திரு.சுந்தர ராமசாமி அவர்களின் “ஒரு புளியமரத்தின் கதை” நாவலுக்கு அடுத்து அவரின் இந்த சிறுகதைத் தொகுப்பைப் படித்தேன். அபாரம்.

ஒரு எழுத்தாளனால் இப்படியெல்லாம் கூட வாசகனை கவர்ந்துவிட முடியுமா?. அதற்கு சாட்சி இந்த சிறுகதைகள். நிச்சயம் படிக்கவேண்டிய கதைகள் இவை.

1950களில் அவரால் எழுதப்பட்ட இந்த பத்து கதைகளை ஒரு புத்தகமாக “அக்கரைச் சமையல்” என்ற தலைப்பில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. பத்து பதினைந்து பக்கங்கள் போகும் ஒவ்வொரு கதையும் ஒரு திரைப்படமாக எடுக்கலாம், பின் வந்த பலத்தமிழ் திரைப்படங்களில் இதன் தாக்கத்தை தேடினால் நம் காணலாம். கதையில் வரும் கதாபத்திரங்களுக்கு தனியாக ஒரு அறிமுகமோ விளக்கமோ கிடையாது. எடுத்தவுடனேயே காட்சியின் நடுவில் நாம் இருக்கிறோம், உரையாடல்கள் நடக்கிறது, கதை ஓட ஆரம்பிக்கிறது, நாமும் அதோடு ஓட வேண்டியுள்ளது. அப்படி இருந்தாலும் ஒவ்வொரு கதை முடியும் போதும் நாம் அந்த கதையின் நாயகன்/நாயகியாகவே வாழ்ந்துவிடுகிறோம் என்பதில் ஐயமில்லை; சில கதைகளில் நம்மை அறியாமல் அழுதும் விடுகிறோம்.

அக்கரைச் சீமையில் – அன்றைய ஆப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின் கதை.

அடைக்கலம் – மணிமேடை ஜங்ஷனில் பஸ்ஸுக்காக காத்திருக்கும் ஒரு பாட்டி. இது அவளின் கதையல்ல.

முதலும் முடிவும் –  அழகு என்ற சிறுமியும் புதுப் பணக்காரர் ஆறுமுகப் பிள்ளையின் பங்களா வீடும்.

பொறுக்கி வர்க்கம் – ஓட்டல் வாசலில் எச்சில் தொட்டியும், அங்கே வரும் பொறுக்கிகளும்.

தண்ணீர் – ஊர் பெரிய குளமும் அதை நம்பியுள்ள விவசாய இளைஞர்களும், நீர் தெக்கியிருக்கும் அணையும், ஊர் கோயில் திருவிழாவும்.

உணவும் உணர்வும் – பசியின் கொடுமையை ஒரு குழந்தையின் மூலமாக சொல்லும் கதை. நம் நெஞ்சைப் பிழியும் சோகம்.

கோவில் காளையும், உழவு மாடும் –  பழைய கோவில் பண்டாரனும், வெளியூர் பாதையருகே தாகம் தீர்க்க கிணறு வெட்டிய கிழவனும்.

கைக்குழந்தை – அன்பான கணவன் மனைவிப் பற்றிய கதை. ஆபீஸில் வேலைச் செய்யும் அப்பாவியான சாமுவும், அவரின் மனைவி ராஜி எப்படி அவரை காய்ச்சல் போது பார்த்துக் கொள்கிறாள் என்பது தான் கதை.

அகம் – சிறுமியின் பார்வையில் வெளியூரில் இருக்கும் அப்பாவின் பிரிவும்; அவளின் அம்மாவும், அந்த ஊரின் டாக்டர் மற்றும் அவரின் பச்சைக் கார்.

செங்கமலமும் ஒரு சோப்பும் – கிருமிகளை ஆராய்ச்சி செய்யும் செங்கமலமும், அவளின் வேலைக்காரி கௌரிக்குட்டியும், வீட்டில் இருந்த சோப்பும்.

 

 

 

 

Categorized in:

Tagged in:

,