவு தான், ஆனால் இந்திய நகரங்களில் கட்டுமானங்களால் தான் கண்டிப்பாக அதிகளவில் பாதிப்பு வருகிறது. அதுவும் இந்தியாவின் நகரங்களில் எல்லா வீடுகளும் சிமெண்ட் மற்றும் மணல் கொண்டு கட்டப்படுவதால் இடிக்கும்போது அவை அதிகளவு தூசியை உண்டாக்குகிறது. மீண்டும் கட்டும் போதும் தூசி பரவுகிறது. வீட்டில் ஒரு சிறு மாறுதல் செய்ய வேண்டும் என்றாலும் இடிக்க வேண்டியிருக்கிறது. திரும்பவும் தூசி உண்டாகிறது.

இதில் மிகக் கடினமானது குளியலறை அல்லது கழிப்பறைகளைப் புதுப்பிப்பது. இருக்கும் எல்லா டைல்ஸ்களையும் முழுவதுமாக உடைத்து, உள்ளே போகும் குழாய்களை மாற்றி திரும்ப ஓடுகளை (டைல்ஸ்) பதித்துச் செய்வது போலச் சத்தம், தூசி வரும் வேலை வேறு ஏதாவது இருக்குமா என்று தெரியவில்லை. இரண்டு, மூன்று தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கூடக் கட்டி விடலாம், ஆனால் ஒரு குளியலறையை இடித்துத் திரும்ப ஓடுகளை மாற்றுவது மிகக் கடினம், காலதாமதமாகிக் கொண்டேயிருக்கும், தண்ணீரை விட வேகமாகப் பணம் செலவுமாகும். இது நான் அனுபவப் பூர்வமாகப் பலமுறை என் வீட்டில், அலுவலகத்தில், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் பார்த்துவிட்டேன்.

வீட்டில் சிறு மாறுதலுக்குக் கூட இடித்துக் கட்டுவதற்கு, கழிப்பறைகளைப் புதுப்பிப்பிற்குப் பதிலாக வேறு தொழில்நுட்பமே இந்தியாவில் கிடையாதா? அமெரிக்காவில் ஒரு முழு வீட்டையும் ஒரே நாளில், பன்னிரண்டு மணி நேரத்தில் (Netflix Instant Dream Home) மாற்றிவிடுகிறார்கள். அது தான் வழி என்றால் இந்தியாவிலும் மரத்தால் வீடுகளைக் கட்டலாமே? ஏன் செய்வதில்லை? நகராட்சி அனுமதி அளிக்காதா?

நான் போகும் இடங்களில் மட்டும் தான் இந்த மாதிரி கட்டுமானங்கள் பெருகி உள்ளதா, தூசி வருகிறதா? உங்கள் தெருவில் நிலைமை எப்படி உள்ளது? நீங்கள் குளியலறையைப் புதுப்பித்து இருக்கிறீர்களா, அனுபவங்களைப் பகிரவும்.

#constructionindustry

Categorized in:

Tagged in:

,