வீட்டில் உள்ள பெரியவர்களின் பாதுகாப்பிற்கு ஒரு எளிய வழி

A simple smart camera installed in a modest Chennai apartment helps a middle aged Tamil woman in a saree stay connected, showing how a device costing around Rs 3000 can bring peace of mind when caring for loved ones at home.
A simple device costing around Rs 3000 can bring peace of mind when caring for loved ones at home

உங்களது வீட்டில் வயதானவர்கள் அல்லது உடல்நலம் குன்றியவர்கள் தனியாக இருந்தால் இந்தப் பதிவு உங்களுக்கு.

சமீபத்தில் நண்பர் ஒருவரைப் பார்த்தேன். அவர் வருத்தப்பட்டுக் கொண்டே சொன்னார், “உடல்நிலை சரியாக இல்லாத என் மனைவியைத் தனியாக வீட்டில் விட்டுவிட்டு வெளியில் வேலைக்கு வருவது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது” என்று.

“இந்தச் சமயம் மனைவி எப்படி இருக்கிறார், என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று ஒரு நாளில் பலமுறை அவரையே செல்பேசியில் அழைப்பது சிரமமாக இருக்கிறது. பல சமயங்களில் மனைவி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் அல்லது உறங்கிக் கொண்டிருக்கிறார்; அப்போது நான் செல்பேசியில் அழைத்தால் அவரது தூக்கம் கெட்டுப் போய்விடுகிறது. என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்றார்.

தொடர்ந்தவர், “அவசரம் என்றால் பக்கத்து வீட்டில் இருப்பவர்களைப் பார்த்துவிட்டு வரச் சொல்கிறேன், அதுவும் எவ்வளவு முறைதான் அவர்களை அப்படிச் சொல்ல முடியும்?” என்று என்னிடம் ரொம்பவும் வருத்தப்பட்டுக் கொண்டார்.

உடனடியாக எனக்கு ஓர் எளிய யோசனை தோன்றியது. இணையத்தில் மிகக் குறைந்த விலையில், சீனத் தயாரிப்புச் சிறிய கேமராக்கள் கிடைக்கின்றன. ₹3000 ரூபாய்க்குக் குறைவாகவே இந்தப் கேமராக்கள் கிடைக்கின்றன. பெரிய அலுவலகங்களில் பார்ப்பது போலப் பல சிசிடிவி (CCTV) கேமராக்கள், அவற்றை இணைக்கக் கம்பிகள், இயக்கப் பதிவிகள் என்று எதுவுமே இதற்குத் தேவையில்லை. ஒரே ஒரு சிறிய கருவி மட்டுமே. இவற்றைச் சுவரில் படம் மாட்டுவது போல எளிதாக மாட்டிவிடலாம், அல்லது மேசை மீது வைக்கலாம். இவற்றை இயக்க மின்சாரமும், வைஃபை (WiFi) இணைய வசதியும் இருந்தால் போதும்.

இந்த மாதிரி ஒரு கேமராவை வாங்கி அவருடைய குடியிருப்பு வரவேற்பறையில் ஒரு பொதுவான இடத்தில் மாட்டச் சொன்னேன். முதல்முறை இணைத்துவிட்டால், நாம் எங்கிருந்தாலும் செல்பேசியிலிருந்தே இந்தப் கேமராவை இயக்கலாம். இந்தப் கேமராவைக் கொண்டு அங்கே என்ன நடக்கிறது என்று நாம் பார்ப்பதோடு, அங்கே என்ன பேசிக்கொள்கிறார்கள், என்ன சத்தம் வருகிறது என்பதையும் கேட்கலாம். கூடுதலாக நாம் பேசினால் அந்தப் கேமராவிலிருந்து நாம் பேசுவதும் அறையில் இருப்பவர்களுக்குக் கேட்கும். அதோடு 360 டிகிரி வசதி கொண்ட வகைப் கேமராகளைச் செல்பேசியிலிருந்தே ஓரளவு மேலே, கீழே, வலது, இடது பக்கம் திருப்பிக் கொள்ளலாம். இதனால் பல கோணங்களைப் பார்க்க, ஒரு கேமராவே போதும்.

₹3000 ரூபாய்க்குக் குறைவாகவே இந்தப் கேமராக்கள் கிடைக்கின்றன
₹3000 ரூபாய்க்குக் குறைவாகவே இந்தப் கேமராக்கள் கிடைக்கின்றன

அடுத்த ஓரிரு நாட்களில் நண்பர் இந்தப் கேமராவை வாங்கி அவரது வரவேற்பறையில் மாட்டிவிட்டார். இங்கே ஒன்றைக் கவனிக்க வேண்டும், நீங்கள் இத்தகைய கேமராவை மாட்டும் போது உங்கள் வீட்டில் யாருடைய நலனைக் கவனிக்க வேண்டுமோ, அவர் பொதுவாக எந்தந்த அறைகளில் இருப்பார் என்பதைக் கருத்தில் கொண்டு ஒரு பொதுவான இடத்தில் மாட்டுவது நல்லது. பொதுவாக அடுக்குமாடி குடியிருப்பு என்றால் ஒன்றோ இரண்டோ கேமராக்கள் போதும். நண்பரது வீடு மிகச் சிறியது, அதனால் ஒரே ஒரு கேமராவே அவருக்குப் போதுமானதாக இருந்தது.

கேமராவை மாட்டி இரண்டு வாரங்களுக்குப் பிறகு நண்பரைச் சந்தித்தேன். அப்போது அவர் முன்பை விட நிம்மதியாகவே தெரிந்தார். “வெங்கட், இப்போதெல்லாம் நான் எங்கிருந்தாலும் மனைவி ஓய்வெடுக்கிறாரா, அல்லது சமைத்துக் கொண்டிருக்கிறாரா, என்ன செய்கிறார் என்று என்னால் செல்பேசியிலிருந்து பார்க்க முடிகிறது. ஏதாவது அவசரம் என்றால் அவரோடு இந்தப் கேமரா மூலமாகவே என்னால் பேசவும் முடிகிறது. என்னுடைய தேவைக்கு இது ஒரு வரப்பிரசாதமாகவே இருக்கிறது” என்று சொன்னார்.

இணைப்பில் இருக்கும் படம் இயற்றறிவு (Generative AI) உருவாக்கியது, ஒரு எடுத்துக்காட்டுக்காக மட்டுமே.

பின்குறிப்பு: இந்த மாதிரி கேமராகளை வீட்டின் உள்ளே வைக்கும்போது எல்லோருக்கும் தெரியும் இடத்தில் வைக்கவும். இதன் கடவுச்சொற்களைப் (Passwords) பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும். இந்த மாதிரி வசதிகளை வழங்கும் மாயஜாலமே தொழில்நுட்பம். இதைக் கொண்டு நல்லதைச் செய்யலாம், கெட்டதையும் செய்யலாம். அடுத்தவர் அனுமதி இல்லாமல், திருட்டுத்தனமாக வைப்பது சட்டப்படி குற்றம் என்பதை நினைவில் கொள்ளவும்.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading