Physical Meetings
Social Media,  தமிழ்

Is it only me who is facing attention deficit in physical meetings?

இப்போதெல்லாம் நேரடி அமர்வுகளில் ஒரு பதினைந்து நிமிடத்துக்குப் பின் ஒரேடியாக உட்கார முடிவதில்லை. இது எனக்கு மட்டும் தானா?

அந்த மீட்டிங் அலுவல் ரீதியாக இருக்கட்டும் அல்லது குடும்பத்து நிகழ்ச்சியாகட்டும் அல்லது வீட்டிற்கு வந்திருக்கும் (இல்லை நாம் போயிருக்கும்) விருந்தினர் வருகையாகட்டும். அதற்கு மேல், மற்றவர் பேசுவதை உன்னிப்பாக கவனிக்க முடிவதில்லை. உடனே என் குரங்கு மனம், வேறு ஏதாவது ஒரு திசைதிருப்பலை எதிர்பார்க்கிறது. அதற்காகவே இருக்கிறது செல்பேசி. நம் பக்கத்தில் இருப்பவருக்குத் தெரியாமல் பேஸ்புக்கை திறந்து பார்த்தாலும், எப்போதும் ஏதாவது ஒரு பஞ்சாயத்தது இருக்கும் இடத்தில், அப்போது ஒன்றுமே இருக்காது. அந்தச் சமயத்தில் தான் மார்க் சுக்கர்பெர்க் நீங்கள் எல்லாம் படித்துவிட்டீர்கள் என்பார். என்ன செய்வது என்றே தெரியாது.

இப்போதெல்லாம் அந்த மாதிரி சமயங்களில், நான் ஏற்கனவே தேர்ந்தெடுத்து வைத்திருக்கும் இணையப் பத்திரிகைகளில் ஒன்றைத் திறந்து ஒன்றிரண்டு வரிகள் படிக்கிறேன். சில நொடிகளில் ஒரு குற்ற உணர்ச்சி வரும் – அருகில் இருப்பவர் பார்த்துவிடுவாரோ, இல்லை பேசுபவருக்கு நாம் மரியாதைக் குறைவாக செய்கிறோமோ என்று தோன்றவும் மீண்டும் கவனிக்க ஆரம்பித்துவிடுகிறேன்.
இதே இணைய அமர்வுகள் (ஜூம் காணொளிகள்) என்றால் பிரச்சனையில்லை. யாருக்கும் தெரியாமல், இரண்டாவது திரையில் சீட்டாடலாம் அல்லது இன்ஸ்டாகிராம் பார்க்கலாம்.

அதனால் தான் கேட்கிறேன் – இது எனக்கு மட்டும் தானா, உங்களுக்கும் இருக்கிறதா?. எல்லோருக்கும் இருந்தால் மகிழ்ச்சி தானே! எல்லோருக்கு என்றால் இது நாமெல்லாம் கடந்த மூன்று ஆண்டுகளால் பழகியதா? இல்லை, பொதுவாக நாமெல்லாம் எப்போதுமே செல்பேசியைப் பார்த்துக் கொண்டு சமூக வலைத்தளங்களில் உலாவிக் கொண்டிருப்பதால் வரும் கவனச் சிதறல் பிரச்சனையா – அதற்குக் காரணமாக சொல்லப்படும் உடனடி மனநிறைவு (instant gratification) உளவியலா?

பின்குறிப்பு: இதுவே மருத்துவருக்காகக் காத்திருப்பு என்றால் இருக்கிறது கிண்டில் செயலி, அதில் படிக்காமல் இருக்கும் நூறு புத்தகங்களில் ஏதாவது ஒன்றைத் திறந்து வாசிப்பு. அது சுகமாக இருக்கிறது. நீண்ட காத்திருப்புகளில் எனக்குப் பிரச்சனையில்லை.

#Meetings #AttentionDeficit

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.