AI Has Broken Essay Writing. What Comes Next?, A post in Tamil

கட்டுரைகளைத் தாண்டி, உண்மையான கற்றலை அளவிடும் நேரம் வந்துவிட்டது
கட்டுரைகளைத் தாண்டி, உண்மையான கற்றலை அளவிடும் நேரம் வந்துவிட்டது

இன்றைக்கு வந்துள்ள நியூயார்க் டைம்ஸ் (New York Times) கட்டுரையான “Student Cheating Is Becoming Impossible to Detect in an A.I. Era”, உலகம் முழுவதும் மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கும் விஷயத்தைப் பற்றி அலசுகிறது.

மாணவர் எந்த அளவுக்குப் படிக்கிறார்கள், படித்ததைப் புரிந்துகொண்டுள்ளார்கள் என்பதை ஆசிரியர் கணிக்க இருக்கும் ஒரு சிறந்த வழி, ஒரு தலைப்பைக் கொடுத்து அதைப் பற்றி மாணவரைக் கட்டுரை எழுதச் சொல்வது.

நம் ஊரில் பரீட்சைகளை, பரீட்சை முறைகளை நாம் திட்டிக்கொண்டே இருப்போம்; அது எல்லாமே மனப்பாடம் செய்வதை ஊக்குவிக்கும் காலனிய ஆதிக்க முறை எனச் சொல்லுவோம். அதோடு அமெரிக்காவில், ஐரோப்பாவில் அதிக அளவில் பரீட்சைகள் கிடையாது, கட்டுரை எழுதுதல் முறையை, செய்முறையைத் தான் அவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்று பெருமையாகச் சொல்லுவோம். இதையே வெளிநாட்டிலிருந்து கிறிஸ்துமஸுக்கு வரும் ஒன்றுவிட்ட சகோதரி சொல்லக் கேட்டு நம்மூர் நிலையை நினைத்து வேதனைப்படுவோம். அடுத்த நாள் காலை நாளிதழில் ஐஐடி (IIT) தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவியின் படத்தைக் காட்டி நம் மகனைத் திட்டுவோம்.

இப்போது அந்த “சிறந்த” முறையான கட்டுரை எழுதுதலே அர்த்தமில்லாமல் போயிருக்கிறது. காரணம், எந்தத் தலைப்பைப் பற்றியும், தங்களுக்கு நன்கு எழுதத் தெரிந்தும், தெரிந்த பாடமாக இருந்தாலும், சோம்பேறித்தனத்தால் மாணவர் செய்யறிவையே எழுதச் சொல்லிக் கொடுத்துவிடுகிறார்கள்.

ஏ.ஐ. (AI) எழுதிய கட்டுரையை மாணவர் எழுதவில்லை என்பதைக் கண்டுபிடிக்கப் பல மென்பொருள்களைப் பல நிறுவனங்களும் அமெரிக்காவில் தயாரித்து விற்கின்றனவாம். குழந்தையைக் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டுகின்றன.

இதற்கு என்ன தீர்வு? எனக்குத் தெரிந்து, அடுத்த சில ஆண்டுகளுக்கு இதற்குத் தீர்வுகள் கணினித்துறையிலிருந்து வர வாய்ப்புகள் குறைவு; அவர்களின் நோக்கம் இன்னும் சக்திவாய்ந்த ஏ.ஐ.களை உருவாக்குவது. அதனால், இதைக் கண்டுபிடிக்கும் எந்தச் செயலியும் உதவாது என்பதை ஆசிரியர் முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும். அடுத்தது, இந்த முறையைத் தாண்டி வேறு எப்படிப் பரிசோதிப்பது என்பதைப் கல்வித்துறை வல்லுநர் யோசிக்க வேண்டும்.

என்னைக் கேட்டால் கட்டுரை எழுதுதல் என்பதை முழுமையாக ஒழித்துவிடலாமா? அப்படித் தேவையென்றால், வகுப்பிலேயே இருபது முப்பது பக்கங்கள் கொண்ட ஒரு நூலைக் கொடுத்து, அங்கேயே ஒரு கட்டுரையை அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் கையிலேயே எழுதச் சொல்ல வேண்டும்; அல்லது ஓர் ஐந்து நிமிடங்களில் பேசச் சொல்ல வேண்டும். இவையெல்லாம் என் எளிய யோசனைகளே; இந்த விஷயத்தைத் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.

நீங்கள் பள்ளி அல்லது கல்லூரி ஆசிரியராக இருந்தால், இந்தச் சூழ்நிலையில் உங்கள் அனுபவம் என்ன, இதை எப்படிச் சமாளிக்கிறீர்கள் எனத் தெரிந்துகொள்ள ஆவல்; பகிர்ந்துகொள்ளவும். நன்றி.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading