நான் அவ்வளவாக லயன் / முத்து காமிக்ஸ் படித்ததில்லை, பள்ளிக் காலங்களில் கூட அவற்றை விரும்பியதாக நினைவில்லை. பெரும்பாலும் அவை ஒரே மாதிரியான கதைகள், அமெரிக்கன் வெஸ்டர்ன், சிகப்பு இந்தியர்கள் பற்றிய கதைகள் தான் இருக்கும் என்பது என் (தவறாக இருக்கலாம்) எண்ணமாக இருந்தது. ஆங்கிலத்தில் நிறைய நிறைய காமிக்ஸ் படித்திருக்கிறேன். தமிழிலும், நிறைய காமிக்ஸ் படித்திருக்கிறேன் அவற்றில் ராணி காமிக்ஸ்ஸில் (மற்றும் தினமணி நாளிதழில்) வெளிவந்த மந்திரவாதி மாண்ட்ரேக் மற்றும் முகமூடி மாயாவி (Phantom) காமிக்ஸ் எனக்கு மிக பிடித்தவை. அதோடு அம்புலிமாமா, கோகுலம் போன்றவையும் எனக்குப் பிடிக்கும்.

காலங்கள் ஓடியது, ஆங்கிலத்தில் அவ்வப்போது நான் ஆர்ச்சி படக் கதைகள் (காமிக்ஸ்) படிப்பது தொடர்ந்தது. ஆனால், தமிழில் காமிக்ஸ் (ஏன் சிறுவர்களுக்கு என்று எந்த பத்திரிகையுமே) வருவது நின்றேவிட்டது என்ற நிலையில், இந்த வகைப் புத்தகங்களை எல்லோரையும் போல நான் மறந்தே இருந்தேன். சில ஆண்டுகளுக்கு முன் (2018ஆம் ஆண்டு என்று நினைவு), சென்னை புத்தகக் காட்சியில் லயன் / முத்து காமிக்ஸ் அரங்கத்தைப் பார்த்தேன், அங்கே இருப்பது அமெரிக்கன் வெஸ்டர்ன் கதைகள் தான் என்ற நினைப்பில் நான் எதுவும் வாங்கவில்லை. பின்னர் ஷான் கருப்புசாமி (என நினைக்கிறேன்) போன்றவர்கள் அவர்களின் பேஸ்புக் பக்கத்தில் லயன் காமிக்ஸ்ஸைப் பற்றிப் புகழ்ந்து எழுதியதைப் பார்த்து, சில புத்தகங்களை வாங்கினேன்.

லயன் காமிக்ஸ் 29 வது ஆண்டு மலர் - பிரளயத்தின் பிள்ளைகள்!

லயன் காமிக்ஸ் 29 வது ஆண்டு மலர் – பிரளயத்தின் பிள்ளைகள்!

பெருந்தொற்று காலத்தில் வாங்கியதைப் படித்தேன், நன்றாகவே இருந்தது. குறிப்பாக இரண்டாம் உலகப் போரில் நாடோடிகள் கூட்டமொன்று நாசி ஜெர்மனியிடம் சிக்கிய கதையைப் படித்து, அதுவும் வண்ணப் படங்களோடு பார்த்துப் படித்தது, அந்தக் காலத்தில் அவர்களோடு நான் வாழ்ந்த உணர்வையே கொடுத்தது. எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இப்படியான அனுபவம் எனக்குப் பிடித்த வெகு சில அறிவியல் புனைகதைகளை (SCI-FI) டிவி தொடர்களைப் பார்க்கும் போது மட்டும் நடக்கும்.அப்படியொன்றும் இந்தக் கதை அபூர்வமானது இல்லை. காமிக்ஸ் என்கிற வடிவத்தின் தனிச் சிறப்பு இந்த வகை தாக்கம் என்று நினைக்கிறேன். ஜப்பான் நாட்டில் பிரபலமான “மங்கா” வகைப் புத்தகங்கள் இன்றும் பலதரப்பட்ட வகைமையில் தொடர்ந்து வெளிவந்து சிறுவர்கள் முதல் முதியவர்களை என எல்லோரையும் கவருவது இதனால் தான் போல.

இந்த வரிசையில் இந்த ஆண்டு சென்னை புத்தகக் காட்சியில் நான் வாங்கியதில் முதலில் நான் படித்தது, இந்த நகைச்சுவைக் கதையை: கதவைத் தட்டும் கேடி/கோடி . கதையென்று பெரியதாகவில்லை, ஒரு கோடீஸ்வரரின் மருமகன், மாக குடிகாரன், அவனை நல்வழிப்படுத்தினால் பல இலட்சம் சன்மானம் கிடைக்கும் என்கிற ஆசையில் இரு துப்பறிவாளர்கள் “மேக் மற்றும் ஜாக்”, வீட்டை பெருக்குதலில் இருந்து ஆரம்பித்து, மிகப் பெரிய காடையனிடம் சிக்கி எப்படி தப்பிக்கிறார்கள் என்பது தான். இதில் காதல், திருப்பம், எதிர்பார்ப்பு, ஏமாற்றம், நம்பிக்கை எனத் தமிழ் பெரிய நாயகர்கள் திரைப்படங்களில் கூட இல்லாத சமாச்சாரங்கள் இருந்தது, நன்றாகப் பொழுது போனது. இந்த வரிசை புத்தகங்களை அடுத்த முறை தேர்ந்தெடுக்க வேண்டும்!

#Lioncomics #லயன்காமிக்ஸ் #முத்துகாமிக்ஸ் #macnjack #ChennaiBookFair2023

Categorized in:

Tagged in:

,