பொதுவாகக் குறுங்காணொலிகள் (ரீல்ஸ்) பார்ப்பது நம் உள்ளத்திற்கும் சேமிப்பிற்கும் தீங்கு. நேர விரயமும் செலவும் செய்யவே உருவாக்கப்பட்டவை இந்தக் குறுங்காணொலிகள் என்ற கூற்றில் உண்மை இருக்கிறது.
ஆனால், ஒரு குறுங்காணொலியால் நடந்த சிறு நன்மை இந்தக் கதை.
போன வாரம் சென்னையில் கிடைக்கும் துரித உணவுகளைப் பற்றிப் பிரபல ஓடை (யு-ட்யூப் சானல்) ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மயிலாப்பூரில் கபாலீசுவரர் கோவிலுக்கு அருகில் விற்கப்படும் ஆரோக்கியமான சுண்டல்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
சில நாட்களுக்கு முன்னர் அங்கே சென்று வாங்கி வந்து சாப்பிட்டுப் பார்த்தேன். கடையெல்லாம் கிடையாது. பிச்சுப்பிள்ளை தெருவில் லலிதா ஆயுர்வேதிக் ஏஜென்சிஸ் கடைக்கு முன்னர் தெருவில் ஒரு சிறிய மேசை போட்டு விற்கப்படுகிறது. நல்ல கூட்டம். பல நிமிடங்கள் வரிசையில் நின்று வாங்கி வந்தேன். மாலை ஆறு மணியில் இருந்து ஒரு மணி நேரம் மட்டுமே இங்கு விற்பனை.

பல வகையான சுண்டல்கள் தனித்தனியாகக் கிடைக்கின்றன. நான் வாங்கியது எல்லா வகையையும் கலந்தது. ஒரு பொட்டலம் எழுபது ரூபாய். மாலை நேர இடைப்பலகாரமாக இருவர் சாப்பிடும் அளவு தாராளமாக இருந்தது. நல்ல சுவையாக இருந்தது. அதிகமான உப்போ, எந்தவித மசாலாக்களோ இல்லை. சுண்டல் (Sundal) சமைக்கப்பட்டு நேரம் ஆகியிருக்கும் என நினைக்கிறேன்; அதோடு நான் வீட்டிற்கு வந்து சாப்பிடவும் நேரமாகிவிட்டது. அதனால் ஆறிப் போய் இருந்தது. மைக்ரோவேவ்வில் (Microwave) சுட வைத்துச் சாப்பிட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
சுண்டலோடு ஒரு கோப்பை பருத்திப் பாலும் வாங்கி வந்தேன். அதன் விலை ஐம்பது ரூபாய். சுண்டலை விட அது இன்னும் சுவையாக இருந்தது. தினமும் வேறு வேறு விதமான பாயசம் கிடைக்கும் என்று நான் பார்த்த குறுங்காணொலியில் சொல்லியிருந்தார்கள்.
அடுத்த முறை மயிலாப்பூர் கோயில் தரிசனத்தை முடித்துவிட்டு, இந்தச் சுண்டலை ஒரு கை பார்த்துவிடுங்கள்!
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

