
Dr Kalaignar’s Memorial
சென்னை மெரீனா கடற்கரையில் முன்பு வரை இரண்டு சமாதிகள் இருந்தது – ஒன்று அறிஞர் அண்ணா அவர்களுக்கு மற்றொன்று டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு. 2016இல் டாக்டர் ஜெ.ஜெயலலிதாவை இழந்த தமிழக அரசு அவரையும் இங்கேயே அடக்கம் செய்தது. இந்த மாதம் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களும் இங்கேயே அடக்கம் செய்யப்பட்டார். தற்போது மெரீனாவில் நான்கு முன்னால் முதல்வர்கள் நீண்ட உறக்கத்தில் இருக்கிறார்கள்! நால்வரும் தமிழக மக்களின் நினைவில் என்றேன்றும் இருப்பவர்கள்.

இன்று கலைஞரின் சமாதிக்குச் சென்றிருந்தேன். மக்கள் வரிசையாக வந்த வண்ணம் இருந்தனர். சமாதி மேடை அழகான மஞ்சள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. வருவோர் அனைவரும் செல்பேசியில் படம் எடுத்துக் கொண்டிருந்தனர், அது அவர்களின் அன்பைக் காட்டியது, அதில் சிலர் தம்படம் (செல்பி) எடுத்துக் கொண்டிருந்தனர், அது தனிப்பட்டோர் விருப்பம் என்றாலும் இறந்துச் சில நாட்களே ஆகித் துக்கம் குறையாத தருணத்தில் அப்படிச் செய்வது மரியாதை குறைச்சலாக எனக்குப்பட்டது – அதனால் நான் தவிர்த்துவிட்டேன்.



கலைஞர் மறைந்த ஆகஸ்ட் 7ம் தேதி என் பேஸ்புக் பக்கத்தில் நான் எழுதியது கீழே:
அயராது உழைத்துவிட்டு உறங்குகிறார் கலைஞர். அவரின் உழைப்பிலிருந்து, அவருக்கு இருந்த தமிழ்க் காதலிருந்து நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய நல்லவைப் பல. அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்.
அவரை இரண்டு முறை நேரில் பார்க்க எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. ஒன்று 2005இல் தமிழில் மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2003 வெளியிடல் நிகழ்ச்சியில் அதே மேடையில் பேச (செயல் முறை விளக்கம் அளித்தேன்). இரண்டாவது 2010இல் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், இணையத் தமிழ் மாநாட்டின் வேண்டுகோளுடன்.



